Your cart is empty.
சாதியை அழித்தொழித்தல்
அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’ -அருந்ததி ராய் முன்னுரையிலிருந்து
அம்பேத்கரைக் கற்பது பெரும்பான்மை இந்தியர்கள் நம்ப பயிற்றுவிக்கப்பட்டதற்கும் நமது அன்றாட மெய்யனுபவங்களுக்கும் உள்ள இடைவெளியை இணைக்கிறது.’ -அருந்ததி ராய் முன்னுரையிலிருந்து
பெண் குரல் தனித்துவமாக ஒலிக்க ஆரம்பித்த காலகட்டத்தைத் தொடங்கிவைத்த கதைகள் இவை. அம்பையின் முதல் தொகுப்பு ‘சிறகுகள் முறியு’மிலிருந்து மாறுபட்ட மொழியையும் வடிவத்தின் மீது கறாரான அபிப்ராயங்களையும் வெளிப்படுத்தும் இந்த நவீனத்துவக் கதைகளில் ஆவேசமும் சீற்றமும் அமைதியும் கலந்துகிடக்கின்றன. தி. ஜானகிராமன், ஜெயகாந்தன் ஆகியோரது படைப்புகளில் பெண்களுக்கிடையிலான உரையாடல்கள், அவர்களது மன உலகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அம்பையின் வருகைக்குப் பின்பே அவை மேலும் துலக்கமும் கூர்மையும் பெறுகின்றன. தன் எதிர்கால கதையுலகத்தின் முக்கியமான கூற்றைச் சொல்லும் ‘வெளிப்பாடு’ கதையோடு, அடிக்குறிப்புகளையும் ஒன்றுக்கும் மேற்பட்ட சாளரங்களையும் கொண்ட ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ போன்ற புகழ்பெற்ற கதைவரை இத்தொகுப்பில் உள்ளன. அம்பையின் கதைகளில் அவ்வளவாக கவனிக்கப்படாத, இயற்கைக் காட்சியைக் கித்தானில் தீட்டிய ஓவியம்போலத் தொடங்கி, கவித்துவச் சோகத்தைக் கொண்டிருக்கும் ‘மஞ்சள் மீன்’ உள்பட சிறியதும் பெரியதுமான பதி்னொரு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது. இத்தொகுப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பிரசுரம் பெற்றுள்ளது.
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு உலகத்தின் இன்னொரு பரிமாணம் இது.
கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது. கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய்யவும் பயிற்சி வேண்டும். பயில்வதெனில் கவிதைக்கூறுகளை அறிய வேண்டும்; அக்கூறுகள் இயைந்து நின்று கவிதையாவதை இனங்காண வேண்டும்; உண்மைக் கவிதையைப் போலியிலிருந்து பிரித்தறிய வேண்டும். கோட்பாட்டு மேற்கோள்களால் அச்சுறுத்தாமல், இவ்வாறெல்லாம் பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகையனும் கைப்பிடித்து அழைத்துச்சென்று கவிதை நயம் காட்டுகிறார்கள். - பா. மதிவாணன் கவிதை மிகப் பழைய இலக்கிய வடிவம்; காலந்தோறும் மெருகேறி வருவது; எதனையும் பொருளாகக் கொள்வது; வகைவகையாக அமைவது; சொற்களால் உருப்பெறுவது; கவிஞனின் தனித்திறனையும் கோருவது; வெளிப்படையாகவோ உள்ளார்ந்த நிலையிலோ ஓசை நயம் உடையது. கவிதையை இயல்பாகச் சுவைக்கலாம். ஆனால் அதன் நுட்பத்தைக் காணவும் திறனாய்வு செய்யவும் பயிற்சி வேண்டும். பயில்வதெனில் கவிதைக்கூறுகளை அறிய வேண்டும்; அக்கூறுகள் இயைந்து நின்று கவிதையாவதை இனங்காண வேண்டும்; உண்மைக் கவிதையைப் போலியிலிருந்து பிரித்தறிய வேண்டும். கோட்பாட்டு மேற்கோள்களால் அச்சுறுத்தாமல், இவ்வாறெல்லாம் பேராசிரியர் கைலாசபதியும் கவிஞர் முருகையனும் கைப்பிடித்து அழைத்துச்சென்று கவிதை நயம் காட்டுகிறார்கள். - பா. மதிவாணன்
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் தமிழரின் உருவ வழிபாடு, பரிணாமம் அடைந்ததாகக் கூறும் இந்நூலின் ஆசிரியர், கந்துவை அரூபம் என்றும் கந்திற்பாவையை அரு உருவம் என்றும் பாவையை முழு உருவம் என்றும் நெடும்பாவையை விஸ்வரூபச் சிற்பம் என்றும் வகைப்படுத்துகிறார். இவற்றை வலுவானச் சான்றுகளுடன் எளிதாக விளக்கும் இந்த ஆய்வு இன்றைய வாசிப்பிற்கானது.
