Your cart is empty.
எம்.எஸ் :காற்றினிலே கரைந்த துயர்
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் காலச்சுவடு 2016, மே இதழில் … மேலும்
மொழிபெயர்ப்பாளர்: அரவிந்தன் |
வகைமைகள்: மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் |
எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றி டி.எம். கிருஷ்ணா எழுதிய ஆங்கில கட்டுரை ஒன்று பெரும் விவாதத்துக்கும் தாக்குதலுக்கும் உள்ளானது. அந்தக் கட்டுரையின் மொழியாக்கம் காலச்சுவடு 2016, மே இதழில் வெளியானது. சமீபத்தில் டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ். வாழ்க்கை வரலாறு’ நூலின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீட்டில் கலந்துகொண்ட கிருஷ்ணா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாயின. இந்தப் பின்னணியில் டி.எம். கிருஷ்ணாவின் கட்டுரை தற்சமயம் நூல் வடிவம் பெறுகிறது, அவரது முன்னுரையுடன். எம்.எஸ். குறித்துப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பர்வையையும் பிம்பங்களையும் கேள்விக்குட்படுத்தும் இந்நூல் அந்த மகத்தான கலைஞரின் நிஜ ஆளுமையை வெளிக்கொணர்கிறது.
ISBN : 9789386820488
SIZE : 7.0 X 0.5 X 16.0 cm
WEIGHT : 54.0 grams
ரஞ்சனி பாசு(முகநூல் பதிவு
21 Oct 2023
பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் போது ஒரு நாள் குவிஸ் போட்டியில் நான் எதிர் கொண்ட கேள்வி “எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் இனிஷியலில் உள்ள எம்.எஸ். என்பதன் விரிவாக்கம் என்ன”. எனது மனம் வேகமாக வேலை செய்து “மதுரை சதாசிவம்” என்றது. அது தவறான பதில் என்பதை 16 வயது மனம் ஏற்க மறுத்தது. “மதுரை சண்முகவடிவு” என்பது தான் சரி என்பதை வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏன் அம்மா பெயர் இனிஷியல் ஆக இருக்கிறது என்ற கேள்விக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. தேவதாசி மரபில் அதுவே வழக்கம். என்ன? எம்.எஸ். பிராமணர் இல்லையா! எனக்கு தலையே சுற்றியது. அதுவரை அவர்களின் புகைப்படங்கள், பேட்டிகளின் வழியாக ஏற்பட்ட சித்திரம் கலைந்தது. எனது குழப்பம் இன்னும் பலருக்கு இருக்கும்.
பின்னாட்களில் அவர்களது வாழ்க்கை பற்றி வாசித்தபோது, அவரது பிரம்மாண்டமான கலைஉலகப் பயணமும், வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஆகியவற்றின் சுருதி சுத்தமான உச்சரிப்பும், எம்.எஸ். ப்ளூ நிறப்புடவை என்று ஒரு பிராண்ட் உருவாகும் அளவுக்கு மல்லிகைப்பூ, குத்துவிளக்கு, பட்டுப் புடவை என்ற பண்பாட்டு அடையாளத்துடன் சதாசிவம் அவர்களுடன் புகைப்படத்தில் மரியாதையான இடைவெளியுடன் அளவாகப் புன்னகைக்கும் எம்.எஸ். மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டார்.
“எம்.எஸ். காற்றினிலே கரைந்த துயர்” சிறு புத்தகத்தின் முன்னுரையில் “அவருடைய இசையையும் வாழ்வையும் இணக்கமான முறையில் இயைந்து நோக்க என்னால் இயலவில்லை” என்று டி.எம். கிருஷ்ணா கூறுகிறார். இசைக்கலைஞரான கிருஷ்ணாவால் எம்.எஸ். அவர்களின் கலையுலகப் பயணத்தைக் கூடுதலாக நெருங்க முடிந்திருக்கிறது. தேவதாசி மரபில் வந்த குடும்பத்தில் 1916ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த ஒரு பெண் தன் திறமையை நம்பி 20ஆவது வயதில் சென்னை நோக்கிப் பயணிப்பது அந்தக் காலகட்டத்தில் மிகத் துணிச்சலான முடிவு.
