Your cart is empty.
இரண்டு விரல் தட்டச்சு
அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல். நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப் பற்று மிளிரும் கரிசனத்தையும் இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. நினைவிலிருந்தும் தொல்கதைகளிலிருந்தும் நிகழ் வாழ்வின் அவதானிப்பிலிருந்தும் உருவான இந்தக் கதைகள் அசோகமித்திரனின்புதிய படைப்பு நோக்கை முன்வைக்கின்றன. அவரது எழுத்துக்களின் ஆதார குணங்களான மிகையின்மை, நேர் மொழிக் கதையாடல், சக மனிதப் பரிவு ஆகியவை காணக் கிடைக்கும் இந்தப் புதிய கதைகளில் அவற்றுக்கு இணையாகவே அமைதியின் ரீங்காரத்தையும் உணர முடிகிறது. சொல்லாமல் விடப்பட்ட வார்த்தைகளில் தென்படும் பக்குவமான அமைதி.
அசோகமித்திரன்
அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.