Your cart is empty.
மாயம்
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் … மேலும்
பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின்பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற் சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகுஇயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை. இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை. ஆவேசத்தைக் காப்பாற்றிக் கொண்டு எறும்பு வரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஒன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து கொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க் கொண்டேயிருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.
ISBN : 9789390224883
SIZE : 14.0 X 0.9 X 21.5 cm
WEIGHT : 205.0 grams
வா.மு. கோமு
7 Mar 2024
(பெருமாள்முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்புபற்றி)
பெருமாள்முருகனின் சிறுகதைத்தொகுதியான ‘மாயம்’ தொகுதியை வாசிக்க
வாய்ப்புக்கிடைத்தது. இந்த சமயத்தில் நானகைந்து சிறுகதைத்தொகுதிகளை முன்பாக
வாசித்திருந்தேன். இந்தக் கதைகளை வாசிக்க வாசிக்க அவ்வளவு மனதுக்கு இணைக்கமாக
இருந்தது என்பதைச் சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு கதையிலும் முருகேசன் வருகிறான்
என்பதை ஏழெட்டுக்கதைகள் தாண்டிப் போன பின்புதான் கவனிக்கவே முடிந்தது.
முருகேசன் மாதிரியான கிராமத்தையுணர்ந்த, கிராமத்திலேயே வேர்விட்டு வளர்ந்த ஆட்கள்
கொஞ்சம் படிப்பும் இருந்தமையால் இருவித மனநிலையில் இருப்பார்கள். ஒன்று
முழுமையான நல்லவனாக வாழ வேண்டும் அல்லது வெளியிலேனும் அப்படிக்
காட்டிக்கொள்ள வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று கெட்டவனாக வாழ்ந்தால்தான்
என்ன ஆகிடும் இப்போ என்கிற மனநிலையிலும் வாழ்க்கையை நகர்த்துவார்கள்.
இப்படியான மனநிலை கொண்டவன்தான் என் கதைகளில் அடிக்கடி வரும் பழனிச்சாமியும்.
நல்லவனா? கெட்டவனா? குடியானது கெடுதியா? கொண்டாட்டத்திற்கானதா?
குழப்பங்களை வைத்திருக்கும் மனநிலையைத் தக்கவைத்திருக்கும் முருகேசு மாதிரியான
நபர்கள் கதைக்களன்களுக்குள் வருவதாலேயே சமீபத்திய இலக்கியம் வாசிக்க உகந்ததாக
இருக்கிறது. பெருமாள்முருகனின் இந்தத்தொகுதியில் வரும் கதைகளின் முடிவுகள் எல்லாமே
எதிர்பார்க்க இயலாத, இலக்கிய வகைமைகளுக்குள் வாழும் கதைகளின் முடிவுகளையும் விட
வித்தியாசமாய் முடிக்கப்படுகின்றன. வாசகருக்கு இது புது யுக்தி. பெருமாள்முருகனின்
ஆரம்ப கட்டச் சிறுகதைகளின் முடிவுகளுக்கும் இந்தத் தொகுதியில் இருக்கும் கதைகளின்
முடிவுகளுக்கும் இடையில் ஏகப்பட்ட வளர்ச்சியை காணலாம். சாதாரணமாய்
சென்றுகொண்டிருக்கும் ஒரு கதை எந்த இடத்திலேனும் எழுந்து நின்றுதானே ஆகவேண்டும்!
முருகேசன் மாதிரியான இளைஞன் நம் கண்ணுக்கும் முன்னால் வாழ்பவன்தான். அவன்
கூரைக்கொட்டகை வேயும் ஆளாகவோ, சுவருக்கு வர்ணம் பூசுபவனாகவோ, ஆடுகளை
மேய்த்துக்கொண்டு பொழுதானதும் வீடு ஓட்டிவந்து பட்டியில் அடைப்பவனாகவோ,
திருமணத்துக்காக ஒரு பெண்ணைக் காதலித்து ஏமாந்தவனாகவோ, காதலிக்கவும்
முத்தமிடவும் மறைவிடம் தேடும் காதலர்களை முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கையில்
கத்தியை வைத்து மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தையும், நகையையும்
பிடுங்குபவனாகவோ, கோழிப்பண்ணையில் முட்டைகளை எடுத்து வைத்துக்
கணக்கெழுதுபவனாகவோ, லாரிக்கு ’ஓம் முருகா’ கரியகாளியம்மன் துணை’ என
பிரஸ்பிடித்து பெயிண்ட்டில் எழுதுபவனாகவோ இருப்பான்.
புதிதாகத் திருமணமான இளம் தம்பதிக்கு அவர்கள் உறவு முறைகள் வரிசையாக கூப்பிட்டு
விருந்தளித்து வெற்றிலையில் பணம் வைத்து மணமகளுக்கும் மணமகனுக்கும்
கொடுப்பார்கள். இந்த நிகழ்வைப் பற்றி முன்பு தமிழில் யாரேனும் எழுதினார்களா என்றே
தெரியவில்லை. எனக்கும் நிகழ்ந்திருக்கிறது என்றாலும் நானும் இதை யோசிக்கவேயில்லை.
’அபிஷேகம்’ கதை அந்த ‘வெச்சுக்குடுக்குற’ நிகழ்வுகளைப் பற்றிச் சொல்லிச் செல்கிறது.
முன்பே சொன்னதுபோல அதிர்ச்சிகரமான முடிவு நம் முகத்தில் அடிக்கிறது.
பெருமாள்முருகன் இயல்பாய் இப்படி எழுதுபவரல்ல என்று ஓரளவு தெரியும். ஆனால் இந்தக்
கதைகள் 2020இல் கொரனா காலத்தில் எழுதிய கதைகள் என்று முகப்பில் சொல்கிறார்
ஆசிரியர். அது கொரனா காலம் இல்லையெனில் இப்படியான முடிவுகள் அவரிடமிருந்து
வந்திருக்காது என்றே நான் யூகம் மட்டும் செய்கிறேன். கொரனா காலமானது மனதில்
கொடுத்த வலி எழுத்தில் வேறு ரூபம் கொண்டுள்ளது. தொகுப்பில் கச்சிதமான கதை என்றால்
’தொழில்’ என்கிற கதைதான். எப்போதுமான பெருமாள்முருகனின் கதை என்று அது
பறைசாற்றுகிறது.
ஒரு சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடிக்கையில் ஒரு நிறைவு மனதுக்குள் தோன்றி
இதமளிக்க வேண்டும். அதை இந்த ’மாயம்’ தொகுதி செய்துவிட்டது எனக்குள்.
நன்றி: முகநூல் பதிவு