Your cart is empty.
சல்மான் ருஷ்டி
பிறப்பு: 1947
அனிஸ் அகமது ருஷ்டி – நெகின் பட் இணையர்க்கு பம்பாயில் மகனாகப் பிறந்தார். பதினான்கு வயதுமுதல் லண்டன் ரக்பி பள்ளியிலும் பிறகு கேம்ப்ரிட்ஜிலும் படித்து இங்கிலாந்திலேயே வசித்தார். விளம்பர நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்தபின் முழுநேர எழுத்தாளரானார்.
கிழக்கத்திய ‘அதிசயக் கதைக’ளும் ஜேன் ஆஸ்டின், சார்ல்ஸ் டிக்கன்ஸ் போன்றவர்களின் எழுத்துகளும் தன் எழுத்தைப் பாதித்தன என்கிறார். மாய யதார்த்தம் என்றால் என்னவென்று தெரியாமலேயே தன் முதல் நாவலான ‘Grimus’இல் (1975) அந்தப் பாணியைக் கைக்கொண்டிருக்கிறார்.
பெரும்பாலும் வரலாற்றை அங்கதமும் மாய யதார்த்தமும் கலந்து புனைவாக்குவது ருஷ்டியின் பாணி. ‘Midnight’s Children’ (1981) அவரைப் பரவலாக அறியவைத்த நாவல். அதே ஆண்டு அது புக்கர் பரிசு பெற்றது. ‘The Satanic Verses’ (1988) என்ற நாவல் காரணமாக ஈரான் அதிபர் கோமேனி 1989ஆம் ஆண்டு இவருக்கு மரண தண்டனை விதித்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட தலைமறைவாக வாழ்கிறார். 2000இலிருந்து நியூ யார்க்கில் வசித்துவருகிறார். அங்கு ஓரிரு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 2007இல் சர் பட்டம் பெற்றார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட், 12ஆம் தேதி முஸ்லிம் இளைஞர் ஒருவரால் கொலைத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு கண்ணை இழந்தார்; இடது கை விரல்கள் சில செயலிழந்துபோயின.
இந்தத் தாக்குதலுக்குப் பின் வெளிவந்த நாவல் விஜயநகரம். இவருடைய நாவல் வரிசையில் பதினைந்தாவது.
இரண்டு மகன்கள் லண்டனில் வசிக்க, சில மணவிலக்குகளுக்குப் பிறகு தற்போது கறுப்பினக் கவிஞர், நாவலாசிரியர் எலிஸா கிரிஃபித்ஸுடன் நியூ யார்க்கில் வாழ்ந்துவருகிறார்.