Your cart is empty.
நேமிசந்திரா
பிறப்பு: 1959
நேமிசந்திராவின் ஆளுமை பன்முகத்தன்மை கொண்டது. மைசூரில் 1959இல் பிறந்த நேமிசந்திரா பிஇ, எம்எஸ் பட்டங்கள் பெற்றவர். இதுவரை அவர் வெளியிட்டுள்ளவற்றில் மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று வாழ்க்கை வரலாறுகள், ஒரு பயணக்கதை, ஓர் ஆய்வு நூல், மற்றும் மின்னணுவியல், கணிப்பொறி தொடர்பான ஒரு நூல் ஆகியன அடங்கும்.கர்நாடகச் சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ள நேமிசந்திரா தற்போது பெங்களூர் இந்துஸ்தான் ஏரோநாடிகல் நிறுவனத்தில் வடிவமைப்பு மேலாளர். அசலா என்னும் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்.
தற்போதைய கன்னடக் கதை உலகின் முக்கியமான பெயர்களில் ஒன்று நேமிசந்திரா. பெண்ணியக் கருத்தாடல் கதை களுக்கு ஒரு புதிய வடிவம் வழங்கிய இவர் பெண்ணையும் பெண் விடுதலையையும் வெறுமனே கோஷமாக்காமலும் ஆணையும் பெண்ணையும் மொண்ணையாக எதிரெதிர் நிலைப் பாத்திரங்களாகச் சித்தரிக்காமலும் ஆரோக்கியமான நிலைப்பாடுகளையும் அவற்றின் மானுடச் சாத்தியங்களையும் விஸ்தரித்தவர். சமூகம் கடைப்பிடிக்கும் ஒவ்வொன்றிலும் மனிதத்துவத்துக்கு எதிரான அம்சங்களை இழை இழையாகப் பிரித்துக்காட்டுவதோடு வேறொரு தளத்தில் அவற்றின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டும் கதையாடல் இவருடையது. சமூகம் பெண்ணின் தலையில் ஏற்றிவைத்துள்ள பொறுப்பு களைக் கூர்மையாக ஆராய்வதோடு காமம், காதல் பற்றி வெளிப்படையாகப் பேசும் இவரது கதைகள் வாழ்க்கைமீது கரிசனங்கொள்கின்றன.
Address: Nemichandra, 401, Vijay Towers, II Main, RPC Lay-out, Vijayanagar, Bangalore 560 040. Ph.: 080 - 23301906.
