Your cart is empty.
வெயில் நீர்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ளடக்கியது. தொகுப்பில் உருப்பெறும் மையக் கதாபாத்திரங்கள் பொ. கருணாகரமூர்த்தியின் மென்மையும் அங்கதமுமான எழுத்தில் தனித்தன்மை கொண்டோராகின்றனர். அவர்கள் தோற்றத்திலும் குணநலன்களிலும் மாறுபட்டவர்கள். அரசியல் - சமூக ஒழுங்குகளிலிருந்து தனிமைப்பட்டும் முரண்பட்டும் விலகியவர்கள்.
காசி, ஜெனிபர், நீலக்கண்களைக் கொண்ட பாலசிங்கம் என்று கதைகளில் திரண்டு நிற்கும் கதாபாத்திரங்களை உயிரோட்டமாக்குவது இந்தத் தனித்தன்மையான குணநலன்களும் மாறுபாடுகளும்தான். வெகுஜனப் போக்குகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் ஒழுங்குகளுக்கும் அதிர்ச்சியை அளிக்கின்றவர்களாக எழுத்தில் அக்கதாபாத்திரங்கள் உருப்பெறுகின்றனர். வெவ்வேறு நிலப்பகுதிகளைக் கண்டடைந்து புனைவுமொழியில் அமரத்துவமான சாத்தியங்களை உருவாக்கிக் காண்பிக்கிறார் பொ. கருணாகரமூர்த்தி.
தனித்துவமான மனிதர்களின் வாழ்வில் அரசியல் பண்பாட்டு விழுமியங்கள் நிகழ்த்தும் அழுத்தங்களும் அதிலிருந்து துண்டுபட்டு விடுபடும் தருணங்களும் எனச் சிலநேர ஆசுவாசங்களைக் கையளிக்கிறது பொ.க.வின் கதை உலகம். இக்கதைகள் கொடுப்புக்குள் நகைப்பை உண்டாக்கினாலும் அவை தரும் அதிர்வுகள் எளிதில் வெளிவரமுடியாத உணர்வைத் தருகின்றன.