Your cart is empty.
மஞ்சு
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் … மேலும்
“எம்.டி. வாசுதேவன் நாயரின் இந்த நாவல் காத்திருப்புகளின் கதை. காலமும் இடமும் மனங்களும் இந்தக் கதையில் காத்திருக்கின்றன. கோடை நாட்கள் குளிர் பருவம் வரக் காத்திருக்கின்றன. தன்னைத் தேடிவரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மலைப்பிரதேசம் காத்திருக்கிறது. ஒருபோதும் பார்த்திராத பளிங்குக்கண் தகப்பனுக்காக ஒரு சிறுவன் காத்திருக்கிறான். ஒருகாலத்தில் பார்த்துக் களித்த நீல நரம்புகள் துடிக்கும் முகத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள். ஒருமுறைகூடப் பார்த்துவிட முடியாத மரணத்துக்காக ஒரு மனிதன் காத்திருக்கிறான். காத்திருப்பின் தனிமையும் எதிர்பார்ப்பின் துயரமும் மூடுபனியாக அந்த மனிதர்களை, இடத்தை, காலத்தை மூடுகிறது. அந்த உறைபனிக்குள் உணர்வுகள் உருகிச் சொற்களாக உருமாறி மௌனத்தின் இசையுடன் பெருகுகின்றன. கதையின் ஓட்டம் வாசிப்பவர்களின் மனவெளியில் மஞ்சுப் படலமாகப் படர்கிறது.”
எம்.டி. வாசுதேவன் நாயர்
எம்.டி. வாசுதேவன் நாயர் (பி. 1933) எம்.டி. என்று கேரள சமூகம் நேசத்துடன் அழைக்கும் மாடத்து தெக்கேப்பாட்டு வாசுதேவன் நாயர், அன்றைய மலபார் மாவட்டம் பொன்னானி வட்டத்தைத் சேர்ந்த கூடலூர் கிராமத்தில் பிறந்தார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் வேதியியல் பயின்று பட்டம் பெற்றார். ‘மாத்ருபூமி’ இதழின் துணையாசிரியராகவும் பின்னர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் எனப் பல துறைகளிலும் இயங்கிப் புகழ்பெற்றவர். நாவல்கள் (9), சிறுகதைகள் (16 தொகுப்புகள்), நாடகம் (1), சிறார் இலக்கியம் (2), பயணக் கதை (1), நினைவுக் குறிப்புகள் (2), இலக்கிய, பண்பாட்டுக் கட்டுரைகள் (5) ஆகிய இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் பங்களிப்பு செய்துள்ளவர். கேரள சாகித்திய அக்காதெமி, சாகித்திய அக்காதெமி, ஞானபீடம் போன்ற அமைப்புகளின் உயர்ந்த விருதுகள் உட்பட 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். 2005இல் இந்திய அரசின் பத்மபூஷண் விருது எம்.டி.க்கு அளிக்கப்பட்டது. எம்.டி. அவரே இயக்கிய எட்டுப் படங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்குத் திரைக்கதை எழுதியுள்ளார். சிறந்த திரைப்பட இயக்குநராக மூன்று முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றதுடன் கதை, திரைக்கதைக்காகவும் இருபது முறை விருதுகள் பெற்றிருக்கிறார். ஏழு முறை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். திரைத்துறைச் சாதனையாளர்களுக்கான கேரள மாநில அரசின் உயர்ந்த விருதான ஜே.சி. டானியல் விருது இவருக்கு 2013இல் வழங்கப்பட்டது. தற்போது கோழிக்கோட்டில் வசிக்கிறார்.
ISBN : 9789352441044
SIZE : 13.8 X 0.4 X 21.4 cm
WEIGHT : 132.0 grams
வெங்கி
16 Oct 2023
எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற பெயர், முதன்முதலாக சினிமா திரைக்கதைகள்
மூலமாகத்தான் தொண்ணூறுகளில் எனக்கு அறிமுகமாயிற்று. கல்லூரிக் காலத்தில், கோவை
தியேட்டர் ஒன்றில் "சதயம்"பார்த்துவிட்டு அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தது இன்னும்
ஞாபகம் இருக்கிறது. அதன்பின்தான் அவர் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க
ஆரம்பித்தேன்.
மாடத்து தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர், 1933-ல், கேரளா பாலக்காடு மாவட்டத்தின்,
ஆனக்கரா பஞ்சாயத்தில் சிறிய கிராமமான கூடலூரில் பிறந்தவர். தன் இருபதாவது வயதில்,
நியூயார்க் ஹெரால்டு டிரிபியூன் பத்திரிகை நடத்திய உலகச் சிறுகதை போட்டியில் கலந்து
கொண்டு சிறந்த சிறுகதைக்கான பரிசு பெற்றார். 1958-ல், தன் 23-ம் வயதில் எழுதிய
நாவலான "நாலுகெட்டு"-க்காக கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றார். ஞானபீட விருதும்,
கேந்திரிய சாகித்ய அகாடமி விருதும், நாட்டின் உயரிய கௌரமான பத்மபூஷண்-ம்
பெற்றிருக்கிறார்.
எம்.டி சிறந்த திரைக்கதை ஆசிரியரும் கூட. இதுவரை 54 திரைக்கதைகள் எழுதியிருக்கிறார்
(ஏழு படங்களை இயக்கியுமிருக்கிறார்). சிறந்த திரைக்கதைக்காக நான்கு முறை தேசிய விருது
பெற்றிருக்கிறார்.