இன்று பரபரப்பான துணை நகரமாகத் திகழும் பாளையங்கோட்டை நகரம் ‘ஸ்ரீ வல்லப மங்கலம்’ என்ற ஓர் எளிய கிராமமாக உருவாகி பின்வந்த காலங்களில் கோட்டை கொத்தளங்களுடன் வளர்ச்சிபெற்று, தமிழகத்தின் தென்பகுதியைக் கைப்பற்ற நிகழ்ந்த படையெடுப்புகளில் இடம்பிடித்த வரலாற்றைச் சொல்லும் அறிமுக நூல் இது. பண்டைய காலம், இடைக்காலம், ஆங்கிலேயர்காலம் என்ற மூன்று காலகட்டங்களிலும் இடரீதியாகவும் சமூக கலாச்சார ரீதியாகவும் பெற்ற மாற்றங்களைக் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், அறியத்தருகிறது. வருங்கால ஆய்வாளர்களுக்கு இந்நகரம் பற்றிய ஆய்வுக்கான தொடக்கப்புள்ளியாக இச்சிறு நூலைக் கொள்ளலாம்.
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வரூபச் சிற்பங்களைக் குறித்த கட்டடவியல் சார்ந்த ஆய்வு நூல் இது. மீண்டும் மீண்டும் களஆய்வுகள் பல மேற்கொண்டு ஆதாரங்களை உறுதிசெய்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கோயில்களின் அமைப்பை விஸ்தாரமாய் விளக்கும் இந்நூலில் கட்டடக்கலை தவிர வரலாற்று, இலக்கியச் செய்திகளும் கொட்டிக்கிடக்கின்றன. தரமிக்க மொழிநடை இந்நூலின் இன்னொரு சிறப்பு.
தமிழ்மொழி பன்னெடுங்காலமாகத் தனது பழைய தடத்திலேயே பயணித்து வந்தது. அது நவீனமயமாவதற்கு தமிழக சமூகக் கட்டமைப்பில் இடமில்லாத நிலையில் அதை சாத்தியப்படுத்தியவர்கள் ஐரோப்பியர்கள். ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவ இறைநெறிப் பரப்புநர்கள் ஆய்வுக்காகவும் மதப் பிரச்சாரத்திற்காகவும் தொழில்நுட்ப அடிப்படையில் தமிழை நவீனப்படுத்தி பயன்படுத்தினர். அச்சு இயந்திரங்களின் அறிமுகத்தால் எல்லா நிலைகளிலுமுள்ள மக்களுக்கும் நூல்கள் கிடைக்கப்பெற்று, எல்லோரும் கல்விபெற வழியமைத்தனர். இது தமிழியல் வரலாற்றின் திருப்புமுனை; மாபெரும் புரட்சி. அந்த முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையின் அடிப்படைச் சுவடுகளை சுபாஷிணியின் ஆய்வு முதன்மைத் தரவுகளுடன் முன்வைக்கின்றது.
மகாகவி பாரதி பற்றிக் கால் நூற்றாண்டு இடைவெளியில் க. கைலாசபதி எழுதிய இக்கட்டுரைகளில் அவரது சீரான பார்வைப் பரிணாமத்தைக் காண முடிகிறது.தமிழ்ப் புலமை, இதழியல், அரசியல், சமூகச் சீர்திருத்தம், ஆன்மிகம் எனப் பன்முகத் துறைகளிலும் தம் தனி முத்திரை பதித்தவர்; கவிஞராக மேலாங்கி மிளிர்ந்தவர் பாரதி.பாரதியை உருவாக்கியதில் அவரது தனித்திறனுக்கு இடமில்லாமலில்லை. ஆனாலும் முந்திய தமிழிலக்கியங்களில் புலமை, வேத உபநிடதங்கள் தொட்டுத் தொடரும் பன்மொழி இந்திய இலக்கிய அறிவு, மேலை – ஜப்பானிய இலக்கியத் திளைப்பு, உலகளாவிய அரசியல் சமூக நிகழ்வுகள், சிந்தனைப் போக்குகளில் ஈடுபாடு முதலிய அனைத்தின் செல்வாக்கும் பாரதியை உருவாக்கியிருக்கின்றன.பாரதி என்னும் பேராளுமையைத் துலக்கிக் காட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. சற்றேனும் பாரதியை ஒத்த புலமையும் கவிதை உணர்வுநலனும் கொண்டோர்க்கே அது இயலும். அத்தகைய ஆய்வாளுமை கைலாசபதியிடம் இருந்த்தை இந்நூல் காட்டுகிறது.‘பாரதி இயல்’ என்னும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களில் ஆராய்தல், பதிப்பித்தல் முதலியவற்றுக்கும் வழிகாட்டியிருக்கிறார் கைலாசபதி.
