Your cart is empty.
உயிர்த்த ஞாயிறு
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் … மேலும்
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் இலங்கை அரசாலும் அவர் எதிர்கொண்ட எண்ணற்ற தாக்குதல்களையும் துணிவோடும், நளினமாகவும் மிகைப்படுத்தல்கள் இல்லாமலும் நினைவெழுதுதலாக இந்த நூலை உயிர்ப்போடு எழுதியிருக்கிறார் ஸர்மிளா. இது முடிந்த கதை அல்ல. தொடரும் துன்பியல் கதை. இலங்கையிலும் இந்தியாவிலும் இனி வரப் போகும் காலத்தைப் பற்றிய கதை இது. இது புனைவல்ல. வாழ்வெழுதல்.
ISBN : 9789390802555
SIZE : 13.9 X 1.2 X 21.4 cm
WEIGHT : 265.0 grams
கீதா இளங்கோவன்
9 Apr 2024
ஸர்மிளா ஸெய்யத் எழுதிய ‘உயிர்த்த ஞாயிறு’ பற்றிய பார்வை
அன்புத் தோழர் ஸர்மிளா ஸெய்யத் எழுதியுள்ள `உயிர்த்த ஞாயிறு’ நூல் கலவையான பல உணர்வுகளை எழுப்புகிறது.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள்மீது உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட 2019 ஏப்ரல் 21 முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் நடந்த சம்பவங்கள், சந்திப்புகள், உரையாடல்களைத் தொகுத்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஸர்மிளா. வாசகராக அவரோடு பயணிக்கத் தொடங்கி, அவர் எதிர்கொண்ட சவால்களையும் ஒடுக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் மனஅழுத்தங்களையும் கையறு நிலையையும் உணர்வுப்பூர்வமாக உணர்ந்தேன்.
`உயிர் அச்சுறுத்தல் இருப்பதை உள்ளும் புறமுமாகத் தெரிந்துகொண்டும், முகம் கொடுத்துக்கொண்டும், பாதுகாப்பான ஒரு வீட்டைக்கூடக் கண்டடைய முடியாமல்போன ஒரு சூழலிலிருந்தே இந்தப் பிரதியை எழுதியிருக்கிறேன். என்னையும் என் பிள்ளைகளையும் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமானதோ அதேபோல ஒரு படைப்பாளியாக எனது பொறுப்பை நிறைவேற்றுவதும் முக்கியமென்ற எண்ணமே இந்தப் பிரதியை எழுதத் தூண்டியது’ என்று முன்னுரையில் ஸர்மிளா குறிப்பிடுகிறார். எவ்வளவு துணிச்சலான போராளிப் படைப்பாளி இந்தப் பெண்
தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, இலங்கை அரசால் இசுலாமிய சமூகம் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளையும், எந்தச் சார்பும் இல்லாமல் சக பெண்களின், குழந்தைகளின், இளைஞர்களின் நலனுக்காக ஸர்மிளா நடத்திவந்த மந்த்ரா நிலையம் எதிர்கொண்ட எதிர்ப்புகளையும், தனிப்பட்ட வாழ்வில் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களையும், தனது வீரியமான எழுத்தால் நம் கண் முன்னே நிறுத்துகிறார்.
மந்த்ராவை மூட வேண்டும் என்று சொல்பவர்களிடம் `கடந்த மூன்று வருடமாக மந்த்ரா நிலையம் எதுல்கோட்டையில் இருந்தது. பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் இளைஞர்களுக்காகவும் வேலை செய்கிறோம். பெண்கள் அபிவிருத்தி, சமாதானம், நல்லிணக்கம் என்று பல நல்ல வேலைத்திட்டங்கள் செய்திருக்கிறோம். வாதுவ்வை இடத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்திருக்கிறோம். இந்த நிறுவனம் இஸ்லாமிய நிறுவனமாக இருந்தால் சிங்கள மக்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாழ்கின்ற வாதுவ்வைக்கு ஏன் வரப்போகிறோம்? எங்கள் நோக்கம் பொதுவானது’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் ஸர்மிளா.
