Your cart is empty.
கசாக்கின் இதிகாசம்
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் … மேலும்
வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | விருதுபெற்ற எழுத்தாளர் | இந்திய கிளாசிக் நாவல் | நவீன இந்திய கிளாசிக் நாவல் |
நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின் இதிகாசம்’. மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்தான். மலையாள நவீனப் புனைவிலக்கியத்தில் ‘கசாக்கின் இதிகாசம்’ மூன்று நிலைகளில் முன்னோடி இடத்தை வகிக்கிறது. ஒன்று: அதுவரை பின்பற்றி வந்த நாவல் வடிவத்தை முற்றிலும் மாற்றியது. பன்மைக் குரல்கள் வெளிப்படும் கதையாடலை முன்வைத்தது. தொன்மங்களும் நாட்டார் கதைகளும் உளவியல் துணைப்பிரதிகளும் கொண்ட பரந்ததும் ஆழமானதுமான கதையாடலை அறிமுகம் செய்தது. இரண்டு: படைப்பு மொழியை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ஆரம்பகால நாவலாசிரியரான சி.வி. ராமன்பிள்ளைக்கும் மறுமலர்ச்சிக் கால எழுத்துக் கலைஞரான வைக்கம் முகம்மது பஷீருக்கும் பிறகு இந்த நாவல் வாயிலாக ஓ.வி. விஜயனே படைப்பு மொழியைத் தனித்துவப்படுத்தினார்; புதிய தளங்களுக்குக் கொண்டு சென்றார். மூன்று: எதார்த்தத்தின் மீது மாயங்கள் நிறைந்த கதைத்தளத்தை இந்த நாவலே உருவாக்கியது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாய எதார்த்தவாதம் அறிமுகமான அதே கால அளவில் அந்தப் போக்குக்குச் சமாந்தரமான ஒன்று ‘கசாக்கின் இதிகாசம்’ மூலமாகவே வெளிப்பட்டது. இந்திய மொழி நாவல்களிலேயே ஓர் அற்புதம் என்று சிறப்பிக்கப்படும் ‘கசாக்கின் இதிகாசம்’ முதன்முதலாகத் தமிழில் வெளிவருகிறது. நவீன கவிதையிலும் நாவலிலும் தனது வலுவான பங்களிப்பைச் செய்திருக்கும் யூமா வாசுகியின் மொழியாக்கம் நாவலை ஒளிகுன்றாமல் உயிர்ப்புடன் முன்வைக்கிறது.
ஓ.வி. விஜயன்
ஓ.வி. விஜயன் (1930 - 2005) எழுத்தாளர், பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட், அரசியல் சிந்தனையாளர் என்று அறியப்படும் ஓவ்வுப் புலாக்கல் வேலுக்குட்டி விஜயன் பாலக்காடு மாவட்டம் விளையன் சாத்தனூரில் பிறந்தார். மலபார் போலீசில் பணியாற்றிய தந்தையின் இடமாற்றங்கள் காரணமாக வெவ்வேறு பள்ளிகளில் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.ஏவும் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் பயின்றார். கும்பகோணத்தில் கல்லூரி ஆசிரியராகக் குறுகிய காலம் பணியாற்றினார். தில்லி சென்று சங்கர்ஸ் வீக்லி யில் கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து பேட்ரியாட், ஸ்டேட்ஸ்மென் இதழ்களில் பங்கேற்றார். கசாக்கின் இதிகாசம் நீங்கலாக ஐந்து நாவல்களையும் (தர்மபுராணம், குரு சாகரம், மதுரம் காயதி, பிரவாசன்டெ வழி, தலமுறகள்) ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். நீண்ட கால தில்லி வாழ்க்கைக்குப் பிறகு கோட்டயத்துக்கு இடம்மாறி வந்தார். இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பார்க்கின்ஸன் நோய்ப் பாதிப்புக்குள்ளாகி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். விஜயனின் இறுதிக் காலம் ஹைதராபாத்தில் கழிந்தது. அங்கேயே, 2005 மார்ச் 30 அன்று மறைந்தார். மனைவி தெரெசா. மறைந்துவிட்டார். ஒரே மகன் மது அமெரிக்காவில் வசிக்கிறார். கேரள சாகித்திய அக்காதெமி, மத்திய சாகித்திய அக்காதெமி, கேரள அரசின் உயர்ந்த இலக்கிய விருதான எழுத்தச்சன் விருது உட்படப் பல விருதுகள் பெற்றார். 2003ஆம் ஆண்டு இந்திய அரசின் பத்மபூஷண் விருது ஓ.வி. விஜயனுக்கு வழங்கப்பட்டது.
