Your cart is empty.
ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி: மண்ணும் மக்களும் (1674-1815)
-
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் மேலும்
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான மேலும்
பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித் மேலும்
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந் மேலும்
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, கு மேலும்
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதின மேலும்
1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன மேலும்
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும்
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும்
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிராசையாய் முடிந்தது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தபிறகு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஃபிரான்சின் பயணத்தின் நோக்கமும் திசையும் அணுகுமுறையும் மாறியது. அதற்கேற்ப, மக்களின் மனங்களை வென்று அரவணைத்துக் கொள்வதன் மூலம் காலனியை நிரந்தரமாக்கிக்கொள்ளும் முயற்சிகள் தொடங்கின. ஒருபுறம் மக்களையும் நிர்வாகத்தில் பங்கேற்கச் செய்வது, மற்றொருபுறம் கலாச்சாரப் பிணைப்புகளை வலுப்படுத்துவது என்ற இரு வழிகளில் பல்வேறு முயற்சிகளை அரசு முன்னெடுத்தது. ஆனால் எதிலும் முழுமையடையாத இந்த அணுகுமுறை, இரட்டைக்கிளவியாய் அமைந்துவிட்டதால் ஃபிரான்சின் நோக்கம் நிறைவேறாமல் போனது.
அந்தக் காலகட்டத்தில், புதுச்சேரியிலிருந்து அடிமைகளாக அயலகம் ஏற்றுமதியான அடித்தட்டுமக்கள், தொடக்கக் காலங்களில் பட்ட துயரங்களையும், அதற்கு நேர்மாறாக ஃபிரஞ்சு இராணுவப் போர்வீரர்களாகச் சென்றோர் பெற்ற ஏற்றங்களையும் சொந்த மண்ணில் உள்ளூர்க் குடிமக்கள், தங்களின் வாழ்வுரிமைக்கும் வாக்குரிமைக்கும் நடத்திய போராட்டங்களையும், பெருந்தொற்றாய் வந்து தாக்கிய வைசூரியையும் பெருமழையாய், பஞ்சமாய்த் தாக்கிய பேரிடர்களையும் எதிர்கொள்ள முடியாமல் பாமர மக்கள் பட்ட துன்பங்களையும், வழிவழியாய் வந்த வழக்காறுகள் நாகரிக வளர்ச்சியின் தாக்கத்தால் மங்கியும் மடிந்தும் போனதையும், ஆண்டவர்கள் அகன்றாலும் இன்றும் காண்குறும் அவர்தம் வரலாற்று வடுக்களையும் பற்றிய பின்னணித் தகவல்களின் திரட்டே இந்நூல்."
த. சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொல்காப்பியத்தோடு ஓப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவர். இந்நூலில் அறபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் - கிதாப்பையும் (கி.பி. 800), தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொல்காப்பியத்தையும் (கி.மு. 300 - 500) ஒலியியல் நோக்கில் ஒப்பிடுகிறார். காலம்,
இடம், மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விரு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை, அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார். அவ்வொற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அறபுக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார். தமிழுக்கும் அறபுக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து, இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
மொழியியலார் வரையறுத்துள்ள கிரேக்கம், இலத்தீன், ஹீப்ரூ, அறபு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள், சமஸ்கிருத இலக்கண மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின், பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பிட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை 'தொல்காப்பியமும் அல்-கிதாப்பும்' என்னும் இந்நூலுக்கு உண்டு.
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப்பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும்செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது, எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது, இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒலித்த குரல்கள் எவை, பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் எவ்வாறு இத்திட்டம் கைவிடப்பட்டது என்பதை எல்லாம் ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில், விறுவிறுப்பான நடையில் இந்நூல் ஆராய்கிறது. குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான கிளர்ச்சியின் பின்புலத்தை விளக்கிப் பதிப்பாசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார். நவீன தமிழகத்தின் சமூக-அரசியல் வரலாற்றைப் புரிந்துகொள்ள விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
பிச்சமூர்த்திக்கு வயது ஏற ஏற ஞானம் கூடிற்று. கலையார்வம் மிகுந்தது. மரபு சார்ந்த மயக்கங்கள் தெறித்தன. லட்சிய வானிலிருந்து அவர் நிதர்சனப் புழுதிக்கு வந்து சேர்ந்தார். அவருக்குத் தார்மீகக் கோபம் சுர்ரென்று ஏறிற்று. கடைசியாக எழுதியிருக்கும் கவிதையில், ‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ என்று எழுதினார். ‘மயில் இறகு போடாது / நவபாரதம் பிறக்க / தூக்கு மரம் தேவை’ என்று எழுதினார். போகிற போக்கைப் பார்த்தால் நக்சலைட்டுகளுக்கும் அவருக்குமான இடைவெளி மிகக் குறைந்துவிடும் என்று கூடத்தோன்றிற்று.