`ஆமாம், நீ சொல்வது சரி. வாதுவ்வை சிங்களவர்களின் ஊர். இங்கு நாங்கள் மட்டும்தான் இதுவரையும் வாழ்கிறோம். இனியும் வாழ்வோம். சுபம் பர்ணான்டோ, வாதுவ்வை நகரில் வசித்திருந்தால் உங்களுக்கு இந்த இடத்தைக் குத்தகைக்கு விட்டிருக்க மாட்டார். அவர் வெளிநாட்டுப் பிரஜை ஆகிவிட்டபடியால் அவருக்கு இதெல்லாம் தெரியவில்லை. எங்கள் மக்களுக்கு எந்த சேவையும், அபிவிருத்தியும் வேண்டியதில்லை. எங்கள் மக்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம். நீ சேவை செய்ய விரும்பினால் உனது மக்களுக்குச் செய்துகொள். வயிற்றில் குண்டுகளைக் கட்டிக்கொண்டு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடத் தயாராக இருக்கும் இளைஞர்களைப் போய்த் தடுத்து நிறுத்து. பள்ளிகளைக் கட்டி ஆயுதப் பதுங்கு குழிகளாக மாற்றி வைத்திருக்கிறார்களே, அவர்களைப் போய்த் திருத்து. எங்களுக்கு உங்கள் சேவைக்கான அவசியமே இல்லை’ என்று அவருக்குக் கிடைத்த பதிலில் கொட்டிக் கிடப்பது கொடிய வன்மம் மட்டுமே.
எல்லாத் தாக்குதல்களிலும், அரசு ஒடுக்குமுறைகளிலும், தம் பங்கு ஏதும் இல்லாமலே பலிகடா ஆவது பெண்கள்தான் என்பதை ஸர்மிளா சுட்டிக் காட்டுகிறார்.
`அபாயாவைக் கழற்றினால்தான் கல்லூரிகளுக்குள் வரலாம், திணைக்களங்களுக்குள் வரலாம், சந்தைக்கு வரலாம், மருத்துவமனைகளுக்கு வரலாம், ஏன் வீதியில் இறங்கலாம் என்னும் நிலை மிக விரைவாக அமலுக்கு வந்தது. எல்லாப் பொது தனியார் இடங்களின் முன் வாசல்களிலும் அறிவிப்புப் பலகைகள் ஒரே நாளில் முளைத்தன. முற்றிய சிங்களக் கடும்போக்குவாதம் அரச அங்கீகாரத்துடன் முஸ்லிம் வெறுப்பைக் கக்கும் எதிர்வினைகளாக எங்கும் வெளிப்படத் துவங்கியது.
அபாயா அணிந்தால் கல்லூரிக்குப் போகலாம், வேலைக்குச் செல்லலாம், சந்தைக்கு, மருத்துவமனைக்கு ஏன் தெருவுக்கே இறங்கலாம் என்று மதத் தீவிரவாதம் முஸ்லிம் பெண்களில் திணித்த மாயாவி அங்கிக்கு சிங்களப் பேரினவாதம் நேரம் பார்த்து கல்லடிப்பது நடந்தது’ என்று பெண்களின் நிலை பற்றி விவரிக்கும் அவர், `ஆம்பிளைகள் சொல்லும்போது போட்டுக்கணும், சொல்லும்போது கழட்டணும்’ என்று மதவாதத்தையும் அரசின் ஒடுக்குமுறையையும் சாடுகிறார்.
பெண்கள் எதை அணிய வேண்டும், எப்போது அதை அணியக் கூடாது என்று ஆதிக்க சக்திகள்தான் எப்பொழுதும் முடிவெடுக்கின்றன. வசதி, விருப்பம் பற்றி பெண்களிடம் கேட்பதோ, அவர்களை முடிவெடுக்க அனுமதிப்பதோ இல்லை என்பது எல்லாக் காலங்களுக்கும், எல்லா ஒடுக்குமுறைகளுக்கும் பொருந்தும் கசப்பான உண்மை.
இந்தப் பதிவு நூலைப் பற்றிய திறனாய்வு அல்ல. ஓர் அறிமுகம் மட்டுமே. அண்டை நாட்டின் சமகாலச் சூழலை, மதங்களும் இனவாதமும் மக்களைப் படுத்தும் பாட்டை, ஒரு பெண்ணின் பார்வையில் மிக ஆழமாக, அருமையாக எழுதியிருக்கிறார் தோழர் ஸர்மிளா ஸெய்யத்.
உங்கள் அறிவாற்றலும் நெஞ்சுரமும் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையிலும் சக பெண்கள் மீது அக்கறை காட்டி அவர்களைக் காக்கும் அளவற்ற நேசமும் கைவிடப்பட்ட மனநிலையிலும் நம்பிக்கை இழக்காது சாதுரியமாக முடிவெடுக்கும் திறனும் மனசாட்சிக்குச் சரியென்றுபடுவதைப் பேசும், செய்யும் உங்கள் துணிவும் ஆளுமைத்திறனும் வியக்க வைக்கின்றன. நிறைய அன்பும் அணைப்புகளும் ஸர்மிளா தோழர்.
நன்றி: முகநூல் பதிவு
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்