ஆனந்த விகடனில் பணியாற்றிய டி.சதாசிவம் அவர்களிடம் சரண் புகுந்தார் என்றே சொல்ல வேண்டும். இசைத்துறையில் தன் பயணத்தை முன்னெடுக்க அவரே சரியான வழிகாட்டி என்று எம்.எஸ். உள்ளுணர்ந்தார். மீராவாக, சகுந்தலா வாக திரையில் தோன்றினார். சதாசிவம் அவர்களின் மனைவியின் மறைவுக்குப் பின், திருமணம் புரிந்தார்.
பின்னர் எம்.எஸ். அவர்களின் இசை திட்டமிடப்பட்ட சட்டகத்துக்குள் அரங்கேறியது. “அதன் பிறகு நடந்ததை உருமாற்றம் அல்லது உளவியல் ரீதியான மறுகட்டமைப்பு என்று சொல்லலாம்” என்ற டி.எம். கிருஷ்ணாவின் கூற்றைப் புரிந்துகொள்ள நாம் சற்று அந்த காலத்தின் கலையுலக சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். தேவதாசி மரபில் வந்த, நடனக் கலைஞரும்வீணை தனம்மாளின் மகளுமான பால சரஸ்வதியின் வாழ்க்கை “பால சரஸ்வதி: அவர் கலையும் வாழ்வும்” என்ற தலைப்பில் டக்ளஸ்.எம்.நைட் அவர்களால் எழுதப்பட்டது. அதுவும் அரவிந்தன் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. பால சரஸ்வதி கலை நிகழ்ச்சிகளை நடத்தியதும், எம்.எஸ் சென்னை சென்றதும் ஒரே காலகட்டம். பால சரஸ்வதியும், எம்.எஸ். அவர்களும் மேற்கத்திய இரவு உடையில் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அழகான சான்று. அதற்கு முன்னர் 1930ஆம் ஆண்டு தேவதாசி ஒழிப்பு சட்ட முன்வரைவு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களால் முன் மொழியப்பட்டது. சதிர் என்றழைக்கப்பட்ட நடனக்கலை பிராமண மேலாதிக்கத்தால் பரதநாட்டியமாக சபாக்களில் நிகழத் துவங்கியது. எம்.எஸ். அவர்களின் கச்சேரிகள் தேவதாசி மரபை விடுத்து, அதிகார ஆதிக்க நேயர் விருப்பமாக மாற்றப்பட்டது. கச்சிதமான கச்சேரிகள் கலாபூர்வ சங்கீதத்தின் இடத்தைப் பிடித்தன. ஆனால் டி.எம். கிருஷ்ணா, வாழ்க்கை அனுபவம் என்பது பிசிறற்று, சகல ஒழுங்குகளுடனும் இருப்பதல்ல என்று விமர்சிக்கிறார்.அவர் ஒரு பெரும் புதிராகவும் இருந்தார் என்பது எத்தனை உண்மை!!
எம்.எஸ். எனும் அற்புதத்தை வேறொரு கோணத்தில் தரிசிக்கலாம். வைரத்தை எப்படி வைத்துப் பார்த்தால் என்ன . . . பரிபூரண ஒளி தானே.
