கதைகள் ஒன்றிரண்டை சிலமாதங்கள் இடைவெளியில் வாசிப்பது என்பது வேறு, தொகுப்பை எடுத்து வைத்து ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என்பது வேறு. பின்னதைச் செய்யாது போயிருந்தால் சுஜாதாவின் உண்மையான ஆளுமை எது என்பது எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.
பெண்ணுடல் மீது ஆண்களுக்கிருக்கும் கற்பனை மயக்கங்கள் சுஜாதாவை வாசித்தால் கலைந்து விடும் என்று சொல்லலாம்.
குறிப்பாக 'அந்தகாரம்' ' தழும்பு' ஆகிய கதைகளில் வரும் முதியபெண்கள். முதுமை பெண்ணுடலில் வரையும் சித்திரம் வேறு. கர்ப்பப்பை இறக்கத்தை மறைத்துக் கொள்வதும், கணவன் கண்டறியாத தழும்பும் பெண்ணுடல் யதார்த்தத்தை ஆரவாரமின்றிச் சொல்கின்றன.
பெண்ணுக்குப் பல அவலங்கள் நேருகின்றன, இந்தக் கதைகளில். குடிகாரக் கணவனால் மட்டுமன்றி, மாமியாராலும் சிரமப்படுகிறார்கள். வீட்டில் வலியக் கட்டிவைத்த திருமணம் தூக்கில் தொங்குவதில் முடிந்தால், ஆசைப்பட்டுக் கட்டிக்கொண்டதும் அடிஉதையுடன் கழிகிறது. அதனால் தான் கணவனின் பாராமுகத்தையே கண்டவளுக்கு, பணத்திற்குச் செய்தாலும் அக்கறையுடன் செய்பவளைக் கட்டி அணைத்துக்கொள்ளத் தோன்றுகிறது.
தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் கவனித்திருக்கிறேன். கவிஞர்கள் உரைநடை எழுத வரும்பொழுது அவர்கள் அறியாமலேயே சொற்சிக்கனம் உடன் வருகிறது. கூடவே அழகுணர்ச்சியும். "வீட்டிற்குள் நுழைந்து கழிவறை வாசலை நெருங்குகையில் சிறுமழை ஒன்று சடசடவென்று அவள் கால்களுக்கிடையில் பொழிந்து முடிந்தது".
தலைப்புக்கதை மெலோடிராமாகவோ அல்லது உணர்வுவெடிப்பாகவோ நிகழ ஏராளமான வாய்ப்புள்ள கதை. சுஜாதா அளவான வார்த்தைகளால் உணர்வுத்தூக்கலின் நெடி தெரியாத வகையில் கதையை Present செய்திருக்கிறார். 'சலனம்' மற்றொரு அழகான கதை. தோழியின் கணவன் மேல் Crush கொள்ளாதவர் உலகில் யார்? ரம்யா மட்டுமே மாட்டிக் கொள்கிறாள்.
முதல் தொகுப்பு என்பதற்கான எந்த அடையாளமுமில்லாத, எந்த சலுகையும் கோராத தொகுப்பிது. குடித்துவிட்டு நிதானம் தவறிய அப்பாவின் வேட்டி ரோட்டில் அவிழ்கையில் சின்னப்பெண் கன்னத்தில் அறைகிறாள், உடம்புக்கு முடியாத அப்பாவிற்கு Anne French கிரிமை அடிவயிற்றின் கீழ் தடவுகிறாள் மற்றொருத்தி. பெண்கள் வித்தியாசமானவர்கள் மட்டுமல்ல நெருக்கமானவர்களும். உங்களுக்குச் சிறுகதை வடிவம் நன்றாக வருகிறது, ஒருபோதும் எழுதுவதை நிறுத்தாதீர்கள் சுஜாதா.