சுந்தர ராமசாமி
முன்னுரையில்
ஒரு தேர்ந்த விமரிசகனுக்குரிய உயர்ந்த மனோதர்மத்துடனும் தர்க்கத் தெளிவுடனும் சுந்தர ராமசாமி இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டுரைகள் நெடுகிலும் அவரது கூர்மையான கிண்டல்கள் இழையோடுகின்றன. அவரது நவீன தமிழ் நடையழகு மனதைத் தொடுகிறது. ந.பி.யை இவ்வளவு துல்லியமாக யாரும் மதிப்பிட்டதில்லை என்ற உணர்வு புஸ்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படுகிறது.
உணர்வும் அறிவும் வெகு அற்புதமாக இக்கட்டுரைகளில் லயப்பட்டிருக்கின்றன. இந்த லயத்தைச் சொற்களால் விவரிக்க முடியாது. அனுபவத்தால்தான் உணர முடியும். தன் அழகுணர்ச்சியையும் சிந்தனையையும் தூண்டிய எரிய வைக்கும் பகுதிகள் ஏராளம். விமரிசனம் என்பதே ஒரு விதமான வறட்டுத்தனம் கொண்டதுதான். இந்த வறட்டுத்தனத்தை அருகில்கூட வரவிடாமல், மிகுந்த கலை நயத்தோடு புஸ்தகத்தை எழுதியிருக்கிறார் சு.ரா.
‘உரைநடையின் தன்மைகளைத் தக்கவைத்துக்கொண்டு’ நவீன கவிதையைக் கட்டியெழுப்பிய முன்னோடிக் கவிஞர் சுந்தர ராமசாமி. அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே கவிதைகளும் படிக்குந்தோறும் புதிய அனுபவங்களைக் கிளர்த்துபவை. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட வியப்புணர்வைத் தன்னுள் கொண்டிருக்கும் சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை புதுமையும் சூட்சுமமும் செறிவும் கூடியது. அதனை உள்வாங்கிக் கொள்ளும் எத்தனிப்பில் அவரது கவிதைகளினூடாக மேற்கொண்ட ஒரு வாசிப்பனுபவத்தின் எளிமையான வெளிப்பாடே இந்த நூல்.
இந்திய, தமிழகப் பண்பாட்டு அரசியலில் விவாதிக்கப்பட்டு வரும் இராமர் பாலம், சரஸ்வதி ஆறு, துவாரகை, குமரிக்கண்டம் போன்ற கருதுகோள்களை, மதச் சார்பும் இனவாதமும் மொழிப்பற்றும் ஏற்படுத்தியுள்ள மூடுதிரைகளை விலக்கி ஒரு நிலவியலாளரின் கண்ணோட்டத்தில் துறை சார்ந்த ஆதாரங்களுடன் வரலாற்றுப் பின்னணியில் ஆராய்கின்றன இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள். ஆக்கபூர்வமான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தி போலி ஆய்வுகளை இவை இனங்காட்டுகின்றன. சு.கி. ஜெயகரன் தனது பரந்த கள அனுபவங்களின் செறிவுமிக்க அறிவுடனும் பண்பாட்டு அக்கறையுடனும் இவற்றை அணுகுகிறார்.
பொருள் கோர்வை கருதி ஆசிரியரின் ‘தளும்பல்’, ‘இரு கிளிகள் இரு வழிகள்’ ஆகிய தொகுதிகளிலுள்ள சில கட்டுரைகளும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
வீரபாண்டியக் கட்டபொம்மனைச் சிலர் பழி தூற்றி, உண்மையை மறைத்துத் தங்களுக்கு ஏற்பத் திரித்து எழுதினர். இந்நிலையில் அத்தகைய கருத்துகளுக்கு ஆணித்தரமாகப் பதிலளிப்போர் இல்லாமல் போயினர். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சான்றுகளைத் தேடித் துருவி உண்மைகளை உலகுக்கு எடுத்துரைக்கிறார் நண்பர் வே. மாணிக்கம்.
தே. லூர்து
வரலாறு எழுதுவதற்குப் பழைய ஆவணங்களைப் படிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. மொழியறிவும் நாட்டார் வழக்காற்றியல் போன்ற துறைகளில் பயிற்சியும் இன்றியமையாதவை. இவற்றைப் பெற்றதனாலும், கட்டபொம்மன்மீது மிக்க காதலார்வம் கொண்டதாலுமே வே. மாணிக்கம் அவர்களால் பல்லாண்டுகளாக இதே துறையில் ஈடுபட்டு முக்கியப் பங்களிப்புகளைச் செய்து வர முடிந்துள்ளது. முதல் சுதந்திரப் போராட்டம் என்ற கருத்தாக்கத்திற்குள் சிக்கிக் கொண்ட கட்டபொம்மன் வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியவர் வே. மாணிக்கம்.
