Your cart is empty.
கத்தி - ஓரு கொலை முயற்சிக்குப் பிந்தைய சிந்தனைகள்
-மேலும்
இந்த புத்தகத்தின் இ-புத்தக பதிப்பை வாங்க
இ-புத்தகம் விலை : ₹ 180.00
-காலம் கடந்துவிட்டதால் இனி நடக்காது என்று எண்ணிக் கொண்டிருந்த கொடூரம், தண்டனை விதிக்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்தது. இதன் விளைவாக, மரண வீட்டுக்குள் நுழைந்து நிரந்தர ஊனத்தோடு வெளியேறிய படைப்பாளியின் அனுபவத்தைப் புனைவின் கூறுகளோடு விவரிக்கும் நூல் இது.
மரண தண்டனையோ கொலைத் தாக்குதலோ சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மையமான கருத்துச் சுதந்திரத்தை எவ்வித சமரசத்துக்கும் ஆளாக்கவில்லை என்பதைப் பதிவுசெய்கிறது இந்தக் கலை, இலக்கிய ஆவணம்.
புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையேயான கோட்டை அநாயாசமாக அழிக்கும் நடையும் படிமங்களும் கொண்ட இந்தத் தன்வரலாற்றுப் பிரதி நம்பகமான தமிழ் வடிவத்தில் உருமாறியுள்ளது.
ISBN : 9789361109270
SIZE : 14.0 X 1.0 X 21.0 cm
WEIGHT : 270.0 grams
ஷங்கர்ராமசுப்ரமணியன்
16 May 2025
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ நூலைப் பற்றிய பார்வை
“ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.
தனது காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சிப் பொழுதுகளின் உச்சத்தில் சல்மான் ருஷ்டி கொலைத் தாக்குதலுக்குள்ளாகி, தப்பிக்கும் நினைவுகளைப் பகிரும் புத்தகம் இது.
அவரைக் கொலைசெய்ய முயன்ற கொலையாளியைப் போலவே, நமக்கும் ‘கத்தி’ மிக அந்தரங்கமான நூல்.”
நன்றி: ஷங்கர்ராமசுப்ரமணியன் (அகழ் இணைய இதழ்)
முழுக் கட்டுரையையும் வாசிக்க:
https://akazhonline.com/?p=9465...
வருணன் ஜோ
5 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
மதிப்புரை
‘துயரை எதிர்கொள்ளும் பிரதி’
…முப்பத்துமூன்று ஆண்டுகள் அவர் உள்ளூற எதிர்பார்த்து பயந்த அத்தருணம் ஆகஸ்ட் 22, 2022 அன்று ஒரு கருத்தரங்க மேடையில் ஒரு கத்தியின் வடிவில், அதை ஏந்தியிருந்த ஒரு அடிப்படைவாத இளம் மூர்க்கனின் கரங்களின் மூலம் அவருக்கு வாய்த்தது… கொடூரமான அத்தாக்குதலில் இருந்து மிக மிக அதிர்ஷ்டவசமாக அவர், தனது இடது கண்ணைக் காவு கொடுத்து, உயிரை மீட்டுக் கொண்டார். இந்த அனுபவப் எழுத்தின் வழியாக ஒரு கொலை முயற்சிக்குப் பிறகான தனது சிந்தனைகளை, தனக்குள்ளாகவே தொகுத்து, நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்…
…இப்பிரதியை எழுதியதே அவரது தனிப்பட்ட வாழ்வில் துயர் கடத்தல் மற்றும் அதன் நீட்சியாக இயல்புக்கு மீளல் என்பதான செயல்பாடுதான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஒரே நேரத்தில் இப்படைப்பு தனி மனிதனாக பாதிக்கபட்ட ஒருவரது பகிர்வாகவும், உலகெங்கிலும் அதிகாரத்தாலும் அடிப்படைவாதத்தாலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிற எழுத்தாளர்களுக்கான ஆதரவுக் குரலாகவும் எழுகிறது…
…இந்த ஆண்டில் ரசித்து வாசித்த படைப்புகளில் ஒன்றாக ‘கத்தி’ இருக்கிறது.
