அ. யேசுராசா
யாழ்ப்பாணத்தில் குருநகர் என்ற கடலோரக் கிராமத்தில் 1946 டிசம்பர் 30இல் பிறந்தவர்.
கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரம் (G.C.E. O/L) வரை, ஊரிலுள்ள சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையிலும், உயர்தரக் கல்வியைக் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். அஞ்சல் அதிபர், தந்தியாளர் (Postmaster & Signaller) சேவையில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார்.
கலை, இலக்கியம், ஏனைய பொது அறிவுத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர். யாழ். திரைப்பட வட்டம், யாழ். பல்கலைக்கழக புறநிலைப் படிப்புகள் அலகின் திரைப்பட வட்டம் என்பவற்றில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார்; பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் (1984 & 2003), மரணத்துள் வாழ்வோம் (1985 & 1996), தேடலும் படைப்புலகமும் (1987) ஆகிய நூல்களின் தொகுப்பாளர்களில் ஒருவர்; காலம் எழுதிய வரிகள் (1994) கவிதைத் தொகுதியின் தொகுப்பாளர்.
அலை (1975 – 1996) சிற்றேட்டில் முதலில் ஆசிரியர் குழுவிலும் – நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் 25ஆவது இதழிலிருந்து ஆசிரியராகவும் இருந்தார்; இளைய தலைமுறையினரின் வளர்ச்சியை இலக்காகக் கொண்டு கவிதை, தெரிதல் ஆகிய இதழ்களை வெளியிட்டு – அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மாற்றுப் பத்திரிகையாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த திசை வார ஏட்டின் (1989 – 1990) ஒரே துணை ஆசிரியராகவும் இருந்தார்.
கலை, இலக்கியங்கள் அனுபவ வெளிப்பாடாய் அமைய வேண்டுமென்பதிலும் கலை, இலக்கிய உலகில் அறம்சார்ந்த நிலைப்பாடு பேணப்பட வேண்டுமென்பதிலும் உறுதிகொண்டவர்.
தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் (சிறுகதைகள்) (1974 & 1989), அறியப்படாதவர்கள் நினைவாக . . .! (கவிதைகள்) (க்ரியா, 1984), தூவானம் (பத்தி) (2001), பனிமழை (மொழிபெயர்ப்புக் கவிதைகள் ) (2002), பதிவுகள் (பத்தி) (2003), குறிப்பேட்டிலிருந்து . . . (கட்டுரைகள்) (2007) ஆகிய நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.