Your cart is empty.
அஞர்
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது.
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் மேலும்
போரில் மடிதலைவிட வாழ்தலைப் பற்றிப் பேசுவதை இன்றைய கவிஞனின் கடப்பாடு என்பேன். அஞர் போரின் வலியைக் கிளறி வாழ்வை நுகர்வதற்கான உரிமைக்காகப் போராட நம்மைத் தூண்டுகின்றது.
மொழிக்கும் இலக்கியத்துக்குமான உறவு, இலக்கியக் கோட்பாடுகள், திறனாய்வுக் கொள்கைகள், நடையியல் எனப் படிப்படியாகத் திறனாய்வுலகிற்குள் அழைத்துச் செல்கிறார் கைலாசபதி. முந்தைய இலக்கிய விளக்க மரபுகளிலிருந்து திறனாய்வு வேறுபடுவதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறார். திறனாய்வு ஒரு தனித்துறை என்பதை உணர்த்துகிறார். தமிழின் நவீனத் திறனாய்வுவரலாற்றுப் போக்குகளை வகைப்படுத்தி, அவற்றின் வன்மை மென்மைகளைக் காட்டுகிறார். மாணவர்கள் அக்கருத்துகளைப் பொருத்திப் பயில்வதற்காகப் பிற்சேர்க்கையாகச் சில கவிதைப் பகுதிகளையும் தந்துள்ளார். இந்த நூல் வெளிவந்ததற்குப் பின்னான அரை நூற்றாண்டில் தமிழில் வெவ்வேறு திறனாய்வுக் கோட்பாடுகள் எழுச்சி பெற்றுள்ளன. இந்தப் போக்குகளை விளங்கிக்கொள்ள வழிகாட்டியாகவும் 'இலக்கியமும் திறனாய்வும்' திகழ்கிறது. பொருள் ஆழங்குன்றாமல் விளங்க வைக்கிறது கைலாசபதியின் தமிழ் நடை.
திருக்குறளின் காமத்துப்பாலுக்குச் செய்யப்பட்ட உற்சாகமும் சுவாரசியமும் கூடிய உரை என்பதைத் தாண்டி இந்நூலில், ஆண்ட்ராய்டு காலத்துக் காதலில் மறைந்திருக்கும் வள்ளுவயுகத்துக் காதலையும் கண்டுபிடிக்கிறார் இசை. பின், எந்தக்காலத்தில் எந்தக்காலமோ எனப் பரவசம் கொள்கிறார். அந்தப் பரவசமே மேதைமையாக, நகையுணர்ச்சியாக, உபாசனையாக, விளையாட்டாக, திகைப்பாக, குழந்தைமையாக நூலெங்கும் வெளிப்பட, கடைசிப் பக்கத்திற்குப் பின்பு, காதலின் அத்தனை ஆட்டங்களையும் அறிந்த ஒரு கவிஞனாக, தோழனாக வள்ளுவன் எழுந்து வருவதைப் பார்க்கிறோம். அறத்தையும் பொருளையும் சற்றே நெகிழ்த்திவிட்டு அவனை அப்போது அறியவும் நெருங்கவும் முயல்வது நமக்கு அவசியமானதும்கூட. ஆசையின் எளிய ஜீவன்கள்தானே நாமெல்லாம் இல்லையா?
‘நள வருடத்துப் புயல்’ எனக் குறிப்பிடப்படும் பெரும்புயல் நூறு ஆண்டுகளுக்கு முன் (22--11--1916) புதுச்சேரியைச் சூறையாடியது. புதுவையில் அப்போது வசித்த பாரதி கவிஞராக, செய்தியாளராக, நிவாரணப் பணிகளை முன்னெடுத்த களப்பணியாளராகப் புயலையும், புயலின் விளைவுகளையும் எதிர்கொண்டார். இதனைப் பாரதியின் கவிதைகளும், கட்டுரைகளும், வ.வெ.சு. அய்யர் அறிக்கையும், பாரதி, மண்டயம் சீனிவாசாச்சாரியார் மகள்கள், பாரதிதாசன் ஆகியோரின் பதிவுகளும் வெளிப்படுத்துகின்றன. ‘பாரதி கவிஞர் மட்டுமல்லர்; தேசபக்தர் மட்டுமல்லர்; தன்னலங் கருதாத மக்கள் தொண்டர்’ என்று அன்றைய புதுச்சேரி மக்கள் பேசிக்கொண்டதாகப் பாரதிதாசன் நினைவுகூர்ந்திருக்கின்றார். பாரதியின் இந்த வாழ்க்கைப் பகுதியை அவருடைய எழுத்துகளாலும் உடனிருந்தோரின் நினைவுப் பதிவுகளாலும் திரட்டித் தருகின்றது இந்நூல். சிதறல்களாக இருந்த பாரதி வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நூல் முழுமைசெய்கிறது.
ஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், குடும்பச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நுட்பமான பார்வையுடன் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. நம் கல்வி முறை பற்றிய பல்வேறு கோணங்களைப் போகிற போக்கில் சுட்டுச் செல்லும் தெறிப்புகள் நூலெங்கும் விரவியுள்ளன. எளிய மொழிநடையும் சுவையான சம்பவங்களுமாக வாசிப்புத்தன்மை கொண்ட நூல் இது.
இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும். அழகும் பரந்து விரிந்துள்ளன. இப்போது அவருக்கு வாய்த்திருப்பவை பதற்றம் குறைந்த நாட்களில் தீர்க்கமாக வீசும் தடைகளற்ற காற்றும், கடல் பழகுதலும் கனவுகள் வராத இரவும் எப்போதும் ‘இன்னொரு பயணமும்’. தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைபோலப் புதிய வாழ்வு, புதிய வீச்சு, புதிய படிமங்கள் என அவருடைய கவிதைகள் இப்போது மென்மையின் குரல் ஒலி. சேரன்
மிகவும் மதிக்கப்பட வேண்டிய போராளியாகவும் எழுத்தாளராகவும் கலகக்காரியாகவும் இடையறாது இயங்குபவர் ஸர்மிளா ஸெய்யித். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் இலங்கையில் நடத்தப்பட்ட கோரமான தற்கொலைத் தாக்குதல்களின் பிற்பாடு இலங்கை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொண்ட தீவிரமான இனவாத அரச ஒடுக்கு முறையையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் இலங்கை அரசாலும் அவர் எதிர்கொண்ட எண்ணற்ற தாக்குதல்களையும் துணிவோடும், நளினமாகவும் மிகைப்படுத்தல்கள் இல்லாமலும் நினைவெழுதுதலாக இந்த நூலை உயிர்ப்போடு எழுதியிருக்கிறார் ஸர்மிளா. இது முடிந்த கதை அல்ல. தொடரும் துன்பியல் கதை. இலங்கையிலும் இந்தியாவிலும் இனி வரப் போகும் காலத்தைப் பற்றிய கதை இது. இது புனைவல்ல. வாழ்வெழுதல்.
பசுமைப் புரட்சி நடந்திருக்காவிட்டால் இந்தியாவில் வறுமையும் பஞ்சமும் கோர தாண்டவம் ஆடியிருக்கும் என்பது போன்ற கூற்றுக்களின் பெறுமானம் என்ன என்பதை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்தியாவின் மரபு சார்ந்த வேளாண்மை, அதன் அலாதியான சிறப்பம்சங்கள், அது திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்ட விதம் ஆகியவை பற்றியும் விரிவாகவும் உரிய ஆதாரங்களுடனும் இந்நூல் பேசுகிறது. வறுமை, பஞ்சம், வரப்பிரசாதம் எனப் பல்வேறு கிளைக் கதைகளைக் கொண்ட பசுமைப்புரட்சியின் நிஜக் கதையை அம்பலப்படுத்துகிறது இந்நூல். இந்திய வேளாண்மையைக் காப்பாற்ற இனி என்ன செய்ய முடியும் என்பது குறித்த நடைமுறை சார்ந்த யோசனைகளையும் இந்நூல் முன்வைக்கிறது. விரிவான வாசிப்பு, ஆழமான அக்கறை, களப்பணி சார்ந்த அனுபவம் ஆகியவற்றினூடே இந்திய வேளாண்மையைக் குறித்த ஆழமான விவாதங்களை சங்கீதா ஸ்ரீராம் முன்வைக்கிறார். சமூக அக்கறையும் தன்னார்வத் தொண்டுள்ளமும் கொண்ட இவரது இந்த நூல் நம் மண்ணையும் மக்களையும் மாறுபட்ட கோணத்தில் பார்க்க உதவுகிறது.
