Your cart is empty.
நித்ய கன்னி
நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவுகொள்ளவும் கதை சொல்லவும் காத்துக் கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுக்குள்ளும் மீண்டும் ஒரு தளத்திற்குள்ளும் அனுமதிக்கும் ஒரு படைப்பு நிச்சயம் எக்காலத்திற்குமான படைப்புதான். அவை உருவாக்கும் இடைவெளிகளையும் புதிய சிந்தனைகளையும் விருப்பமுள்ளவர்களும் சக்தி படைத்தவர்களும் நிச்சயம் கண்டடைவார்கள்.
எம்.வி. வெங்கட்ராம்
எம். வி. வெங்கட்ராம் (1920 - 2000) மணிக்கொடி எழுத்தாளரான எம்.வி.வி. கும்பகோணத்தில் 18 மே 1920இல் பிறந்தார். தந்தை வெங்கடாசலம், தாயார் சரஸ்வதி. பி.ஏ. (பொருளாதாரம்) மற்றும் ஹிந்தியில் விஷாரத் படித்தார். ‘சிட்டுக்குருவி’ என்ற முதல் சிறுகதை அவரது 16ஆம் வயதில் மணிக்கொடியில் வெளியாயிற்று. அப்போது அவர் கல்லூரியில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து கதைகள், நாவல்கள், குறுநாவல்கள், ஓரங்க நாடகங்கள், கவிதைகள், கட்டுரைகள் முதலியன எழுதினார். பிரபல பத்திரிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவை வெளிவந்தன. 1948இல் தேனீ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார். தமிழின் சிறந்த எழுத்தாளர்கள் அனைவரும் அதற்குப் பங்களித்தனர். பாலம் என்ற தமிழ் இலக்கிய இதழுக்கும் எம்.வி.வி. கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். ‘காதுகள்’ என்ற அவரது நாவல் அதில் தொடராக வெளியாயிற்று. சொந்தப் படைப்புகள் தவிர ஆங்கிலத்திலிருந்தும் ஹிந்தியிலிருந்தும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் பலவற்றைக் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் இருநூறுக்கு மேல் இருக்கும். 1993இல் சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். 14.1.2000 அன்று கும்பகோணத்தில் காலமானார்.