Your cart is empty.

பியோதர் மிஹாய்லவிச் தஸ்தயேவ்ஸ்கி
பிறப்பு: 1964
பியோதர் மிஹாய்லவிச் தஸ்தயேவ்ஸ்கி (11 நவம்பர் 1821 – 9 பிப்ரவரி 1881) மாஸ்கோவிலுள்ள போஷேதோம்க் என்ற இடத்தில் பிறந்தார். தாயார் பெயர் மரியா பியோதரவ்னா நெச்சாயவா. தந்தையார் பெயர் மிஹாயில் அந்த்ரேவிச் தஸ்தயேவ்ஸ்கி. தஸ்தயேவ்ஸ்கியின் வீட்டில் மாலை வேளைகளில் இலக்கியக் கூட்டம் நடைபெற, சிறுவயதிலிருந்தே இலக்கியம், கலைகளின் மீது ஆர்வமும் மதிப்பும் கொண்டவராக வளர்ந்தார். 1837ஆம் ஆண்டு 15ஆவது வயதில் தஸ்தயேவ்ஸ்கி தனது தாயை இழந்தார். நிக்கலாயவ் ராணுவப் பொறியியல் நிறுவனத்தில் படித்து முடித்துவிட்டுப் பொறியாளராகப் பணியாற்றிய அவர், மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டும் பொருள் ஈட்டினார். 1840ஆம் ஆண்டு அவர் எழுதிய முதல் நாவலான ‘ஏழைமக்கள்’, பீத்தர்புர்க் இலக்கியக்கூட்டங்களில் பரவலாகப் பேசப்பட்டு அவருக்குப் புகழைத் தேடித்தந்தது. 1849ஆம் ஆண்டு பெத்ரஷாவ்ஸ்கி லிபரல் இலக்கியவியல் கழகத்தில் பங்குபெற்றதற்காக அவருக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கப்பட்டுப் பிறகு அது ஜார் மன்னன் முதலாம் நிக்கலாயால் நான்கு வருட சைபீரியக் கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. 1839ஆம் ஆண்டிலிருந்தே அவர் வலிப்புநோயால் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். விடுதலை பெற்றபிறகு ராணுவத்தில் பணியாற்றியவர், உடல்நலக் குறைவால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு பல பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1851ஆம் வருடம் மரியா திமித்ரியேவ்னா இசாயவா என்ற பெண்ணை மணந்தார். அந்தப் பெண் 1864ஆம் ஆண்டு இறந்துபோக, 1867ஆம் ஆண்டு அன்னா கிரிகோரியேவ்னாஸ் நீத்கினா என்ற பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு குழந்தைகள் – சோனியா, லூயூபவ், பியோதர், அலெக்ஸெய். தஸ்தயேவ்ஸ்கி, பிப்ரவரி 9ஆம் நாள் 1881ஆம் வருடம் மாலை எட்டு முப்பது மணிக்குக் காலமானார்.