பொதுவாக மனைவியை எளிதாக அடுத்தவரிடம் குறைசொல்ல வருமளவிற்கு அவளை நேசிப்பதைச் சொல்ல வருவதில்லை. எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் உடன் வசிக்கும் கணவனின் பெற்றோர் முன்பு கணவர் மனைவியிடம் ஒரு வார்த்தைகூட பேசமாட்டார் என்றார். ஜான் சுந்தர் நேசிப்பை எழுத்திலும் வடித்திருக்கிறார். அவிலா டீச்சர் அதிருஷ்டசாலி.
குழந்தைகளோடு ஒன்றரக் கலந்த டீச்சர், குழந்தைகள் முகிழ்ந்த சில தருணங்களைக் கணவருக்குச் சொல்ல அவர் அதற்கு எழுத்து வடிவம் கொடுக்கும் தொகுப்பு இது.
குழந்தையின் மழலையில் அடைக்க வேண்டாம் என்பது அடிக்க வேண்டாம் என்று காதில் விழுவது, பள்ளி சேர்க்கையில் அப்பா, அம்மா பெயரைக் கேட்டால் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்று குழந்தை பேசாமல் இருப்பது, காண்டாமிருகம் வளர்த்தால் சட்டையைக் கழற்றிக் கொம்பில் காயப்போடலாம் என்ற கற்பனை, அம்மா கல்யாணநாள் என்றால், பள்ளிக்கு வந்து எங்க அம்மாவுக்கு நாளை கல்யாணம் என்பது போலக் குழந்தைகள் அவர்கள் அறியாமலேயே நம்மை அதிகம் சிரிக்க வைக்கிறார்கள். என் மகள் சீர்காழி பக்திப் பரவசத்துடன் பாடிய பாடலை வீட்டுக்கு வந்து ' நீ எல்லாம் தெய்வமில்லை" என்று பாடினாள்.
குழந்தைகளுடன் இருக்கும் தருணங்கள் நாம் எந்த ஆயுதமும் ஏந்தாமல் நிராயுதபாணியாக நிற்கவும், இதைப் பேசினால் நம்மை முட்டாளாக நினைத்து விடுவார்களோ என்ற எச்சரிக்கையுணர்வு இன்றி விச்ராந்தியாக இருக்கும் பொழுதுகள். அவர் மனைவிக்கு அப்படி நேர்ந்த சில பொழுதுகளைக் கட்டுரை வடிவில் தந்திருக்கிறார் ஜான் சுந்தர்.