Your cart is empty.
புயலிலே ஒரு தோணி
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் ன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே. புதிய களத்தையும் காணாத காலத்தையும் அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.
ப. சிங்காரம்
ப. சிங்காரம் (1920 - 1997) ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய நாவல்களின் மூலம் இலக்கிய வாசகர்களிடம் அறிமுகமான ப. சிங்காரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரியில் கு.பழனிவேல் நாடார் அவர்களின் மூன்றாவது புதல்வராக 12.08.1920இல் பிறந்தவர். இவரது பாட்டனார் ப. குமாரசாமி நாடார் அவர்களும், இவரது தந்தையும் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1938இல் இந்தொனேசியா சென்று, சின்னமுத்து பிள்ளை என்பவரது கடையில் பணிபுரிந்தார். 1940இல் தாயகம் வந்து மறுபடியும் இந்தொனேசியாவில் மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அந்நேரம் தென்கிழக்காசிய போர் மூண்டது. போர் முடிந்ததும் இந்தொனேசிய ராணுவ அரசின் அனுமதி பெற்று, தமிழர் சிலருடன் சேர்ந்து பினாங்குக்குக் கப்பலில் சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்தார். 1946 செப்டம்பரில் இந்தியா திரும்பி, 1947 முதல் 1987வரை மதுரை தினத்தந்தி நாளிதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றார். 30.12.1997இல் மதுரையில் காலமானார். மதுரை ஒய்எம்சிஏ தங்குமிடத்தில் 50 ஆண்டுகள் தனியாக வாழ்ந்தார் ப.சிங்காரம். முடிவில், மதுரை நாடார் மஹாஜன சங்கத்தின் நாடார் மேன்ஷன் தங்குமிடத்திற்கு வந்த மூன்று மாதங்களில் காலமாகிவிட்டார். தனது மொத்தச் சேமிப்பான ஏழு லட்ச ரூபாயையும் நாடார் மஹாஜன சங்கத்திற்கு, ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிவிட்டார். தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை எனவும் கூறினாராம்.