நன்றி: வருணன் ஜோ (முகநூலிலிருந்து)
முழுப்பதிவையும் வாசிக்க:
https://www.facebook.com/story.php?story_fbid=26719397507647690&id=100000124107141&rdid=9LbKfykAQDYVka4y#
கேசவராஜ் ரங்கநாதன் (சோழராசு) (முகநூல் பதிவிலிருந்து)
20 Jan 2026
சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’
நூல் பரிந்துரை
‘மீண்டெழும் அனுபவத்தின் எழுத்துகள்’
…உலகம் முழுவதும் எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மத வெறி/சாதி வெறியர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள். இந்த புத்தகத்தை வாசிக்கும் போதே எனக்கு நினைவில் வந்தது எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் தான்! அவருடைய மாதொருபாகன் படைப்புக்காக சாதி வெறியர்களால் அச்சுறுத்தப்பட்டார்.
மிகவும் சமீபத்திய உதாரணமாக நடந்த சில கொலைகளும் இருக்கின்றன. கர்நாடகத்தில் கௌரி லங்கேஷ் மற்றும் எம்.எம்.கல்புர்கி. புனேவைச் சேர்ந்த நரேந்திர தாபோல்கர் என பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டார்கள். எந்த அளவிற்கு பகுத்தறிவிற்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும் எதிரான மனப் போக்கு இருந்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவங்களே சாட்சி. இந்த சீழ் பிடித்த மனநிலையின் ஒரு துளியை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது!..
நன்றி: கேசவராஜ் ரங்கநாதன் (சோழராசு)
(முகநூல் பதிவிலிருந்து)
முழுக் காணொலிக்கு:
ஷோபனா நாராயணன்
27 Jan 2026
ஷோபனா நாராயணன் (முகநூலிலிருந்து)
27 Feb 2026
12.08.2022, அமெரிக்காவின் செக்டாவ் பகுதியில் சல்மான் ருஷ்டி பங்கேற்ற ஒரு நிகழ்வில் மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்டு கொலை முயற்சிக்கு ஆளாகின்றார். அதிலிருந்து அவர் மீண்டு, தனது அனுபவங்களை, சிந்தனை ஓட்டங்களை எழுதி கொணர்ந்திருக்கும் நூல் கத்தி.
இது கட்டுரை தொகுப்பாகவும் அல்லாது, தன் வரலாறு என்னும் வகையிலும் முழுதாக பிடிபடாமலும் புனைவும் அல்லாத ஒரு நூல். இதில் ருஷ்டி சில இடங்களில் வாசகர்களிடம் பேசுகிறார் சில இடங்களில் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறார். எதுவாகினும் ஒரு பேராபத்திற்குள் விழுந்து மீளும் ஒரு மனிதனின் மனநிலை என்பது அனைத்து மனிதர்களுக்கும் ஒன்றாகவே இருக்கும். இவ்விடம் சம்பவம் ஒரு எழுத்தாளனுக்கு நிகழ்ந்துவிட்டபடியால் அவரால் அதை படம்பிடித்துக் காட்டிவிட முடிகின்றது.
இந்த புத்தகம் என்னென்ன கோணங்களில் எழுதப்பட்டுள்ளது? முதலில் அது கொலைமுயற்சி சம்பவத்தினை விவரிக்கவில்லை. பெரும்பாலும் மூளை அதிக அதிர்ச்சி, வலியினை மறக்கவே விரும்புமாறுதான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதனால் அவரால் மட்டுமல்ல நம் அனைவருக்குமே பெரிய விபத்து காயம் நிகழும் சரியான நொடியினை நினைவு கூறுவது சிரமம். ருஷ்டி அதன் பிறகு நடந்தவற்றினை சம்பவங்களின் நிகழ்வுப் பட்டியலாக முதல் அத்தியாயத்தில் விவரித்துவிடுகிறார்.
