Your cart is empty.
ஆர். ஷண்முகசுந்தரம்
பிறப்பு: 1917
ஆர். ஷண்முகசுந்தரம் (1917 – 1977) திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். 1942இல் ‘நாகம்மாள்’ நாவலை எழுதினார். ‘பூவும் பிஞ்சும்’, ‘பனித்துளி’, ‘அறுவடை’, ‘தனிவழி’, ‘சட்டி சுட்டது’, உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வசன கவிதை, நாடகம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்துள்ளார். ‘நாகம்மாள்’ மூலம் தமிழின் வட்டார நாவல் துறையைத் தொடங்கிவைத்த இலக்கிய முன்னோடி இவர். தன் தம்பி ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ‘வசந்தம்’ என்னும் இலக்கிய இதழைப் பல்லாண்டுகள் நடத்தினார். புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம், புதுமலர் அச்சகம் ஆகியவையும் இவர்கள் நடத்தியவை. இவரது மனைவி: திருமதி வள்ளியம்மாள்.