"மஞ்சு"வில் ரீனாவின் மொழிபெயர்ப்பு எனக்குப் பிடித்திருந்தது (சுகுமாரனின்
முன்னுரையும்). "மஞ்சு". 1983-ல் எம்.டி-யின் இயக்கத்தில் மலையாளத்தில் திரைப்படமாக
வெளிவந்திருக்கிறது.
***
ஜக்பீர் ஹிமாலயாவின், குமாயுன் மலையடிவாரத்தில் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் நகரம்
நைனிடால், கோடையில் சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகமிருக்கும் ஒரு மலை
வாசஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 மீட்டர்கள் உயரத்தில் இருக்கிறது. நகர்
நடுவில், சுமார் 2 கிமீ சுற்றளவில் கண் வடிவ அமைப்பிலான அழகான ஏரி ஒன்றிருக்கிறது.
அதனை ஒட்டி படகுத் துறை. மேலே குன்றில் பெரிய வெண்கல மணிகளுடன் நைனி தேவி
கோயில்.
விமலாவிற்கு 31 வயது. ஏரிக்கருகில் ஒரு ரெசிடன்சியல் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக
வேலை செய்துகொண்டு அங்கேயே தங்கியிருக்கிறாள். 1955-ல், தன் 21-வது வயதில்
சந்தித்து, காதலிக்க ஆரம்பித்த நண்பன் சுதிர்குமார் மிஸ்ராவின் மீள் வருகைக்காக கடந்த
ஒன்பது வருடங்களாகக் காத்திருக்கிறாள். 53 மைல்கள் தொலைவில் உருளைக்கிழங்கு
தோட்டங்களுக்கு மத்தியில்தான் அவள் வீடு. வீடு அவளுக்குப் பிடித்ததில்லை.
நோய்வாய்ப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக படுத்த படுக்கையாய் கிடக்கும் அப்பா.
ஆல்பர்ட் கோமஸுடன் உறவு வைத்துக்கொண்டு அடிக்கடி அவருடன் வெளியில் சுற்றக்
கிளம்பிவிடும் அம்மா. வீட்டு வேலைக்காரன் பீர்பகதூர் வழியாக தன் காதலன் பிரதீப் சந்திர
சர்மாவிற்கு காதல் கடிதங்கள் கொடுத்துவிடும் தங்கை அனிதா. இரவில் வீட்டிலிருந்து
வெளியேறி பஹாடிகளுடன் கஞ்சா புகைத்துக்கொண்டு சீட்டாடும் தம்பி பாபு. வீட்டின்
நினைவு எழுந்தாலே மனம் கசக்கிறது அவளுக்கு.
படகுத் துறையில்"மேஃப்ளவர்" படகை வாடகைக்கு எடுத்து ஓட்டும் 18 வயது புத்து,
விமலாவிற்கு பரிச்சயமானவன். அவன், தன் அப்பாவை இதுவரை பார்த்ததில்லை. அவன்
அப்பா ஒரு வெள்ளைக்காரர் என்று அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். எப்போதாவது ஒரு
கோடை ஸீஸனில் நகருக்கு வரும் வெள்ளைக்காரர்களில் அப்பாவும் இருப்பார் என்ற
நம்பிக்கையில் அவரின் வருகைக்காக அவரின் புகைப்படத்தை பையில் வைத்துக்கொண்டு
காத்திருக்கிறான் புத்து.
பள்ளிக்குப் பக்கத்திலேயே இருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கான காட்டேஜ் "கோல்டன்
நூக்"கில், அக்கோடையில் தனியாக வந்து தங்கும் சர்தார்ஜி, விமாலாவிற்கு நட்பாகிறார்.
அவருக்கு நுரையீரல் புற்றுநோய்; இன்னும் நான்கு மாதங்கள்தான் உயிரோடிருப்பார்.
இறப்பிற்காக காத்திருக்கிறார். இறப்பதற்கு முன் தனக்குப் பிடித்த, தன் நினைவுகளுடன்
பின்னிய பழைய இடங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார்.
***
"மரணம் மேடைப் பிரக்ஞை இல்லாத் ஒரு கோமாளி" என்று ஓரிடத்தில் உரையாடலில்
சொல்கிறார் சர்தார்ஜி. மற்றொரு சமயத்தில் கீழ்வரும் வரிகளை விமலா
நினைத்துக்கொள்கிறாள்...
"என் மரணத்தையும் என் பின்னவர் மரணத்தையும் நானே மரிக்கிறேன்...
என் வாழ்வையும் என் பின்னவர் வாழ்வையும்
நானே வாழ்கிறேன்..."
இக்தாரா இசைக்கருவியின் இசை, நாவல் முழுவதும் பின்னணி இசையாக வருகிறது.
மலையும், ஏரியும், பனியும், பருவமும், காலமும் பாத்திரங்களாக உடனிருக்கின்றன. "மஞ்சு"
ஒரு சிறிய நாவல்தான்; நீள்கதை அல்லது குறுநாவல் என்றும் கொள்ளலாம். ஆனால் அது
தரும் அனுபவம் அபாரமானது. காட்சிகளும், பசுமையும், உணர்வுகளும் வைகறைப்
பனியென மனதில் கவிபவை. பரபரப்புகளோ, ஓசைகளோ, சந்தடிகளோ அற்ற, வெகு
நிதானத்தில் நகரும் மௌனச் சலனங்களின் கவிதை.
நன்றி: வெங்கடேஷ் ஸ்ரீவாசகம் (வாசிப்போம் – தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல்
பக்கம்)
https://www.facebook.com/groups/437996733366658/user/100000021174731/
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்