கழ்பெற்ற கானுயிர் வல்லுநரான மா. கிருஷ்ணன் கலைக்களஞ்சியத்தில் பறவைகள் பற்றி எழுதியுள்ள 59 கட்டுரைகளும் 'வேடந்தாங்கல்' குறித்த சிறுநூலும் கொண்ட தொகுப்பு இது. சுருங்கச் சொல்லல், சுயபார்வை, காட்சிப்படுத்தி மயக்க மூட்டும் நடை ஆகியவற்றுடன் அனுபவ சாரமாகத் தகவல்களை மாற்றிவிடும் அவரது எழுதுமுறை இக்கட்டுரைகளில் முழுமையாகத் துலங்குகிறது. அவரது எழுத்துக்கள் தமிழகம் சார்ந்தவை. நமது செல்வங்கள் பற்றியவை. தமிழ் அறிவுப்புலத்திற்குப் பங்களிப்பவை. கானுயிர்களே உலகைக் காக்கும் என்னும் உணர்வு உறுதிப்படும் இந்நாளில் அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவு அனைவருக்கும் தேவை. பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு மா. கிருஷ்ணனின் எழுத்துக்கள் நெருக்கமானவை.
சாதிக்கும் தமக்குமான உறவு பற்றி முப்பத்திரண்டு பேர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. சாதி சார்ந்த சொந்த அனுபவங்கள் இதுவரை இத்தனை வெளிப்படையாகப் பொதுவெளியில் பேசப் பட்டதில்லை. சாதி ஆதிக்கத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் பதிவாகியுள்ளன. குற்றச்சாட்டுகளைப் போலவே, சாதி மனோபாவம் கொண்டிருந்த காரணத்தாலும் அதற்குத் துணைபோன காரணத்தாலும் உண்டான குற்றவுணர்ச்சிகளும் ஏக்கங்களும் வெளிப்பட்டிருக்கின்றன. சமாதானம் காணும் கட்டுரைகளும் நியாயம் கற்பிக்கும் கட்டுரைகளும் உள்ளன. கூச்சத்தால் அல்லது அச்சத்தால் தன்மையைப் படர்க்கையாக்கிப் பதுங்கிக்கொண்ட பதிவுகளும் உண்டு. ஒப்புதல் வாக்குமூலங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சுய வரலாற்றுத் தன்மை மிகுந்தவையும் உள்ளன. எழுதுவதற்குப் பூரண சுதந்திரம் கொடுத்தும் சாதி ஆதரவுக் குரல் எந்தக் கட்டுரையிலும் வெளிப்படவில்லை என்பது எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. எதிர்காலம் பற்றிய குறைந்தபட்ச நம்பிக்கையைத் தருகிறது.
ஒரு மணிவிழாக் காலத்துக்கும் மேலாகத் தமிழ்ப் பணியிலும் பல்லாண்டு காலமாக மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட்டிருக்கும் எம்.எஸ்.இன் தேர்ந்தெடுத்த தமிழாக்கங்களின் தொகுப்பு இந்நூல். நம்பகம், சரளம், தெளிவு இவையே இந்த மொழிபெயர்ப்புகளின் இயல்பு. தமிழில் மேற்கொள்ளப்படும் கணிசமான மொழியாக்கங்களில் பெரும்பாலும் காணக் கிடைக்காத இந்த இயல்புகளே எம்.எஸ்.இன் மொழிபெயர்ப்புகளை இலக்கியத் தரமானவையாகவும் வாசகருக்கு அணுக்கமானவையாகவும் நிலை நிறுத்துகின்றன. கூடவே மொழிபெயர்க்க அவர் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் வாசகருக்கும் மொழிக்கும் கொடையாகவும் அமைகின்றன.
எந்தப் பெருநகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிமிதமான உற்பத்தித் திறனையும், அதே சமயம் அதன் இயக்கத்தின் விளைவான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் கண்கூடாகக் காணலாம். முதலாளியத்திற்கு மாற்றாகக் கூட்டுறவு, சோசலிச -கம்யூனிஸ்ட் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இரு சாராருக்குமே முதலாளியத்தின் தோற்றம், அதன் தன்மை, இலக்கணம், நிறை குறை ஆகியவற்றை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைப் பூர்த்தி செய்ய முனைகிறது இந்நூல். ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ஐரோப்பாவில் முதலாளியம் பற்றிச் சிந்தித்த முக்கியச் சிந்தனையாளர்களின் கருத்துரைகளை வரலாற்றுப் பின்னணியோடு இந்நூல் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது. ‘ஒரு நகரமமும் ஒரு கிராமமும்’ என்ற நூலின் ஆசிரியரான பேராசிரியர் எஸ். நீலகண்டன் பொருளியல் ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பல்லாண்டுக் காலம் பணியாற்றிய அனுபவம் மிக்கவர்.