முந்தைய தொகுப்பைப் போலவே இந்தத் தொகுப்பின் கவிதைகளும் அகவயமானவை. நம்பிக்கை, அவநம்பிக்கை இரண்டுக்கும் மாறிமாறி பயணம் செய்வது இவரது கவிதைகளின் தன்மை.
பார்வைப்புலத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,
மனிதன் தான்தேர்வு செய்கிறோம் என்ற மாயைக்குள் வாழ்கிறான்;
ஆனால் அவன் தேர்வுகள் அனைத்தும் ஏற்கெனவே நுண்ணிழைகளால் சிறைபிடிக்கப்பட்டவை. வாழ்வு எப்போது சிறையாகிறது?
கம்பிகள் கண்ணுக்குத்தெரியாமல் போகும் தருணத்தில்.
"பார்வையற்ற ஒன்றும்
பார்வையுள்ள ஒன்றும்
இரட்டைக்கதவுகள்
நீளும் நுண்ணிழைகளில்
வாழ்வு சிறையாகிறது."
நாம் இருக்கிறோம்
ஆனால் முழுமையாக உணரப்படவில்லை
நமக்கே நம் இருப்பு சில நேரங்களில் மங்குகிறது. Heidegger-ன் Being and Nothingness நினைவூட்டும் வரிகள்.
யாரும் தள்ளவில்லை.
யாரும் வழிகாட்டவில்லை.
நானே — என்னை — இந்தப் பயணத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லும் கவிதையின் கடைசிவரி அதன் உயரத்தைக் கூட்டுகிறது.
"ஒலிகள் அடங்கிப்போன
பின்னிரவுகளில்
இருத்தலின் கனம்
இருந்தும் இல்லாமவ் போகும்
எதுவுமே நிரந்தரமாகத் தொலைவதில்லை
முடிவே இல்லை என்பது போல
நீண்ட ஒரு விரைவுப்பாதையில்
நானே பயணித்துக் கொள்கிறேன்."
சில கவிதைகள் வாசிக்க இனிமையானவை. சிலவற்றை கவிதையின் உள் நுழைந்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். பின்வரும் கவிதை இரண்டாம் ரகம்.
"தூல உரு இல்லாத வானம்
என்னைக் கோர்க்க ஒரு மொழி
அபத்தமாக வரையப்பட்ட பிரதிபிம்பம்
எண்ணங்களில் படியும் இசை
பியானோக்களில் படியும் தூசி
முடிவின்றி நீளும்
புயலின் நடுவே
உயிர்த்தெழும் யதார்த்தம்"
இவரது கவிதைகள் மனித இருப்பின் முரண்களான பார்வை–பார்வையின்மை, இருப்பு–இல்லாமை, மொழி–மௌனம் ஆகிய இருமைகளின் வழியாக நவீன மனிதனின் உளவியல் மற்றும் தத்துவச் சிக்கல்களை ஆராய்கின்றன. வெளிப்படையான சமூக, அரசியல் பிரகடனங்களைத் தவிர்த்து, நுண்ணிய உருவகங்கள், மௌனப் பிம்பங்கள் மற்றும் குறைந்த சொற்களில் அதிக அர்த்தம் உருவாக்கும் மொழிநடையை இவர் கையாள்கிறார். தத்துவ பாரமும் உளவியல் ஆழமும் கொண்ட கவிதைகள்.