Your cart is empty.
தண்ணீர்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் … மேலும்
ஜமுனா, சாயா, டீச்சரம்மா . . . ‘தண்ணீர்’, சமுதாய அமைப்பினால் கைவிடப்பட்டுத் தனித்து வாழும் மூன்று பெண்களின் கதை. சினிமா கதாநாயகியாகும் கனவு பொய்த்துப் போனதன் நிராசையை மட்டுமல்ல, தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் ஒதுக்கப்படுவதன் வலியையும் சுமக்கும் ஜமுனா. இராணுவத்தில் பணிபுரியும் கணவனைப் பிரிந்து பெண்களுக் கான விடுதியில் தங்கி பலவிதமான நெருக்கடிகளுக்கிடையில் பிழைக்கும் ஜமுனாவின் தங்கை சாயா. சீக்காளிக் கணவனுக் கும் வன்மத்தின் மறுஉருவமான மாமியாருக்கும் இடையே நம்பிக்கையின்றி துறவியின் மனவுறுதியுடனும் விரக்தியுடனும் காலந்தள்ளும் டீச்சரம்மா. நகரத்தில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரும்போது மனித இயல்புகளும் உறவுகளும் மாற்றம்கொள்வதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கிறது. சாதாரண மக்களிடம் தவிப்பு, கோபம், தந்திரம், மிருகத் தனமான சுயநலம், இவற்றுடன் தாராள குணமும் மேன்மையும் தென்படுவதை நாம் உணரலாம். தினந்தோறும் தண்ணீரைத் தேடி அலைந்து சேகரித்து தேவைக் கேற்ப சேமித்து வைப்பதற்கான போராட்டம் எல்லோரையும் போல ஜமுனா, சாயா, டீச்சரம்மா ஆகியோரையும் அலைக் கழிக்கிறது. இவ்வலைக்கழிப்பு ஜமுனா, சாயாவிடம் வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்வதற்கான தெளிவையும் உறுதியையும் ஏற்படுத்துவதுதான் ‘தண்ணீர்’ நாவலின் முதன்மைச் சரடு. ‘தண்ணீர்’ நகர்ப்புறச் சமூகத்தின் இயல்பைப் பற்றிய மகத்தான படைப்பு.
அசோகமித்திரன்
இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார் மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப் பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789352441525
PAGES : 144