Your cart is empty.
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 - 2016)
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | சிறுகதைகள் | சிறுகதைகள் முழுத்தொகுப்பு |
தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையொன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது. அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர். அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.
ISBN : 9789352440146
SIZE : 15.6 X 8.6 X 23.3 cm
WEIGHT : 2229.0 grams