அடுத்து அவர் இதை இரண்டு கோணங்களில் அணுகுகின்றார். முதலாவது அவர் தனிப்பட்ட அனுபவமாக அவர் அதனை எப்படி எதிர் கொண்டார் - உடல் அளவிலும் மனதளவிலும் என்பது.
இரண்டாவதாக அவரது குடும்பம், சுற்றத்தார் இதனை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பது. இந்த கோணத்திற்கே அவர் முதல் முக்கியவத்துவம் தந்து, தனது மனைவி எலிசாவும் மகன் ஜாபர், மிலன் ஆகியோரும் அவரது தங்கை சமீனும் அடைந்த அதிர்ச்சியினை விவரிக்கின்றார். நோயால் தாக்கமுறும் மனிதனின் முதல் சிந்தனை இதுதானே? நம்மால் பிறருக்கு துன்பம், தொல்லை என்னும் எண்ணம் தான் முதலில் பாதிக்கப்பட்டவர்களை முடக்கும்.
உடலளவில் தான் அடைந்த துன்பங்களை விவரித்த போது அதில் பரிதாபம் கோரும் உணர்வில்லாது மெல்லிய நகைச்சுவை கலந்த விவரணைகளாகவே அவை அமைந்திருந்தன.
மனதளவில் அவர் மீள மேற்கொண்ட முயற்சிகளும், அடைந்த சிரமங்களுமே புத்தகத்தின் அடிநாதம் எனலாம். முதலில் அவருக்கு தார்மீக கோபம் வருகின்றது. ஏன் இப்படி நடந்தது என்பதை ஏற்க தவிக்கிறார். தனது அமைதியான வாழ்வு ஏன் இத்தனை ஆண்டுகள் கழித்து தகர்க்கப்படவேண்டும் என்ற கோபமும் ஆற்றமையும் முதலில் நிழலாடுகின்றன. பின் மெல்ல தன் வாழ்வில் நடந்தவற்றோடு இவற்றினை பொருத்துகின்றார். பத்வா என்னும் கொலையாணை சாத்தானின் குரல்கள் புத்தகத்திற்காக விதிக்கப்பட்ட பிறகு பல்லாண்டுகள் அவருக்கு கிடைத்த பாதுகாப்பு கிட்டத்திட்ட ஒரு சிறைவாசத்தினையொத்த ஒன்று என்பதும் அதன் காரணமாக பொதுமக்களே கூட தன்னை வெறுக்க நேர்ந்த தருணங்களையும் நினைவு கூருகின்றார்.
அமெரிக்க வாழ்வு அவருக்கு விடுதலையான உணர்வாக இருந்திருக்கின்றது. அது மறுபடியும் குலைக்கப்படவே, அதிர்வு அவரை உலுக்கியிருக்கின்றது. பிறகு தான் ஒரு நாத்திகன் என்ற போதும் அனைவரும் ஓர் இயல்புக்கு மீறிய சக்தி அவரைக் காப்பாறியதாக சொல்லும் போது தனது தர்மசங்கட நிலையினைக் கூட எழுதுகின்றார். அது மிக இயல்பான ஒரு உணர்ச்சிவெளிப்பாடு. அவர் அதை நேர்மையுடன் வெளிப்படுத்தியுள்ளார். அவர் அப்போதும் கடவுளின் இருப்பினை நம்பவில்லை. மதங்களை மறுக்கின்றார். தனது நிலைப்பாட்டிற்கு இறுதியாக ஒரு விளக்கமும் தருகின்றார்.
அடுத்தது தனது சாத்தானின் வசனங்கள் புத்தகத்திற்காக அவர் மகிழவும் அல்லாது அதே சமயம் அந்த நூல் எழுதியது தவறானது என்றும் சொல்லாது அதனைப்பற்றி பேசுவதையே தவிர்த்தார் எனலாம். புத்தகத்தின் பிற்பகுதிகளில் சில இடங்களில் மட்டுமே தனது சாத்தானின் வசனங்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தருகின்றார்.