ISBN : 9789384641160
SIZE : 14.0 X 1.3 X 21.4 cm
WEIGHT : 290.0 grams
சக்கரவர்த்தி பாரதி
27 Apr 2024
பின்நவீனத்துவ இதிகாசம்
“அந்தி யாத்திரைகளின் தந்தையே, விடைகொடுங்கள். வெள்ளெருக்கின் இலைகள் சேர்த்துத் தைத்த இந்த மறுபிறவியின் கூடுவிட்டு நான் மீண்டும் பயணிக்கிறேன்.”
— ஓ.வி. விஜயன், ‘கசாக்கின் இதிகாசம்’
தமிழில்: யூமா வாசுகி
சக்கரவர்த்தி பாரதி
சுருக்கம்: செய்த தவறொன்றின் குற்றவுணர்விலிருந்து தன் மனதை விடுவித்துக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஒருவன், ஒரு புதிய நிலத்திற்கு சென்று சேருகிறான். அந்த நிலத்தில், அவன் சந்திக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை ஒருவித மெல்லிய துயரத்தன்மையுடனும் புன்முறுவல் செய்யும்படியாகவும் பிணைத்து, நாவலின் வடிவில் இயற்றப்பட்ட ஒரு பின்நவீனத்துவ இதிகாசம்தான் ஓ.வி. விஜயனின் ஒப்பற்ற படைப்பான “கசாக்கின் இதிகாசம்”. நாவலின் கதையானது 1950 அல்லது 1960–களின் காலகட்டத்தில் நடைபெறுகிறது. இந்நாவல் 1969ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானது. இந்நாவலை முழுமையாக எழுதி முடிக்க ஓ.வி. விஜயனுக்குப் பதிமூன்று வருடங்கள் பிடித்ததாகச் சொல்கிறார்கள்.
விரிவு: ஒருவர் மட்டுமே பணிபுரியும் ஓராசிரியப் பள்ளியில் பணியாற்றும் பொருட்டு பாலக்காடு ஜில்லாவின் கூமன்காவுக்கு அடுத்துள்ள கசாக்குக்குச் செல்கிறான் ரவி. அந்த கசாக்கு மண்ணில் வாழும் பல பிரிவுகளை உள்ளடக்கிய, ஆனால் ஒரே நிலத்தில் கூட்டாக வாழும் எளிய மக்களின் கதை இது. இந்நாவல் முழுவதும் பல கதைமாந்தர்கள் இருந்தாலும், மையப் பாத்திரமான ரவி உட்பட ஒவ்வொரு கதைமாந்தருக்கும் ஒரு தனித்துவமிக்க கதை சொல்லப்பட்டுள்ளதால் எல்லோரும் நம் மனத்திரையை நிறைக்கிறார்கள்.
புதிதாக உருவாகவிருக்கும் ஓராசிரியப் பள்ளியால், எங்கே தான் நடத்தும் மதரசாவிற்கு வரும் பிள்ளைகள் அங்குப் போய் விடுவார்களோ என்று கருதி, பள்ளி திறக்கப்படுவதில் உடன்பாடில்லாத அல்லாப்பிச்சை மொல்லாக்கா.
அவரிடம் அனாதையாக வந்து சேர்ந்து, அவருக்குக் கட்டுப்பட்டு நில்லாமல் வெளிசென்று வேலைத்தேடி தொழிலாளர் போராட்டங்களில் ஈடுபட்டு திடீர் காலியாராக மாறிய, ஓர் ஆசிரியர் பள்ளியை ஆதரிக்கும் நைஜாண்மலி.
கூமன்காவில் கேலன் நடத்தும் பள்ளிக்கு எதிராக வீம்புக்கென்றே கசாக்கிலும் ஒரு பள்ளியை ஏற்படுத்தவேண்டுமென்று சொந்தமாக வைத்திருக்கும் நாற்றுப்புழையைப் பள்ளியாக்கும் சிவசங்கரன் நாயர்.
உண்மையாகவே கசாக்கின் பிள்ளைகள் கல்வி கற்று உயர வேண்டுமென்று கருதிப் பாடுபட்டு, தன் சொந்தக் காசில் பிள்ளைகளுக்குச் சட்டைகளை தைத்துப் போட்டு பிள்ளைகளை அந்த ஓர் அசிரியப்பள்ளிக்கு அழைத்து வரும், ரவிக்கு எப்போதும் பேச்சுத் துணையாக இருக்கும் தையற்காரர் மாதவன் நாயர்.
கசாக்கின் அழகியும், மொல்லக்காவின் மகளும், ஐம்பது வயதைக் கடந்த முங்ஙாங்கோழிக்கு கட்டித் தரப்பட்டவளுமான, கையில் நீண்ட நீல நரம்பொன்று துருத்திக் கொண்டு தெரியும் படியாக, உடல் வனப்புடன் உலா வரும், ஒரே காலத்தில் இரண்டு நபர்களுடன் கலவி கொள்ளும் மைமூனா.
கசாக்கின் தொன்மக் கதைகளை வகுப்பறையில் ரவிக்கு எடுத்துச் சொல்லும் அனைவருக்கும் பிடித்தமான சிறுமி குங்ஙாமினா.
