Your cart is empty.
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
‘தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | சிறுகதைகள் | சிறுகதைகள் முழுத்தொகுப்பு |
‘தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் முக்கியமானவராகிய கு.ப. ராஜகோபாலன் (1902-1944) எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். பல்லாண்டு மேற்கொண்ட விரிவான தேடலில் இதுவரை கிடைத்த கதைகள் அனைத்தும் கால வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. கட்டுரைக்குள் கிடந்த கதையைச் சேர்த்தும் கதைக்குள் கிடந்த கட்டுரைகளை விலக்கியும் அவர் எழுதாத கதைகளை நீக்கியும் இத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு நூல்களையே ஆதாரமாகக் கொண்டும் இதழ்களில் இருந்து புதிய கதைகளைக் கண்டடைந்தும் நவீன இலக்கியப் பதிப்புகளுக்கு அவசியமான பின்னிணைப்புகளுடன் தெளிவாகச் செய்யப்பட்டுள்ள செம்பதிப்பு இது. ஆய்வாளருக்குப் பயன்படும் விரிவான பதிப்புரையும் வாசகருக்கு உதவும் வகையில் கதை நுட்பங்களை விளக்கும் ஆய்வுரையும் இப்பதிப்பின் சிறப்புகள்.
கு.ப. ராஜகோபாலன்
கு.ப. ராஜகோபாலன் (1902-1944) ‘ஆண் பெண் உறவுகளை, பால் உணர்ச்சிகளை அப்பட்டமாக உரக்க மனத்தையும் கண்ணையும் உறுத்துகிற மாதிரி சொல்வது இன்று பலருக்கும் கைவந்த கலையாக இருக்கிறது. ஆனால் அதையே சூக்ஷ்மமாகச் செய்கிற காரியம், கலையுணர்ச்சியுடன் முழுவதும் சொல்லாமல் சொல்லிவிடுகிற காரியம் கு.ப.ராவுக்கு மிகவும் கைவந்திருந்ததை இன்று படிக்கும்போதும் உணர முடிகிறது’ என்று க.நா. சுப்ரமண்யம் விதந்தோதும் கு.ப. ராஜ கோபாலன் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர். சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை, மொழிபெயர்ப்பு முதலிய துறைகளில் தீவிரமாக இயங்கிய கு.ப.ரா. 1934 முதல் 1944 வரை வெளியான பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதினார். அவரது கதைகள் முறையாகத் தொகுக்கப்பட்டுக் காலக்குறிப்புடனும் அவர் எழுதியவை என்னும் உறுதிப்பாட்டுடனும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. உரிய முன்னுரைகளும் அவசியமான பின்னிணைப்புகளும் இதில் உள்ளன. வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படும் வகையில் அகராதிகள் அமைந்துள்ளமை இப்பதிப்பின் சிறப்பு. தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் கவனம் பெற்ற, பெற வேண்டிய எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்துச் செம்பதிப்பாக வெளியிடும் வரிசையில் காலச்சுவடு பதிப்பகத்தின் இன்னுமொரு சுவடு இந்நூல். இதன் பதிப்பாசிரியராகிய பெருமாள்முருகன் (1966) தமிழ்ப் படைப்புலகில் சிறுகதை, கவிதை, நாவல் ஆகிய துறைகளில் இயங்கி வருபவர். கட்டுரை, பதிப்பு, அகராதியியல் ஆகியவற்றிலும் ஈடுபாடு உள்ளவர். இவரது மூன்று நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மாதொருபாகன்’ நாவல் ‘One Part Woman’ என்னும் தலைப்பில் பெங்குவின் பதிப்பக வெளியீடாக அண்மையில் வந்துள்ளது. ‘நிழல்முற்றம்’ நாவல் போலிஷ் மொழியில் இவ்வாண்டு வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது பெற்றுள்ளார் இவர்.
ISBN : 9789382033127
SIZE : 15.0 X 2.1 X 22.1 cm
WEIGHT : 716.0 grams