Your cart is empty.
None
ஐயா தொ.பரமசிவன் அவர்களுடைய கருத்தியல் தளத்தை அவருக்கே உரிய இயல்பான பாணியில் வெவ்வேறு இதழாளர்களுக்குக் கொடுத்த நேர்காணல்களின் தொகுப்பே இந்த நேர்காணல்கள் புத்தகம்.
பாளையங்கோட்டையில் பிறந்த பண்பாட்டியல் ஆய்வாளரான ஐயா தொ.பரமசிவன் தன் மாமாவின் அடியில் இருந்து தன்னை தப்பிக்கவைத்துக்கொள்ளப் புகுத்த இடம் ஒரு நூலகம். அங்கு அவர் வாசித்த புத்தகம் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகமான 'Uncle Tom's cabin' என்ற புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்பதனை நம்மிடம் பகிர்கிறார். அமெரிக்கா போர் மூள்வதற்கும் மற்றும் அடிமை ஒழிப்பிற்கும் அந்தப் புத்தகம் காரணமாக இருந்தது என்பதனை அவரால் அந்த சிறு வயதிலே அறிய முடிந்தது. அதுவே அவரை சமூகத்தில் அக்கறை கொண்ட ஒரு மனிதராகச் செதுக்கியிருக்கிறது என்பதை நாம் இந்தத் தொகுப்பில் வாசிக்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும்.
தன்னை 95 சதவிகிதம் பெரியாரிஸ்ட் என்று ஒப்புக்கொள்ளும் தொ. ப. நம் கலை, பண்பாடு, இலக்கியம் என்று வரும்போது பெரியார் கொண்ட கருத்துக்களிலிருந்து தான் வேறுபடுவதாகக் கூறுகிறார். அதிகாரத்திற்கு எதிரான, திராவிட வேர்களை உடைய நாட்டார் மரபு ஆய்வில் தான் எப்படி ஈர்க்கப்பட்டார் என்பதனை மிக விரிவாக நாட்டார் பண்புகள் மற்றும் பழக்கவழக்கங்களை எடுத்துக்காட்டாகக் கூறி விரிவாக விளக்குகிறார். வைதீக சமயங்கள் தனக்குச் சாதகமாக, தன்னை இங்குத் தக்கவைத்துக்கொள்ளச் சில நாட்டார் பண்புகளைத் தன்வயமாக்கிக்கொள்ளும் முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் இந்தத் தொகுப்பிலிருந்து.
தமிழ் பண்பாட்டியல் ஆய்வு தொ.ப ஐயாவின் காலத்தில் சற்று கடினமாக இருந்தது என்பதைக் கூறி மேலும் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலை நம்மிடம் பகிர்கிறார். அது: 1857இல் தொடங்கிய சென்னை பல்கலைக்கழகத்தில் 1914இல் தான் தமிழுக்கென்று பாடத்திட்டம் தொடங்கப்பட்டது என்பது. அப்போது தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்வதற்கு அக்காலச்சூழல் எவ்வளவு கைகொடுத்திருக்கும் என்பதனை நாமே புரிந்து கொள்ளலாம். 1960 ஆண்டு வரை முனைவர் படத்திற்காக ஆய்வுகள் மேற்கொண்டாலும், அந்த ஆய்வேடுகளைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் தான் சமர்ப்பித்தார்கள் என்பது இன்னொரு அதிர்ச்சிகரமான தகவல். இப்படி இருந்த சூழலில் கள ஆய்வு எப்படித் தன்னை போன்ற பண்பாட்டியல் ஆய்வாளர்களுக்குக் கைகொடுத்தது என்பதைச் சுவைப்படக் கூறியிருக்கிறார் தொ.ப. புத்தகங்களிருந்து நாம் கற்றுக்கொள்வதை விடத் தெருக்களில் இருக்கும் மக்களிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று அவர் சொல்லியிருப்பது ஓர் எடுத்துக்காட்டு.