நகுலன் அய்யாவின் கதைகளே கவிதை போல் தான் இருக்கும். திருமணம் முடிக்காமலே வாழ்வை முடித்த நகுலன் அய்யாவின் கதைகளில் தத்துவ தரிசனம் கொடிகட்டிப் பறக்கும். கவிதை என்றால் கேட்கவும் வேண்டுமா? நிச்சயமாக சில வரிகளை உற்றுணர்ந்து பொருள்கொள்ள மெனக்கெட வேண்டும். அத்தகைய மொழிவீச்சு நகுலன் அய்யாவின் மொழிவீச்சு. அதேபோல் பல கவிதைகள் உள்ளதை உள்ளடி திறந்து வைத்திருக்கும்
"எனக்கு என்னிடமிருந்து எப்படித் தப்புவது எனத் தெரியவில்லை" எனச்சொல்லும் நகுலர்
"வெற்றிலையும்
விரிமுலையும்
விரிகின்ற
செம்மலரும்
என்னைச்
சொல்லாமல் சொல்லி
கொல்லாமல் கொல்லும்" என்று சிலேடையும் பாடுகிறார்
"நான் என்னைப் பார்த்துக் கொண்டிருந்து வாழ விரும்பவில்லை" என்ற வரிகளை நகுலன் அவரின் தனிமை வாழ்வை எண்ணித்தான் எழுதியிருப்பாரோ என்று தோன்றுகிறது. எவ்வளவு பெரிய சாதனையாளராக இருந்தாலும், கைப்பற்றும் வாய்ப்பு இருந்தும் கைப்பற்றாமல் போன காலத்தை எண்ணி என்றேனும் வலிகொள்ளத்தான் செய்வார்கள். நகுலருக்கும் அது வாய்த்திருக்கலாம்! அல்லது அவர் இதை ஒரு பொருட்டாக நினைக்காமலே எழுதியிருக்கலாம். ஏனென்றால் நகுலன் அய்யாவின் மனநிலையை எல்லா மனிதர்களாலும் தங்கள் மனநிலையோடு பொருத்திக் கொள்ள முடியாது
"இருப்பதற்கென்று தான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்" இந்த நகுலர் வாக்கை ஆணவம் தலைதூக்கும் போதெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்
"தனியாக இருக்கத் தெரியாத- இயலாத ஒருவனும் எழுத்தாளனாக இருக்க முடியாது" என்று ஒரு கவிதையில் சொல்கிறார். அதில் உண்மையும் இருப்பது உண்மை!
நகுலன் அய்யாவின் தேர்ந்தெடுத்த கவிதைகளுக்கு நிகராக இந்த நூலில் அவரின் கவிதைகள் சார்ந்து சுகுமாரன் அவர்களும் யுவன் சந்திரசேகர் அவர்களும் பேசியிருப்பது அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக நகுலன் குறித்த நல்ல புரிதலை ஏற்படுத்தும் உரையாடல் இது!
வாழ்வின் கொண்டாட்டச் சூழலில் இருந்தாலும், அந்தச் சூழலுக்குப் பின்னுள்ள வெறுமையை நிலையாமையை நகுலன் பேசித்தள்ளியிருக்கிறார். அவரிடம் நேர்வாழ்வுக்கு நேர் நிற்கும் எதிர்வாழ்வு குறித்த சிந்தனை நிறையவே இருந்திருக்கின்றன போலும். சுகுமாரன் அவர்கள் கூற்றுப்படி சொல்லவேண்டுமானால்,
"நகுலனின் உலகத்தை வேறோருவர் உருவாக்க முடியமெனத் தோன்றவில்லை"
உண்மை தான்

சிறப்பான அனுபவத்தைத் தந்த கவிதை நூல்