இடுப்பில் வைத்துக் கொண்டால் இறங்க மறுக்கும் அழகுக் குழந்தை போல, இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துத் தான் நேற்று உறங்கச் சென்றேன்.
நேற்று நாயகி நிகழ்வில் , பரிசல் சிறு புத்தக்க் கடையில் பரமேசுவரி வாங்கியதை நான் கடன் வாங்கி வந்தேன்.
அம்பை , மலைக்க வைக்கிறார். எண்பது வயது எட்டியதற்கு அம்பை தனக்குத் தானே அளித்துக் கொண்ட அன்பளிப்பு எனப் பின்னட்டைக் குறிப்பு சொல்கிறது. வெகுமதி மிகுந்த அன்பளிப்பு தான் ஐயமில்லாமல்.
அம்பையின் மனது, அதிகாலையில் மலர்ந்த மலரின் புத்துணர்வோடும் கூட்டிலிருந்த பறக்க எத்தனிக்கும் வண்ணத்துப் பூச்சியின் அழுத்தமான வண்ணங்களோடும் ஆழ்கடலின் மீனை ஒத்தும் பனியடர்ந்த மலையின் தெளிந்த சலசலக்கும் சிற்றோடையைப் போலவும் இருப்பது வியப்புக்குரியது.
அனைத்தையும் எழுதிப்பார்த்து விடும் உத்வேகம் நம்மையும் தொற்றிக் கொண்டால் நாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் தான்.
பதினைந்து விதவிதமான கதைகள். ஒன்றைப் போல் இன்னொன்று இல்லை. வரலாறு , அறிவியல், ஆன்மிகம் எனத் தான் இதுநாள் வரை வாசித்தும் உற்றும் உணர்ந்த அனைத்தையும் அம்பை இக்கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால் , துருத்திக் கொண்டு நிற்காமல் இயல்பான அழகோடு பொருந்திப் போகின்றன.
பேய்க்கதை, அறிவியல் புனைவு, நடனம் இசை குறித்த கதை, பெண்களின் உணர்வுகளைப் பேசுபவை என கலைடாஸ்கோப் தொகுப்பு இந்தப் புத்தகம்.
அம்பை , உங்களுக்கு எண்பது வயதா? இந்தத் தொகுப்பை வைத்து உங்கள் வயதைக் கணிக்கச் சொன்னால் முப்பதிரண்டு வயது தான் ( அதென்ன 32

)
எழுத்தில் வாழ்பவர் நீங்கள்.வாழ்வாங்கு வாழ்வீர்கள்.