தமிழில் வரலாற்றுப் புனைவுகள் தொடர்ச்சியாக எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சங்க காலம் தொட்ட வரலாற்றுப் பின்புலமும் கலாச்சாரமும் அப்புனைவுகளுக்கு நியாயம் கற்பிக்கப் போதுமானதாய் இருக்கின்றன என்றாலும் அப்புனைவுகள் வரலாற்றுக்கு எவ்வகையிலாவது நியாயம் சேர்த்துள்ளனவா என்ற கேள்வியையும் கூடவே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கல்கி, சாண்டில்யன் போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்கள் வரலாற்றிலிருந்து மக்கள் விரும்பத்தக்க ஒரு படைப்புக்குத் தேவையான கூறுகளை மட்டும் எடுத்துக்கொண்டு புனைவுகளைப் படைத்துள்ளனர். அதன் காரணமாகவே அத்தகைய வரலாற்றுப் புனைவுகளுக்கு மேலதிகமான எவ்வித இலக்கிய முக்கியத்துவமும் இல்லாமல் போய்விட்டது.
மாறாக, வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு அதன் வழியே சமகாலத்தையும் விசாரத்துக்குட்படுத்தும் படைப்புகள் தமிழில் வெகு சிலவே வெளிவந்திருக்கின்றன. அவற்றுள், கவிஞர் சுகுமாரன் எழுதிய 'பெருவலி'க்கு மிக முக்கியமான இடம் உண்டு.
முகலாயப் பேரரசர் ஷாஜஹானுக்கும் மும்தாஜுக்கும் பிறந்த முதல் பெண்ணான ஜஹனாராவின் பார்வையில் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. பாபர், அக்பரிலிருந்து ஒளரங்கசிப் வரை இந்திய வரலாற்றின் மீது தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்திய பேரரசர்களை விடுத்து பெரிதாகப் பேசப்படாத எந்தவிதமான நேரடியான வரலாற்றுச் சலனங்களையும் ஏற்படுத்தாத ஜஹனாரா போன்ற ஒருத்தியின் பக்கமிருந்து முகலாயப் பேரரசின் புதியதொரு கோணத்தைக் காட்டுகிறது இந்நாவல்.
அக்பர் காலத்தில் ஒரு சட்டம் இயற்றப்படுகிறது. அரச பரம்பரையில் ஆண் வாரிசுகளின் போட்டிக்குப் பங்கம் வராமலிருக்க பெண் வாரிசுகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட மாட்டாது. அத்தரும் பன்னீரும் மணக்கும் மாட மாளிகைகள் உண்டு. அரசிளங்குமரிகளுக்கு விலைமதிப்பற்ற பொன்னும் மணியும் கிடைக்கும். பேரும் புகழும் சுட்டு விரல் ஆணைக்குக் கட்டுப்பட்ட அம்பும் ஆளும் இருக்கும். காதலுக்கோ காமத்துக்கோ இடம் கிடையாது. தன் தாய்க்குக் கிடைத்த சுகம் தனக்குக் கிடையாது. மறுபக்கம் ஆண் வாரிசுகளுக்கோ கட்டுப்பாடே கிடையாது.
இந்தச் சூழலில் வளரும் ஒருத்தியின் பார்வையில் அரச ஆடம்பரத்துக்கும் அதிகார வேட்கைக்கும் அர்த்தம் என்னவாக இருக்கும்? பொதுப் பார்வை, அளவற்ற அதிகாரத்தை நோக்கிக் குவியும்போது அதே சூழலிலிருந்தும், பேரரசருக்கே ஆலோசனை கூறும் அறிவுக்கூர்மையும் பல்வேறு மொழிப்புலமையும் இருந்தும் மறுக்கப்பட்ட அதிகாரத்துக்கு ஆட்பட்ட ஒருத்தியின் பக்கமிருந்து எழுதப்பட்ட விதத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது இந்நாவல்.
வரலாற்றைப் பின்புலமாக வைத்து எழுதும்போது கிடைக்கும் எண்ணற்ற தகவல்களிலிருந்து எதை எடுப்பது எதை விடுப்பது என்ற எந்தவிதக் குழப்பத்துக்கும் ஆட்படாமல் சொல்ல வந்த கதைக்குத் தேவையான அளவுக்கு மட்டுமான தகவல்களை ஆங்காங்கே பொருத்தமாகக் கையாண்டவிதமும் ஜஹனாரா, பானிபட், ஒளரங்கசிப், ஷாஜஹான் உள்ளிட்ட குறைவான பாத்திரங்களைக் கொண்டே தீவிரமான உரையாடல்களையும் கட்டமைத்தவிதமும் தேர்ந்தெடுத்துக் கோத்த செறிவான மொழியும் நாவலைத் தவிர்க்கவியலாத படைப்பாக்குகின்றன.
ஷாஜஹானுக்கும் ஜஹனாராவுக்குமான உறவைப் பூடகமாகத் தொட்டுப் பேசுமிடத்தையும், வெளிப்படுத்தவியலாத காதலும் தாபமும்கொண்டு ஜஹனாரா புழுங்குவதைக் கனவுகள் வழியே காட்சிப்படுத்தும் உத்தியையும் ஆங்காங்கே தீற்றுக்களாகச் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக ஒளரங்கசிப்பைப் பற்றி கட்டியெழுப்பப்படும் பிம்பத்தையும் கவி சுகுமாரனின் தேர்ந்த புனைவுமொழிக்குச் சான்றாகக் கூறலாம்.
பின்குறிப்பில் கூறப்பட்டதைப் போல இந்நாவலுக்கு இருக்கும் சமகாலப் பொருத்தப்பாடு ஆச்சரியமளிக்கிறது. தவறவிடக்கூடாத படைப்பு. மிக நல்ல நாவல்.