குரலில் எதிரொலிக்கும் வாழ்வின் கதை
22 Nov 2024
குரலில் எதிரொலிக்கும் வாழ்வின் கதை
டி.எம். கிருஷ்ணா
(எம்.எஸ்.: காற்றில் கலந்த துயர் நூலுக்கான முன்னுரை)
அது இதமான கோடைக்கால மதியப் பொழுது. லாயிட்ஸ் சந்தில் அமைந்திருந்த கர்னாடக இசை ஜாம்பவான் செம்மங்குடி சீனிவாச அய்யரின் வீடு. விசாலமான அந்த வீட்டில் இசை வகுப்புக்காக நான் செல்லும்போதெல்லாம் மதியம் அங்கேயே சாப்பிடுவேன். அன்றும் அப்படித்தான். சாப்பிட்டு முடிந்ததும் செம்மங்குடிமாமா குட்டித் தூக்கம் போட்டார். அவர் எழுந்ததும் வகுப்பு தொடங்கியது. பைரவி ராகத்தில் அமைந்த ‘கொலுவையுன்னாடே’ என்னும்
தியாகராஜர் கீர்த்தனையைப் பயின்று கொண்டிருந்தேன். அவர் அப்போதுதான் அதை எனக்குச் சொல்லிக் கொடுத் திருந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடியபடி என்னுடைய கமகம் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துத் திருத்தங்கள் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் அனுபல்லவியை ஆரம்பித்தபோது எம்.எஸ். அம்மா மெல்ல அந்தக் கூடத்துக்கு வந்தார். உடன் அவருடைய உதவியாளர் ஆத்மநாதனும் வந்தார். எனக்கு வியப்பு, மலைப்பு. என்ன நடக்கிறது என்று புரியாமல் பாட்டை அப்படியே நிறுத்திவிட்டேன். மாமா கண்களைத் திறந்து பார்த்தார்.
மாமாவின் முகம் ஒளிர்ந்தது. தன் சிஷ்யையும் இசைக்குயிலுமான எம்.எஸ். சுப்புலட்சுமியை அன்போடு வரவேற்றார்.
வகுப்பில் குறுக்கிட்டுவிட்டோம் என்பதை உணர்ந்த எம்.எஸ். அம்மா தனக்கே உரிய பெருந்தன்மையோடு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். பாடத்தைத் தொடரும்படி வேண்டினார்.
மாமா என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, “நீ பாடுடா, பாரத் ரத்னாவுக்கு முன்னாடி பாட எனக்கு பயமா இருக்கு,” என்றார். “உங்களுக்கே பயமா இருக்குன்னா என் நெலமய யோசிச்சிப் பாருங்கோ மாமா” என்று துணிச்சலாகச் சொல்லிவிட்டேன். எல்லோரும் சிரித்தோம். மாமாவும் நானும் மீண்டும் கீர்த்தனையைப் பாடத் தொடங்கினோம். சில கணங்களில் எம்.எஸ். அம்மாவும் எங்களோடு சேர்ந்துகொண்டார். அந்தக் கீர்த்தனையைப் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் செம்மங்குடி மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கக்கூடும். கீர்த்தனை அவருக்குத் துல்லியமாக நினைவில் இருந்தது. அந்தக் கீர்த்தனை அவருடைய அறிவுத் தொகுப்பில் சேகரமான சங்கதி அல்ல. அவருடைய இதயத்தில் ஆழமாகப் பதிந்த விஷயம். அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே அப்படித்தான்.
திடீரென்று பார்த்தால் நான் நாட்டின் மகத்தான இசைக் கலைஞர்கள் இருவருடன் சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறேன். அந்த மதியப்பொழுதை என்னால் என்றும் மறக்க முடியாது. அரிதான அந்த நிகழ்வின் பதிவு எதுவும் என்னிடம் இல்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஏனென்றால் தூய்மையான, உண்மையான, உயிர்த் துடிப்புக் கொண்ட, உத்வேகமூட்டும் நினைவாக அது என் மனதில் தங்கியிருக்கிறது.
எம்.எஸ். அம்மா பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுத முடியுமா என்று கேரவன் இதழ் 2016இல் என்னிடம் கேட்டபோது மிகுந்த உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டேன். கர்னாடக இசையுலகில் இவ்வளவு பிரபலமான ஓர் ஆளுமையைப் பற்றி எழுதுவது சென்னையில் வசித்துவரும் கர்னாடக இசைக் கலைஞனுக்கு அவ்வளவு கடினமான வேலையாக இருக்க முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. நான் வரலாற்றாய்வாளன் அல்லன். எனவே எம்.எஸ். அம்மாவைப் பற்றிய புதிய தகவல்கள், அறியாத கதைகள், அரிய கடிதப் போக்குவரத்துகள் என்று நான் தேடிச் செல்லவில்லை. எம்.எஸ்.ஸின் வாழ்க்கை, அவருடைய இசை ஆகியவை பற்றிப் பல ஆண்டுகளாக அவருடைய நெருங்கிய நண்பர்கள், எண்ணற்ற இசைக் கலைஞர்கள், வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த ரசிகர்கள் ஆகியோருடன் பேசிவந்திருக்கிறேன். எனவே, எழுதுவதற்கான தடை தகவல்கள் அல்ல. அது தகவல்களைக் காட்டிலும் முக்கியமானது. அந்தத் தடை என்னுள் இருந்தது.
