Your cart is empty.
24 Feb 2026
பொதுவாக கிறிஸ்த்துவ மக்களின் வாழ்வியலையும் அவர்களை பற்றின கதைகளையும் கடலோரம் சார்ந்த மக்களின் வழியாக தான் அதிகம் படித்ததும் கேள்விபட்டதும் உண்டு. ஆனால் இந்த புளித்த அப்பம் என்ற கிறிஸ்துவ பின்னணி கொண்ட மூன்று குறுநாவல்கள் ஒரு புதிய அனுபத்தை கொடுக்கிறது. மூன்று கதைகளும் தனி தனி வாசிப்பு அனுபவத்தையும், கதாபாத்திரங்கள் மூலம் ஆழமான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
இதில் வரும் முதல் கதையான “சப்பரம்” இறந்த ஒருவருக்கான கல்லறை குழியை உறவுக்காரனுக்கு விட்டுக்கொடுக்க மறுக்கும் ஒரு மனிதனின் கதையாக இருக்கிறது, அதில் போட்டி, பொறாமை, வஞ்சகம், பழிவாங்கும் எண்ணம் என அனைத்து உணர்வுகளையும் கடத்தி கிறிஸ்த்தவ மக்களில் பிரிவு எப்படி ஏற்படுகிறது உறவுகளுக்குள் எவ்வாறு அது வெளிப்படுகிறது என அருமையாக எழுதியுள்ளார் எழுத்தாளர்.
அடுத்தது “பேதலிப்பு” இதுவும் அதே சாயலில் உறவுக்காரன் இறப்பிற்காக கிருஷ்ணன் என்பவனின் ஆதங்கமும் அவன் அடாவாடித்தனமும் நிறைந்த கதையாக உள்ளது, பொதுவாக கிருஷ்ணன் என்கிற கதாபாத்திரத்தை நம் வாழ்வில் அனைவரும் பார்த்திருப்போம் ஆனால் இந்த கதையின் மூலமாக தன்னைப்பற்றி கூட யோசிக்காமல் குடித்துவிட்டு உடன் இருப்பவர்களையும் குடிக்கவைத்து வாழ்க்கையை எந்தவித பயனும் இல்லாமல் வாழ்பவன் அவனது நெருங்கிய உறவின் இறப்பிற்கு பின் அவன் அடைக்கிவைத்த அறம் வெளியே வருகிறது அது அவனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் இறுதியில் கதிகலங்க வைக்கிறது.
கடைசியாக “புளித்த அப்பம்” நம் கற்பனைக்கும் எட்டாத கதை இது, இந்த கதையை எழுத்தாளர் யோசித்த விதமும் அதை அவர் எழுத்தின் மூலம் கையாண்ட விதமும் அசத்தல், அந்த காலகட்டத்திற்கே நம்மை கொண்டு சென்று கதையோட பயணம் செய்ய வைக்கிறார். இதை வாசித்தால் மட்டுமே அந்த ஆச்சரியத்தை அடையமுடியும்.
இந்த புத்தகம் வெறும் கதைகளுக்கான புத்தகம் மட்டும் இல்லாமல் நமது வாசிப்பின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய உதவியாக இருக்கும், ஜார்ஜ் ஜோசப் அவர்களின் கதைகள் யாவும் எளிமையாக இருந்தாலும் அதை சொல்லும் விதம் தனித்தன்மையாக இருக்கிறது. முக்கியமாக அவரது பெரிய பலம் அவர் கதாபாத்திரங்களை சுற்றி இருக்கும் சூழலை வர்ணிப்பது தான், அதனை வாசித்து உடனே காட்சி படுத்த சவாலாக இருந்தாலும் அதை ஒரு கட்டத்தில் ஜார்ஜ் ஜோசப் எழுத்து புலமை இது தானே என அறிந்தபின் வாசிக்கையில், கவனம் யாவும் அடுத்து எதை எப்படி வர்ணிக்க போகிறார் என்ற ஆர்வம் வந்துவிடும் அது ஒரு போதையாக கூட மாறும்.