Your cart is empty.
பாரதி கவிஞனும் காப்புரிமையும்
‘வையகத்தீர், புதுமை காணீர்’ என்று பாடினான் பாரதி. 12 மார்ச் 1949இல் தமிழகச் சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார், பாரதி படைப்புகளின் பதிப்புரிமை அரசுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்தபொழுது உண்மையிலேயே வையகம் அதுவரை காணாததொரு புதுமையைக் கண்டது. ஓர் எழுத்தாளனின் பதிப்புரிமையை அரசாங்கமே வாங்கி அதை மக்களின் பொதுவுடைமை ஆக்கியதை உலகம் அதுவரை கண்டதில்லை. பாரதி கனவு கண்டது போலவே ‘மண்ணெண்ணெய் தீப்பெட்டிகளைக் காட்டிலும் அதிக ஸாதாரணமாகவும், அதிக விரைவாகவும்’ அவனுடைய நூல்கள் தமிழ் மக்களிடையே பரவியதற்கு அடிப்படையாக அமைந்த பாரதி படைப்புகளினுடைய பதிப்புரிமை நாட்டுடைமையான வரலாறு இதுவரை முழுமையாக எழுதப்படவில்லை. இந்நிலையில், இதுவரை பயன் கொள்ளப்படாத பல முதன்மை ஆதாரங்களின் -(முக்கியமாக அரசு ஆவணங்கள்) -அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாரதி இயலுக்குச் சீரியதொரு பங்களிப்பாக அமையும் இந்நூல், தமிழ்ச் சூழலில் எழுத்தாளரின் காப்புரிமை பற்றி அண்மைக் காலங்களில் ஏற்பட்டுவரும் புதிய விழிப்புக்கும் ஊட்டம் தரும்.
ஆ.இரா. வேங்கடாசலபதி
ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகுந்த பிரதியாகக் ‘கனவு’ இருக்க, தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை மைல்கல்லாக விளங்குகிறது ‘சின்னச் சங்கரன் கதை’. பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு கிளாசிக் வரிசைக்கு இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார்.