ஆ. இரா. வேங்கடாசலபதி
இது போன்ற தெளிந்த நோக்கும், செவ்விய ஆய்வும் கொண்ட பல நூல்கள், பல துறைகளில் தமிழ்நாட்டுக்குத் தேவை.
சி.சு. மணி
1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன்பே ‘திராவிட மொழிக் குடும்பம்’ என்ற கருத்தாக்கத்தை முன்மொழிந்தவர் எல்லிஸ் என்பதை விரிவாக எடுத்துரைக்கும் நூல் இது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, திருவள்ளுவர் படம் பொறித்த நாணயங்களை வெளியிட்ட அரசு அதிகாரி என்ற அளவிலேயே பரவலாக அறியப்படும் எல்லிஸின் பரந்த மொழியியல் ஆய்வுச் சாதனைகளை இந்நூல் ஆழமாக ஆராய்கிறது. பிரிட்டிஷ் காலனிய ஆவணங்களில் புதைந்துகிடக்கும் செய்திகளைத் திரட்டியுள்ளதோடு, ஏறத்தாழ இரு நூற்றாண்டுகளாக எவருமே பார்த்திராத எல்லிஸின் கையெழுத்துப்படிகளையும் கண்டெடுத்து இந்நூலை எழுதியிருக்கிறார் பேராசிரியர் தாமஸ் டிரவுட்மன். கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நூலின் தமிழ் வடிவம் இது. 2007இல் வெளிவந்து நல்வரவேற்பைப் பெற்ற நூலின் திருத்தி, விரிவாக்கிய இரண்டாம் பதிப்பு இது.
பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் சமூகவியல் நூல் இது. சமூகவியல் துறையின் தோற்றத்தையும், சமூக மாற்றப் போக்கைக் கருதாத ‘தூய’ சமூகவியலின் போதாமைகளையும் விளக்கி, இலக்கியத்தின் சமூகவியலை இந்நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் தனித்திறமையால் மட்டுமே இலக்கியம் உருவாவது இல்லை; காலம் சார்ந்தும், படைப்பாளியின் வர்க்கச் சார்பு, பயில்வோர் நிலை, விநியோகப் பொருளாதாரம் முதலியவற்றோடும் நெருங்கிய தொடர்புடையது. இவற்றைத் தமிழ் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு புலப்படுத்துகிறார் கைலாசபதி. தன்னுணர்ச்சிப் பாடல் என்கிற வகையாகட்டும் இலக்கியத் திறனாய்வு என்கிற பிரிவாகட்டும் அவற்றின் பின்னாலும் சமூகமே செயல்படுவதைக் கைலாசபதி வலியுறுத்துகிறார். இசை என்னும் தூய கலையும்கூட சமூகத்தைச் சார்ந்ததுதான் என்றும் நிறுவுகிறார். மொத்தத்தில் சமூகத்தை விட்டு விலகிய இலக்கியம் ஏதுமில்லை. விலகி நிற்பதாகச் சொல்வதற்கும் சமூகமே காரணம். இலக்கியத்தைப் பயிலும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.
காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன. அரசியல், வணிகம், வாழ்வியல், சமயம், சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன. இந்த நூல் 18ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு, சமூக அமைப்பு, ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது. மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள், தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள், கடைவீதிகள், ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள், ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு, பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது. பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார். கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன. இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும்பினியாரின் சத்திர நீதிமன்றக் காவல்துறையில் ‘இரண்டாவது நயினார்’ என்ற பொறுப்பான பதவி வகித்த வீராநாய்க்கர் எழுதிய நாட்குறிப்பு - சரித்திரமாக அக்காலத்து வாழ்வுமுறைகளையும் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம், வங்காளம் ஆகியவற்றிற்கிடையே நிலவிவந்த உறவு, பகை, பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர் இவர்களிடம் கொண்டிருந்த உறவையும் பகையையும் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐதர் அலி ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, பிரெஞ்சுப் புரட்சிக்கு விளக்கம், புதுவை மக்களின் எழுச்சி, தென்னிந்திய வரலாறு தமிழ் வரலாற்றின் இணைப்பு, ஐரோப்பிய வரலாற்றின் பாதிப்பு பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியது ‘இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு’.