கடைசியாக தன்னை குத்தியவனுடன் அவருக்கு நேர்ந்த உணர்வுகளை மிக நேர்மையாகப் பதிவு செய்திருகின்றார். முதலில் அவன் மீது கோபம் கொள்கின்றார். ஆனால் காலம் செல்லச்செல்ல அவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் போன்ற விவகாரங்களில் கூட ஆர்வமற்றவராக மாறுகின்றார். தனது வருங்காலம், குடும்பம் பற்றி மட்டுமே அக்கறை கொள்வது போதும் என உணர்கின்றார். அதே சமயம் அவனை மன்னித்தேன் என பொய்யான ஒரு தோற்றத்தினையும் அவர் தரவில்லை. எதார்த்தமான ஒரு மனிதன் தன் வாழ்வில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழும் போது எப்படி அதனை எதிர்கொண்டு மெல்ல மீண்டு வர இயலும் என்பதை மட்டுமே புத்தகம் ஆவணப்படுத்தியுள்ளது. எத்தனை வலி, ஏமாற்றம் என இருந்தாலும் ஒரு துயரத்திலிருந்து மனம் எப்படி மீள்கிறது என்பது மட்டுமே புத்தகத்தின் ஒட்டுமொத்த சரடும். அதேவேளை இறை சார்ந்த மதம் சார்ந்த விவகாரங்களில் மக்கள் எப்படி மந்தைகள் போல் மாற்றப்படுகிறார்கள், எங்கனம் கொடுஞ்செயல் புரியுமளவு துணிச்சல் வருகின்றது, மூளைச்சலவைகள் ஏன் எப்போதும் நாத்திகர்கள், மதவாதிகளை எதிர்ப்பவர்கள் பால் ஏவப்படும் வன்முறைக்காக நிகழ்த்தப்படுகின்றது என்பதை இந்த சம்பவம் வழி யோசித்தால் பயமாக இருக்கிறது. அங்கு குத்திய அந்த இளைஞனுமே பாதிக்கப்பட்ட விக்டிம் தான். ஒரு யூடியூபரின் போதனை அவனை, அவன் வாழ்வு இழக்குமளவு செய்துவிட செய்கிறது.
மரணத்தினை தொட்டு வரும் அனுபவம் என்ற போதும் அது கலைஞனின் விழி வழி ஒரு படைப்பாக வெளிப்படும்போது அது வாசிப்பவரிடம் கடத்தும் உணர்வுகள் தான் படைப்பின் வேற்ரி. அவ்வகையில் இந்த புத்தகம் நல்ல ஒரு வாசிப்பனுபவத்தினை தரும்.
புத்தகத்தின் நடை ஆரம்பத்தில் மிக கடினமாக, கவனம் எளிதில் திசை திரும்புமளவு அதிக விவரணைகள் கொண்டதாக இருந்த போதும் பக்கங்கள் செல்லச்செல்ல சுவாரசியம் கூடி விடுகிறது. ருஷ்டி குறிப்பிடும் கவிதைகள், புதினங்கள் போன்றவற்றைப் பற்றியே தனியே ஒவ்வொரு முறையும் தேடும் அளவு நிறைய தகவல்கள் அமையப்பட்ட புத்தகம். மொழிப்பெயர்ப்பு மிக நல்ல சரளமான ஒன்றாக அமைந்திருந்தது. ஆனால் நிச்சயம் சவால் நிறைந்த பணியாக இருந்திருக்கும்.
ஆரம்ப நிலை வாசகர்களை விட, வாசிப்பின் வழி வேறு பல விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம் என்னும் ரசனையுடையவர்களுக்கு உகந்த புத்தகமாக இருக்கும்.
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
விஜயநகரம் (இ-புத்தகம்)
-வரலாறும் மாய யதார்த்தமும் ஒன்றிணையும் இடமே சல்மான் ருஷ்டியின் நாவல் களம். தன் வரலாற்றுப் பார்வைய மேலும்