அவருடைய இசையையும் வாழ்வையும் இணக்கமான முறையில் இயைந்து நோக்க என்னால் இயலவில்லை. கலையின் ஒவ்வொரு அம்சமும் கலைஞரின் ஆன்மாவையும் அவருடைய வாழ்வனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு கலைஞர் தன்னுடைய ‘உண்மையான சுய’த்தை ஒப்பனைத் திரையிட்டு மறைத்துக்கொள்ள எவ்வவளவுதான் முயன்றாலும் அவருடைய மெய்யான அடையாளம் கலையின் வழியே வெளிப்பட்டுவிடுகிறது. எம்.எஸ். விஷயத்தில், கேட்பவர்களை ஆற்றுப்படுத்திய, விவரிக்க இயலாத, அழியாத, உண்மையிலேயே தெய்வீகமான இசை, மிகவும் சிக்கலான, வெளி உலகம் அறியாத ஓர் ஆளுமையிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. அவர் துணிச்சலானவர். உணர்ச்சிமயமானவர். அவருடைய வாழ்க்கை அனேகமாக எப்போதும் வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறது. அவருடைய இசையில் அவருடைய வாழ்க்கையை என்னால் கேட்க முடியவில்லை. அவருடைய இசையின் வாயிலாக அவருடைய வாழ்வை உள்வாங்கவும் என்னால் முடியவில்லை. எனக்குப் போதிக்கப்பட்டிருந்த எம்.எஸ்.ஸின் படிமம் என் கண்களைக் கட்டியிருந்தது. எம்.எஸ். பற்றிய சில கருத்தாக்கங்கள், ஒரு சில வரிகள், சில பத்திகள் என்று சில மாதங்கள் திணறினேன். பிறகு அவை அனைத்தையும் துறந்தேன். எக்கச்சக்கமான சுமையை நான் இறக்கி வைக்க வேண்டியிருந்தது.
நான் வியந்த அந்த ஆளுமையை இனங்காண அவருடைய இசை எனக்கு உதவுமா?
பொலிவியாவில் மலையேற்றத்துக்காகப் போயிருந்தேன். வெவ்வேறு காலகட்டங்களில் எம்.எஸ். பாடிய பாடல்களை உடன் எடுத்துச்சென்றிருந்தேன். 16000 அடி உயரத்தில் கூடாரத்தில் தங்கியிருந்த அந்த நீண்ட இரவுகளில் எம்.எஸ். பாடல்களே எனக்குத் துணையாக இருந்தன. மலைகளின் மவுனத்திற்கிடையே எம்.எஸ்.ஸின் இசையின் மவுனத்துக்குள் அமிழ்ந்துபோனேன். அந்தச் சமயத்தில்தான் கட்டுரை பிறந்தது.
கர்னாடக இசை உலகைச் சேர்ந்த பலரும் மரியாதைக் குறைவாக நான் எழுதிவிட்டதாகக் கருதினார்கள். இவர்கள் நான் எழுதியதை உண்மையிலேயே படித்ததாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு கலைஞரின் வாழ்வில் - அதிலும், கடவுளுக்கு இணையாக வைக்கப்பட்ட கலைஞரின் வாழ்வில் - நடந்த போராட்டங்களையும் கொந்தளிப்புகளையும் அறிந்துகொள்ளும் விருப்பமும் அவர்களுக்கு இருந்ததாகவும் தோன்றவில்லை. எம்.எஸ். தெய்வீகமானவர் என்று நம்ப விரும்புகிறோம். ஆனால், ஒருவரது வாழ்வில் நிகழும் மேலும் கீழுமான ஊசலாட்டத்திலிருந்துதான் கலை பிறக்கிறது. அவரது வாழ்வின் துயரங்களை மூடிமறைக்க விரும்புகிறோம். ஆனால், அந்த அனுபவங்களிலிருந்து வெளிப்பட்ட இசையை ஆராதிக்கிறோம். இது கொடூரமானதாகத் தோன்றுகிறது. அவரது துயரங்கள் உண்மையானவை அல்லவா? நமது பார்வைகளிலுள்ள முரண்களை நாம் புறக்கணிக்க இயலாது. இந்த முரண்களோடு உறவாடி அவற்றைப் புரிந்துகொள்வதன் மூலமாகத்தான் உண்மைகளை உணரும் வாழ்வை நாம் வாழ முடியும்.
