Your cart is empty.
யஷவந்த சித்தால
பிறப்பு: 1938
யஷவந்த சித்தால
பிறந்தது 1938இல். கர்நாடகா வின் வடகன்னட மாவட்ட ஹனேஹள்ளியில். ஹனேஹள்ளி, குமட்ட, தார்வார் ஆகிய இடங் களில் கல்வி பயின்ற சித்தால, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் எம்இ படித்தவர். மும்பையில் பணியாற்றி ஓய்வுபெற்ற சித்தால, தற்போது அங்கேயே வசிக்கிறார். இவரது முதல் சிறுகதைத் தொகுதி 1960இல் வெளியானது. கிராமப்புறம், நகர் சார்ந்த இருவகைப் பின்புலங்களையும் தன் கதைகளில் நேர்த்தியாகச் சித்தரிக்கும் சித்தால கன்னடச் சிறுகதை இலக்கியத்தில் முக்கியமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர். இவரது தொடக்ககாலக் கதைகள் அப்பாவி மனிதர்கள் கொடூரமான எதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது நிகழும் துயரங்களைப் பேசின. இவர் கதைகளின் விவரிப்புகள் கவிதைகளில் வரும் படிமங்களின் செயல்பாடுகளைக் கொண்டவை. கன்னட இலக்கியத்தின் உன்னதக் கவித்து வத்தை யஷவந்த சித்தால, லங்கேஷ் இவர்களின் உரைநடைகளில் காணலாம் என்று யு.ஆர். அனந்தமூர்த்தி கருத்துரைத்துள்ளார். பிரான்ஸ் காஃப்காவ=ன் பாதிப்பு இவரிடம் நிறைய! சித்தா லின் பல கதைகளில் அச்சுறுத்தும் கனவுத் தன்மை அனுபவங்கள் இடம்பெறுகின்றன. தன் முதல் நாவலை 1964இல் வெளியிட்ட சித்தால இதுவரை நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் இரண்டிற்குமான புதிய இயங்கு தளங்களைத் தன் எழுத்தால் நிறுவிய சித்தால, கதையானால் சிறுமி (1980) சிறுகதைத் தொகுதிக்காக 1983ஆம் ஆண்டு மத்திய சாகித் திய அகாதமி விருது பெற்றார். அதுவரை இவர் எழுதிய ஐம்பத்தோரு சிறுகதைகளின் தொகுப்பு 2001இல் வெளிவந்தது. சமீபத்தில் (2001) ஒரு புதிய சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.
இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள கதையானாள் சிறுமி 1978ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இது கன்னடச் சிறுகதை தொடர் பான விவாதங்களில் மிக அதிகம் மேற்கோள்காட்டப்படும் கதைகளில் ஒன்று. இக்கதையில், வறட்டு முற்போக்கு வாதத்தின் அடிப்படையில் வாழ்வை எளிய மாதிரிகளுக்குள் அடக்கும் எழுத்து வகையுடன் யஷவந்த சித்தால படைப்பு ரீதியாக நடத்தும் விவாதம் நுட்பங்கள் நிறைந்தது. இக்கதையில் மூன்று தளங்கள். கதை சொல்லிக்கும் வாசகனுக்கும் இடையிலானது ஒன்று. இரண்டாம் தளம் கதைசொல்லியின் சொந்த வாழ்க்கை சார்ந்த தளம். மற்றொன்று கதையில் எழுதப்படும் கதையினது. இக்கதையில் இடம்பெறும் வாக்கியங்கள் ஒரு தளத்திலிருந்து மற்றொன்றுக்குக் கடந்து செல்லும் சூட்சுமத்தை அறியும் செயலே வாசிப்பு அனுபவமாகிறது. மனிதர்களின் மனோவியல் எதார்த்தங்களைத் தொழில் ரீதியான மனோதத்துவ படிப்பினைகளைக் கடந்த தளத்தில் யஷவந்த சித்தால தன் கதைகளில் மிகத் திறமையாக அலசியிருக்கிறார் என்பது விமர்சகர்கள் ஒருசேர ஒப்புக்கொள்ளும் கருத்து. கதையானாள் சிறுமியை வாசிப்பவர்கள் அதை உணரமுடியும்.
