Your cart is empty.
மீனும் பண் பாடும்
ஐஸ்லாந்து நாட்டின் கடலோரக் கிராமம் ஒன்றில் தற்செயலாகப் பிறக்க நேர்ந்த, தாய் தந்தையரை அறியாத அல்ஃப்க்ரைமுரின் இளமைக்கால மனப்பதிவுகளினூடாக விரிகிறது இந்த நாவல். அவன் வளரும் ப்ரெக்குகாட் இல்லம் விசித்திர மனிதர்களின் வாழ்விடம். தனது தாத்தாவாக வரித்துக்கொண்ட ப்யோர்னைப் போலவே தானும் ஒரு செம்படவனாக வேண்டும் என்று அல்ஃப்க்ரைமுர் விரும்புகிறான். ஆனால் வாழ்க்கை அவனுக்கு வேறொன்றை விதித்திருக்கிறது. புகழ்பெற்ற பாடகராக அறியப்படும் கர்தர் ஹோமின் வருகையும் அவருடனான சந்திப்பும் அவனது வாழ்க்கைத் தடத்தை மாற்றுகிறது. முற்றிலும் ஒரு புதிய அத்தியாயத்திற்காக அந்தக் கடற்கரைக் கிராமத்திடமிருந்து விடைபெற்றுச் செல்கிறான் அல்ஃப்க்ரைமுர். வெளியுலகின் சலனங்களையும் காலத்தின் நகர்வையும் பிடிவாதமாக மறுத்து, தாங்களே வகுத்துக்கொண்ட மதிப்பீடு களின் வழி எளிய தேவைகளுடன் வாழ முயலும் பாசாங்கற்ற மனிதர்கள்தான் இந் நாவலின் மையப் பாத்திரங்கள். பாடகர் கர்தர் ஹோம் இறுதி வரையிலும் அவிழ்க்கப்படாத புதிர். நவீன வாழ்வின் வெற்றுப்பகட்டு, பேராசை இவற்றின் மீதான விமர்சனம் இந்நாவலில் உள்ளீடாகத் துலங்குகிறது. அற்புதக் கதைகளின் எளிமையும் ஈர்ப்பும், நாட்டார் கதைகளின் நகைச்சுவையும் கொண்ட இந்நாவலை தமிழ் வாசகர்கள் மிக நெருக்கமானதாக உணர்வார்கள்.
ஹால்டார் லேக்ஸ்நஸ்
ஹால்டார் லேக்ஸ்நஸ் (1908 – 1998) ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேய்க்ஜாவிக்கிற்கு அண்மையில் இருக்கும் ஊரில் பிறந்தார். பதினேழு வயதில் அவருடைய முதல் நாவல் வெளியானது. ஐஸ்லாந்தின் தற்காலப் புனைவிலக்கியத்தின் ஈடிணையற்ற பிதாமகராகப் பார்க்கப்படும் இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியர்களுள் ஒருவர் என்றும் மதிக்கப்படுகிறார். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. 1955ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.