Your cart is empty.
இந்திரா பார்த்தசாரதி
பிறப்பு: 10 July 1930
சென்னையில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்த ரங்கனாதன் பார்த்தசாரதி தன் மனைவி இந்திராவின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டு இந்திரா பார்த்தசாரதி என்ற புனைபெயரில் எழுத ஆரம்பித்தார். கும்பகோணத்திலேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தார். பள்ளிப் பருவத்தில் தி. ஜானகிராமன் இவர் ஆசிரியராக இருந்தார். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
முதன்முதலாக ஆனந்த விகடன் இதழில் இவரது ‘மனித இயந்திரம்’ சிறுகதை 1964இல் வெளிவந்தது. அதன்பின் தீபம், கல்கி, கணையாழி போன்ற இதழ்கள் இவர் படைப்புகளை வெளியிட்டுள்ளன. பல நாவல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் நாடகங்களும் எழுதியுள்ளார். இவருடைய கட்டுரைகளும் மொழியாக்கங்களும் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
1972இல் தக்ஷின் பாரத் நாடக சபாவுக்காக எழுதிய முதல் நாடகமான ‘மழை’ நாடகத்தைத் தொடர்ந்து பல நாடகங்களை எழுதினார். இதுவரை 15 நாடகங்கள், 19 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆய்வுத் துறையிலும் இவருடைய சிறந்த பங்களிப்பு உண்டு. ஆழ்வார்கள் குறித்து ஆய்வுசெய்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுத்த இவர் திருச்சி தேசிய கல்லூரியில் 1952 முதல் மூன்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு தில்லி சென்று அங்கு தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1962 முதல் தில்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தொடர்ந்து இணைப் பேராசிரியர், பேராசிரியராக 40 ஆண்டுக் காலம் அங்கு பணியாற்றினார். போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்தியத் தத்துவம், பண்பாட்டுப் பாடப் பிரிவுக்கான வருகைதரு பேராசிரியராக 1981 முதல் 1986வரை பணியாற்றினார்.
ஓய்வுபெற்ற பிறகு, புதுவைப் பல்கலைக்கழக நாடகத் துறையில் நான்காண்டுக் காலம் பணியாற்றியபோது அங்கு சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியை நிறுவி அதன் இயக்குநராகச் செயலாற்றினார். முற்றிலும் முடங்கிக்கிடந்த தமிழ் நாடகக்கலையைச் சிலப்பதிகாரத்திலிருந்து புனையப்பட்ட நாடகங்கள், ஷேக்ஸ்பியரின் ‘கிங்க்லியர்’ நாடகம் இவற்றை மேடையேற்றி உயிர்ப்பித்தார். அந்தக் காலகட்டத்தில் 1996இல் எழுதிய ‘ராமானுஜர்’ நாடகமும் 1997இல் எழுதப்பட்ட ‘நந்தன் கதை’ நாடகமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. 1991இல் இந்திய குடியரசுத் தலைவரின் விருது பெற்ற கே.எஸ். சேதுமாதவன் இயக்கிய ‘மறுபக்கம்’ படத்தின் கதை இவர் எழுதிய ‘உச்சி வெய்யில்’ குறுநாவலை ஆதாரமாகக் கொண்டது. இந்திய அரசும் பெருமதிப்பு வாய்ந்த பல நிறுவனங்களும் விருதுகளால் இவரைக் கௌரவித்துள்ளன.
‘குருதிப் புனல்’ நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது (1977), ‘வேதபுரத்து வியாபாரிகள்’ நாவலுக்கு பாரதீய பாஷா பரிஷத் விருது (1996), சரஸ்வதி சம்மான் (1999), ‘ராமானுஜர்’ நாடகத்துக்கு சங்கீத் நாடக அகாதமி விருது (2004), பத்ம ஸ்ரீ விருது (2010), இந்து நாளிதழ் நடத்தும் ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய நிகழ்வின் வாழ்நாள் விருது (2010) இவற்றுடன் சமீபத்தில் மார்ச் 2022இல் ஃபெல்லோஷிப் வழங்கி இவரை கௌரவித்திருக்கிறது சாகித்திய அகாதெமி.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வேர்ப்பற்று
-இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டு முன்னால் தொடங்கி, சுதந்திரம் பெற்ற
ந்தாண்டுகளில் ம மேலும்