‘1911 ஜூன் 17. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் மணியாச்சி மெயில் நின்றுகொண்டிருந்தது’ என்னும் வாக்கியத்துடன் ஆரம்பமாகும் நூல் அதன்பின் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு திரைப்படம் நம் முன் ஓடுவதுபோல் கண்முன் கொண்டுவருகிறது. ஆஷின் கொலை, வாஞ்சியின் தற்கொலை, ஆஷ் துரையின் பின்னணி, தொடர்ந்து நிகழும் போலீஸ் வேட்டைகள், இந்தியப் புரட்சி இயக்கத்தின் பின்னணி, இப்பின்னணிக்கும் ஆஷ் கொலைக்கும் இருந்த உறவுகள் ஆகியவற்றைப் படிப்படியாக விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர். இவ்விவரிப்பு, பெரும் நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி, மிகச் சிறிய நிகழ்வுகளைச் சார்ந்தும் சரி அசைக்க முடியாத சரித்திர ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு இங்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. சரித்திரச் சான்றுகளைச் சார்ந்த புனர்நிர்மாணம் என்ற அறிவுலக ஒழுக்கத்திற்கு இது ஒரு அபூர்வமான உதாரணம். முன் னெண்ணங்களிலிருந்து முற்றாகப் பெற்ற விடுதலையும் விஞ்ஞானரீதியான ஆராய்ச்சியில் அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்ட உதாரணம்.
உலகக் கலைப் பாரம்பரியத்தில் சிறப்புப் பரிமாணம் பெற்றவை சோழர் காலச் செப்புச்சிலைகள். பன்னாட்டளவில் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள் எல்லாவற்றிலும் இவை ஓரிரண்டாவது காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நூல் திருவெண்காட்டிலுள்ள
சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்திலிருந்த செப்புப் படிமங்களைக் குவிமையமாக வைத்துப் பேசுவதுடன், மற்ற இடங்களிலுள்ள கலையழகு மிக்க செப்புப் படைப்புகளையும் கவனிக்கின்றது. இந்த திருமேனிகளை உருவாக்கும் முறை, ஆலய மரபொழுக்கத்தில் அவற்றின் இடம், உருவ நியதிகள் போன்றவற்றைப் பற்றியும் இந்நூல் விவரிக்கின்றது. சோழ மன்னர்கள் வென்ற போர்கள், எழுப்பிய ஆலயங்கள், கொடுத்த நல்கைகள் ஆகியவற்றின் பின்புலத்தில் செப்புப் படிமங்களின் தோற்றம் பற்றி இந்நூல் ஆராய்கின்றது.
கலை வரலாற்றில் அடிக்கடி எழுப்பப்படும் "சோழர்களுக்குப் பின்னர் இந்தச் சிலைகள் என்னவாயின?” என்ற கேள்வியையும் இந்நூல் எதிர்கொள்கின்றது. தென்னிந்திய வரலாற்றுப் பின்னணியில் இந்தப் புதிருக்கு விடை தேடும் நூலாசிரியர் அவை அழிக்கப்படவில்லை, வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்கிறார். அதே மூச்சில் அண்மையில் அகமதாபாதிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட இரு செப்புச்சிலைகளின் அடையாளத்தைப் பற்றி அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகின்றார்.
தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவரோவியங்களும், ஆவணக் களரிகளில் மறைந்துகிடக்கும் சித்திரங்களும் பெயர் பெற்ற அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களும் இந்நூலின் பேசுபொருளாகின்றன. வரலாற்றின் பின்புலத்தில் இக்கலைப்படைப்புகள் விவரிக்கப்படுகின்றன. சில ஆலயங்களை அலங்கரித்திருந்த ஆனால் புனரமைப்பின் பெயரால் அழிக்கப்பட்டு விட்ட அரிய ஓவியங்களின் வண்ணப் படங்கள் இதில் இடம்பெறுகின்றன. பல்லாண்டு கால ஆழ்ந்த ஆராய்ச்சி, புகைப்படங்கள், கோட்டோவியங்கள் இந்நூலின் சிறப்பு.