Your cart is empty.
அமிர்தம்
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் … மேலும்
தமிழ் நாவலுக்குக் கலை மேன்மையைக் கூட்டிய எழுத்தாளர்களில் ஒருவரான தி. ஜானகிராமனின் முதல் நாவல் ‘அமிர்தம்’. ‘கிராம ஊழியன்’ இதழில் 1944ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து 1948ஆம் ஆண்டு நூல் வடிவம் பெற்றது. தி.ஜா.வின் முதல் நாவல் என்ற தகுதியை மீறி அவரது பிந்திய நாவல்களில் வெளிப்படும் கலை நுட்பங்களின் ஆரம்பச் சாயல்களைக் கொண்டது என்ற பெருமையும் இந்த நாவலுக்கு உண்டு. ஆண் - பெண் உறவில் சக மதிப்பு, பரஸ்பர விழைவு, பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான தோழமை என்ற உறவுநிலைச் சித்திரிப்புகளுடன் தஞ்சை வட்டார மொழி, கிராமியப் பின்னணி, இயற்கையின் மானுடத் தோற்றம் என்று பிற்கால நாவல்களில் வெளிப்பட்ட இயல்புகளின் மூல உதாரணங்களை ‘அமிர்த’த்தில் காணலாம். கூறு மொழியால் பழையதாகத் தென்பட்டாலும் பேசு பொருளால் என்றும் புதிதாகத் தொனிக்கும் நாவல் இது.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921 - 1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன் ‘மோகமுள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். சிட்டியுடன் இணைந்து இவர் எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோகமுள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகிய படைப்புகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோகமுள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பதிப்பாசிரியர்: சுகுமாரன் (பி.1957) கோவையில் பிறந்தவர். அச்சிதழ், தொலைக்காட்சி, நூல் வெளியீட்டுத் துறைகளில் பணியாற்றியவர். கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். திருவனந்தபுரத்தில் வசிக்கிறார்.
ISBN : 9789386820907
SIZE : 13.8 X 0.7 X 21.0 cm
WEIGHT : 202.0 grams