எந்நேரமும் குளத்தங்கரைகளில் தும்பிகளை பிடித்துத் திரியும் இருபது வயதானவனும், கைகால்களது வளர்ச்சியும் மூளையின் வளர்ச்சியும் நின்று போனவனும், மாதவன் நாயர் முதற்கொண்டு அனைவராலும் அன்போடு ‘எந் தத்தயே’ என்று அழைக்கப்படும் அப்புக்கிளி.
மொல்லாக்காவின் துணைவியாரான தித்திபி, டீக்கடை அலியார், சாமியாடிக் குறி சொல்லும் நல்லம்மனின் பூசாரியான குட்டாடன், இன்னும் இன்னும் பல பாத்திரங்களும் அந்த பாத்திரங்களுக்கே உரிய கதைகளும் எனக் கிராமத்து மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களின் பொக்கிஷத் தொகுப்பாகவே கசாக்கின் இதிகாசம் எழுதப்பட்டிருக்கிறது.
கதை நுட்பங்களும் சிறப்பம்சமும்
‘கசாக்கின் இதிகாசம்’ கதைசொல்லும் முறையில் யதார்த்த நடையையும், தொன்மங்களை இணைத்தும், இதிகாசம் சார்ந்த உவமைகளை உள்ளடக்கியும், நனவோடை உத்தியைக் கொண்டும், ‘மாய யதார்த்தம்’ என்னும் நுட்பத்திற்கு நெருக்கமாகவும் உள்ளது. ஓவி கையாண்டிருக்கும் நுட்பத்தை ‘மாய யதார்த்தம்’ என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால், பல இடங்களில் மாயத்தன்மை என்பது யதார்த்தப் போக்குடன் கலந்து அதையும் யதார்த்தம் போன்று தோன்றச் செய்யாமல் மாயம் அல்லது அமானுஷ்யத்தன்மை என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. ஆங்காங்கே நனவோடை உத்தியைக் கையாண்டிருந்தாலும், குழப்பங்களுக்கு இடமளிக்காமல் நன்கு புரியும்படியாகவே கதையை நகர்த்திச் செல்கிறார் ஓவி. நாவல் முழுவதும் தொன்மம் சார்ந்த கதைகள் ஒவ்வொன்றாக விரிந்து, வானுயர்ந்து நம்மையும் அதனுள் விழுங்கிவிடுகின்றன. தொன்மம் அல்லது நாட்டார் கதைகளைச் சொல்வதற்குப் பின்நவீனத்துவ நுட்பங்களில் ஒன்றான ‘கதைக்குள் கதை’ கையாளப்பட்டிருக்கிறது. கதை சொல்லும் முறைமையாலும் இந்த நுட்பங்களைச் சரியாகக் கையாளும் தன்மையாலும் எளிதில் பிரதிக்குள் இழுக்கப்பட்டு, கசாக்குக்காரர்களின் நிலத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக நாமும் ஆகிவிடுகிறோம்.
இந்நாவலின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், ‘இதுதான் கதை’ என்று உங்களால் ஒன்றைத் தனியாகப் பிரித்தெடுக்கவே முடியாது. ஒன்றை நீங்கள் பிரித்தெடுக்க முயன்றால், மற்றொரு கதைமாந்தரின் கதையை நீங்கள் நிராகரிப்பதுபோல ஆகிவிடும். ரவி என்பவன் சரடு மட்டுமே. அவனைக் கொண்டு பலவண்ணப் பூக்களைக் கட்டி, அதை நேர்த்தியான மாலையாக்கியிருக்கிறார் ஓ.வி. விஜயன். அந்த மாலையின் அழகும் நறுமணமும் குன்றாமல் தமிழுக்கு அதை அளித்திருக்கிறார் கவிஞர் யூமா வாசுகி.
முடிபு: மலையாளிகள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். அவர்களிடம் உள்ள பிற இலக்கியப் பிரதிகள் அனைத்தும் காணாமல்போனாலும், ‘கசாக்கின் இதிகாசம்’ எனும் ஒற்றைப் பிரதி, அவர்களது நிலத்தையும், அதன் மக்களையும் என்றென்றைக்கும் அமரத்துவமாக வைத்திருக்கும். இன்னும் சொல்வதானால், தென்னிந்தியர்கள் அனைவருமே பெருமை கொள்ளும்படியான, சிறந்த உலகக் கிளாசிக்குகளுக்கு இணையாக நிற்கும் நாவல்.
நன்றி: முகநூல் பதிவு (https://www.facebook.com/story.php?story_fbid=7523522897733857&id=100002286654324&mibextid=WC7FNe&rdid=XFPVdFjZe9DdpY1x)
*
நீங்கள் விரும்பும் புத்தகங்கள்
மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்
-கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல்.
சு.ரா.வின் புனைவுலகம் அ மேலும்