Your cart is empty.
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் … மேலும்
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு உலகத்தின் இன்னொரு பரிமாணம் இது.
ISBN : 9789390224913
SIZE : 14.0 X 1.0 X 21.5 cm
WEIGHT : 205.0 grams
மணி மீனாட்சிசுந்தரம்
13 Feb 2024
உண்மைக்கு நெருக்கமான வரலாற்றுப் புனைவு
சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்’ நாவல் குறித்த பார்வை
மணி மீனாட்சிசுந்தரம்
தமிழ் எழுத்துலகில் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய,தனித்தன்மையான எழுத்து நடைக்குரியவர் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித். 'விஷ்ணுபுரம் விருது', 'மா.அரங்கநாதன் விருது' ஆகிய விருதுகளைப் பெற்றவர். சுரேஷ்குமார இந்திரஜித் புதுமை விரும்பி ; நவீன தமிழ் இலக்கியத்தில் நவீன முயற்சிகளைச் செய்து பார்ப்பவர். அலங்காரமும் தன் எடுப்பும் அற்ற எளிமையான சிறுசிறு வாக்கியங்களைக் கொண்டு கதை வளர்க்கும் எழுத்து நடைக்காரர்; கூறப்படும் நிகழ்வுகளினால் ஏற்படும் மன ஒருமையின் அடிப்படையில் வாசகன் பிரதியின் மையத்தை அறியும் வண்ணம் அமைந்திருப்பவை அவரது படைப்புகள்.
அவரது ' கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்' என்ற நாவல் தொண்ணூறு பக்கங்களில் அமைந்த நாவல்; அதற்குள் மூன்று குறுநாவல்களும் அடங்கும்; மாறுபட்ட முயற்சி அது. அவரது புத்தாக்க முயற்சியின் மற்றுமொரு நூலே 'அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்'.
1939ஆம் ஆண்டின் மதுரை- கோயில் நுழைவு வரலாற்றைப் புனைவு கலந்து நாவலாகத் தந்துள்ளார் சுரேஷ்குமார இந்திரஜித். எழுத்தாளரின் புனைவு, வரலாற்றுக் குறிப்புகள், 1939 சென்னை ஆலய நுழைவுச் சட்டம், ஆலய நுழைவு எதிர்ப்புப் பாட்டு நூல்கள், புகைப்படங்கள் எனப் பலவற்றையும் இணைத்து மிகக் குறைந்த பக்கங்களில் உண்மைக்கு மிக நெருக்கமான ஒரு வரலாற்றுப் புனைவைத் தந்துள்ளார் எழுத்தாளர்.
இந்நாவல் மதுரை ஆலய நுழைவுப் பின்னணியில் சங்கரலிங்க நாடாரை முன்வைத்து அன்றைய நாடார் இன மக்களின் வாழ்வு, உரிமை, வளர்ச்சி பற்றிய கோட்டோவியத்தை அளிக்க முயல்கிறது. அத்துடன் முற்போக்கான பிராமணப் பெண்ணான அம்பிகாவை முன்வைத்து, பழமைப் பிடிப்பில் மாறாத அன்றைய சமூக நிலையையும் படித்த பிராமணப் பெண்களின் உயர்வான சிந்தனைப் போக்கையும் வாசகருக்கு உணர்த்த முயல்கிறது.
சங்கரலிங்கம் நாடார், அம்பிகா, அவர் விரும்பும் பஞ்சு மில்லின் நிர்வாகியும் ஆங்கிலேயருமான எட்வர்ட் ஜென்னர் ஆகியோருடன் மதுரை ஆலய நுழைவுப் போராட்டத்தில் தொடர்புடைய வைத்தியநாத அய்யர், சாந்துபட்டர், மீனாட்சி கோயில் நிர்வாக அலுவலர் ஆர்.எஸ். நாயுடு, எதிர்ப்பாளர் நடேச அய்யர், வரலாற்று ஆய்வாளர் ஜெரால்டு நிக்கல்சன் என நிஜ மாந்தர்களும் நாவலில் வருகின்றனர்.
நில வளமும் பொருளாதார வளமும் கொண்டிருந்தாலும் கோயிலில் நுழையும் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியான சங்கரலிங்க நாடாருக்கும் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளரான அம்பிகாவுக்கும் ஏற்பட்ட நட்பு, சங்கரலிங்க நாடார் தொழிலில் முன்னேறவும், அம்பிகா தன் விருப்பப்படி எட்வர்ட் ஜென்னரை மணந்து வாழவும் துணை செய்வதை நாவல் விவரிக்கிறது.
விடுதலைக்கு முன்னும் பின்னுமான தமிழகத்தின் நிலையைப் போதுமான அளவில் உணர்த்தும் பெரும் பணியையும் செய்திருக்கிறது. மிக விரிவாக எழுதப்பட வேண்டிய களம், தரவுகளையும் புனைவையும் அருகருகே வைத்து மிகச் சுருக்கமான முறையில் நாவலாக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆலய நுழைவுப் போராட்டம், அதற்கு முன்னும் பின்னுமான நாடார் இன மக்களின் வாழ்வு, பெண்களின் நிலை, முன்னேறிய சமூகத்தின் போக்கு ஆகியவற்றைச் சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதில் நாவல் நம்மைக் கவர்கிறது.
நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள 'ருக்மணி தேவி அருண்டேலின்' புகைப்படத்தைப் பார்க்கும் வரையில் நாவலில் வரும் 'அம்பிகா' கற்பனைப் பாத்திரம் என்றே கருதினேன். நாவலில் சொல்லப்படுவதைப் போல, இந்நாவல்"இந்தியாவின் ஒரு முகத்தை அறிவதற்கு உதவியாக இருக்கும்".
கண்டிப்பாகப் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று என்பேன்.
நன்றி: வாசிப்போம் - தமிழ் இலக்கியம் வளர்ப்போம் முகநூல் குழுமம்
*