Your cart is empty.
மரப்பசு
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் … மேலும்
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும். தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொளித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துக்கள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வை பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள் கருத்துக்களை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’. பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள். நாவலில் தன்னைப் பற்றி அம்மணி கூறும் சொற்களை மாற்றிச் சொன்னால் “மரப்பசுவாக இருந்தாலும் உயிருள்ள பசுவாக” இருக்கும் தனித்துவம் கொண்டவள்.
தி. ஜானகிராமன்
தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.
ISBN : 9789352440092
SIZE : 13.8 X 1.2 X 21.3 cm
WEIGHT : 281.0 grams