எம்.எஸ்.ஸின் துயரங்களை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் அவருடைய உண்மையான குரலைக் கேட்டதே இல்லை என்றே சொல்ல வேண்டும்.
டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ். வாழ்க்கை வரலா’ற்றின் தெலுங்கு மொழியாக்க நூல் வெளியீடு ஹைதராபாதில் நடந்தது. அதில் கலந்துகொண்டபோது இதைப் பற்றியெல்லாம் நான் கோடிகாட்டினேன். அங்கே நான் பேசிய விஷயங்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட கர்னாடக இசையுலகைச் சேர்ந்த பலர் ஆத்திரத்துடன் எதிர்வினையாற்றினார்கள். தர்க்கமில்லாத வாதங்களை முன்வைத்தார்கள். சாதி, பாலினம் ஆகிய விஷயங்களில் கர்னாடக இசை உலகம் அப்பழுக்கற்றது என்றும் பாரபட்சம் என்பது அனேகமாகக் கிடையாது என்றும் அவர்கள் சொன்னார்கள். இது உண்மை என்றால், மனித இனத்தின் எந்தச் செயல்பாட்டிலும் பாரபட்சம் இல்லை என்றே சொல்லிவிடலாம். எத்தனையோ துறைகளில் பெண்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், தலித்துகள், இனச் சிறுபான்மையினர், மதச் சிறுபான்மையினர் ஆகியோர் சாதிக்கவில்லையா என்ன? இதை வைத்துப் பாரபட்சமே இல்லை என்று சாதித்துவிடலாமே.
அங்கே என்ன பேசினேன் என்னும் விவரங்களுக்குள் போக விரும்பவில்லை. அது யூடியூபில் பார்க்கக் கிடைக்கிறது. தனிநபர்கள் என்ற முறையிலும் சமூகக் குழுவாகவும் நம்மைப் பற்றி நேர்மையாக நம்மால் சிந்தித்துப்பார்க்க முடியவில்லை என்றால் நஷ்டம் நமக்குத்தான். எம்.எஸ்.ஸின் வாழ்க்கை, அதைவிட முக்கியமாக அதை நாம் பார்க்கும் விதம், கறாராகத் துருவி ஆராயப்பட வேண்டியது. இப்போதைக்குக் கர்னாடக இசை உலகம் உண்மையைப் பார்க்க மறுக்கும் மனநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த நிலை மாறும் என்று நம்புகிறேன். நாம் மேலும் திறந்த மனத்துடன் அனைவரையும் உள்ளடக்கும் இசைச் சமூகமாக உருவாகும் காலம் ஒன்று வரும் என்றும் நம்புகிறேன். அன்று, எல்லா விஷயங்களைப் பற்றியுமான நேர்மையான விவாதம், கருத்துப் பரிமாற்றம், கற்றல் ஆகியவை சாத்தியப்படும். அன்று இசை புத்துயிர் பெறும்.
ஆங்கில இலக்கிய வட்டாரங்களில் நடப்பதைக் காட்டிலும் மேலான விவாதங்கள் தமிழ் இலக்கியச் சூழலில் நடப்பதைக் காண்கிறேன். எனவே இந்தக் கட்டுரையைத் தமிழில் வெளியிட வேண்டும் என விரும்பினேன். தீவிர இலக்கிய இதழான காலச்சுவடு இதை வெளியிட முன்வந்ததில் எனக்குப் பெருமை. பிரதிக்குத் தீவிரத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் கூட்டும் எண்ணற்ற உணர்வுபூர்வமான அடுக்கு களை மொழியாக்கத்தில் தக்கவைப்பது எளிதல்ல. ஆனால், அரவிந்தன் அதைத் தக்கவைத்ததுடன், கட்டுரைக்கு அலாதியான தமிழ்த் தன்மையையும் கொடுத்துவிட்டார். மதுரையில் பிறந்து இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக மாறிய பெண்ணின் கதையை அப்படித்தானே சொல்ல வேண்டும்.
