Your cart is empty.
None
பத்தினாதனுடைய 'நாளையும் நாளையே' குறித்த என் வாசிப்பு ஒரு சஞ்சிகையில் வெளிவர இருக்கின்றது. அதில் இருந்து ஒருபகுதி..
"இத்தொகுப்பிலிருக்கும் துயரமும், கொந்தளிப்புமான கதைகளை முன்வைத்து, அண்மையில் வெளிவந்த நூல்களில் கவனிக்கத்தக்க சிறுகதைத் தொகுப்பென்று இதை எளிதாகச் சொல்லிவிட முடியும். மேலும் அகதிகளின் கதைகளை வைத்து அனுதாபமோ கழிவிரக்கவோ வேண்டி நிற்காமல், அதை புனைவின் இயல்பான மொழியில் பத்தினாதன் இதில் சொல்வதைக் கவனித்தாக வேண்டும்.
பத்தினாதனின் எழுத்துக்களை இதுவரை வாசிக்காதவர்களாயின் இந்தத் தொகுப்பு பத்தினாதனை வாசிப்பதற்கான நல்லதொரு தொடக்கமாக அமையும். இன்னுமொரு முக்கிய விடயம், ஈழத்தமிழர்கள் மீது அக்கறையுள்ளவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் தமிழகத்தவர்கள், ஒருபோதும் தவறவிடக்கூடாத எழுத்துக்கள் இந்த நூலும், பத்தினாதனுடைய ஏற்கனவே வெளிவந்த ஏனைய படைப்புக்களும் எனச் சொல்வேன்.
பத்தினாதனின் அகதி முகாம் கதைகளை எங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை எனில், 'என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்' என்று மாண்டோ சொன்னதை நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்வதே சரியான வழியாக இருக்கும்."