Your cart is empty.
தி. ஜ. ர
பிறப்பு: 1901-1974
"தி.ஜ.ர. என்றழைக்கப்பட்ட திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன் (1901-1974) தமிழ் மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, புத்தகச் சுருக்கம் என இலக்கியத்தின் பல துறைகளில் ஈடுபட்டவர். மொழிபெயர்ப்பிலும் கட்டுரையிலும் அவரது கவனம் ஆழப்பதிந்திருந்தது. டைஜஸ்ட் இதழாக அறியப்பட்ட ‘மஞ்சரி’யில் அதன் தொடக்க முதல் 25 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தவர். சமரசபோதினி, ஊழியன், சுதந்திர சங்கு, சக்தி முதலானவை அவர் பணியாற்றிய மற்ற பத்திகைகள்.
தெளிவு, சொற்செட்டு ஆகியவற்றின் அடையாளம் தி.ஜ.ர.வின் எழுத்து. சந்தனக் காவடி (1938) முதல் நொண்டிக்கிளி உள்ளிட்டு பாப்பாவுக்கு காந்தி கதைகள் (1969) வரை சுமார் 36 நூல்கள் எழுதியவர். பொழுதுபோக்கு, எப்படி எழுதினேன், எழுத்தும் எழுத்தாளரும், மொழி வளர்ச்சி, வீடும் வண்டியும் ஆகியவை அவரது படைப்புகளுள் முக்கியமானவை. கூண்டுக்கிளி (ஹரிந்திரநாத் சட்டோபாத்யாய), ஒரே உலகம் (வென்டன் வில்கி), அபேதவாதம் (இராஜாஜி), குமாயுன் புலிகள் (ஜிம் கார்பெட்), காந்தி வாழ்க்கை (லூயி பிஷர்) ஆகியவை தி.ஜ.ர.வின் மொழிபெயர்ப்புகளில் முக்கியமானவை."