கர்னாடக இசையில் என்னுடைய பால பருவத்தில், அந்த இசையின் ஒவ்வொரு சிறு நுட்பமும் மகத்தானதாகத் தெரிந்த அந்தக் காலத்தில், எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசை குறித்து இளக்காரமான எண்ணத்தையே கொண்டிருந்தேன். ஆனால், கலையின் சூட்சுமமான, விளக்க இயலாத, ஆழங் காண இயலாத தருணங்களைத் தேடி இசையில் மூழ்கியபோது எம்.எஸ்.ஸைக் கண்டுணர்ந்தேன். அந்தப் பயணத்தில், இசையையும் கண்டுணர்ந்தேன். ஒருவர் கலையினுள் வாழ வேண்டுமென்றால் இளகும் தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்; கலைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். அவரது வாழ்வின் சிக்கல்கள் அவர் பாடிய ஒவ்வொரு ராகத்திலும் வெளிப்பட்டன. அவருடைய வாழ்வும் இசையும் இசைவிணக்கம் கொண்டிருந்தன. உயர் சாதி/வர்க்க ஆண்களின் உலகில் தனியாக ஒரு பெண் எதிர்கொண்ட போராட்டங்களை அவை வெளிப்படுத்தின. தன் இதயத்தின் குரலை அவர் பாடினார். சொற்களின் பொருளுக்குள் அடங்காத பல ரகசியக் கதைகளை அவருடைய இசை நமக்குக் கடத்தியது. அதையெல்லாம் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று அவர் நம்பியிருப்பார். இந்தக் கட்டுரையை எழுதும்போது எம்.எஸ். என்னை எனக்கு உணர்த்தினார். எல்லாவற்றையும் எடைபோடும் என் மனதை அவர் எனக்கே அம்பலப்படுத்தினார். இசையின் தூய்மை குறித்து என் மனதில் கட்டமைக்கப்பட்டிருந்த முன்முடிவுகள் வன்முறை நிரம்பிய பாரபட்சங்கள் என்பதை உணரவைத்தார்.
இந்தக் கட்டுரை அவருடைய நினைவை அவமதிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் ஆகச் சிறந்த முறையில் நான் அவரைக் கொண்டாடியிருக்கிறேன். துணிச்சலான தேவதாசியாக, நிர்ப்பந்தங்களுக்குட்பட்ட பிராமண இல்லத்தரசியாக, கொண்டாடப்பட்ட இசைக்கலைஞராக, அமைதியாக உண்மையைத் தேடும் ஞானியாக வாழ்ந்த பெண்ணின் கதையைச் சொல்லி யிருக்கிறேன்.
பண்பாட்டு ரீதியாக வலிமை கொண்டவர்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதன் பெயரால் பெண் வெறுப்பு, சாதியவாதம், மத வேற்றுமை ஆகியவற்றை நியாயப்படுத்தும் இந்தக் காலகட்டத்தில் எம்.எஸ். மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். வழக்கமான பொருளில் அவர் பெண்ணியவாதியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர் தனக்கான இடத்தை அடையப் போராடினார். கடினமாகப் போராடினார். தான் அழகூட்டிய ஸ்வரங்களுக்கிடையே அதை அவர் கண்டடைந்தார்.
அவருடைய இசை நம்மை நெகிழவைக்கிறது. அவருடைய வாழ்வு நம்மிடையே மாற்றத்தை ஏற்படுத்துமாக.
சென்னை டி.எம். கிருஷ்ணா
29.12.2017
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
கௌரி லங்கேஷ்
கௌரி கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் எழுதிய எழுத்துகளை சந்தன் கௌடா தொகுத்து இந்தப் புத்தகத்தை உரு மேலும்