Your cart is empty.
பாரம்பரியமான கவியரங்குகள் மலினப்பட்டுப் போன சூழலில் அதற்கு ஒரு மாற்றாகவும் ஒரு பரிசோதனை முயற்சியாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கவிதா நிகழ்வை நான் அறிமுகப்படுத்தினேன். ‘அரசியல் கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ என்ற தலைப்பில் முதலாவது கவிதா நிகழ்வு 1981இல் சுமார் முப்பதுபேர் கொண்ட ஒரு சபையில் அரங்கேறியது. எனது நண்பார்கள் என். சண்முகலிங்கம் மௌனகுரு சேரன் ஆதவன் முதலியோர் நிகழ்வில் பங்கேற்றனர். என் வேண்டுகோளுக்கு இணங்க அரசியல் கவிதைகள் பற்றி கைலாசபதி ஓர் அறிமுக உரையாற்றினார். ஒற்றைக் குரலில் அன்றி பல்குரலில் கூட்டாகவும் தனியாகவும் சற்று நாடக பாணியில் கவிதைகளை அவைக்கு ஆற்றிய அந்நிகழ்ச்சி மிகுந்த தாக்க வலு உடையதாக அமைந்தது. அதைத் தொடர்ந்து ‘பாரதி கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ ‘பலஸ்தீனக் கவிதைகள் - ஒரு கவிதா நிகழ்வு’ ஆகிய இரு நிகழ்வுகளை நான் தயாரித்து அரங்கேற்றினேன். இவற்றில் நான் முன்குறிப்பிட்டவர்களோடு வேறு சில மாணவர்களும் பங்கேற்றனர். இம் மூன்று நிகழ்வுகளினதும் வெற்றி கவிதா நிகழ்வு ஒரு புதிய கலாசார இயக்கமாக பல்வேறு இயக்கங்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதில் இசை போன்ற பல புதிய ஜனரஞ்சகமான அம்சங்களையும் அவர்கள் சேர்த்தனர். பல்வேறு கவிதா நிகழ்வுகள் அரங்கேறின. அவ்வகையில் உருவான மிகப் பிரபலமான வடக்கில் கிராமங்கள் தோறும் அறுபது தடவைகளுக்குமேல் அரங்கேற்றப்பட்ட ‘எங்கள் மண்ணும் இந்தநாட்களும்’ என்ற கவிதா நிகழ்வின் எழுத்துப் பிரதி சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது அச்சுருவில் வெளிவருகின்றது. மிகக் கரிசனையுடன் இப்பிரதியைத் தேடி எடுத்து அருமையான விரிவான ஒரு முன்னுரையுடன் நண்பர் பா. அகிலன் இதைப் பதிப்பித்துள்ளார். கவிதாநிகழ்வு என்றால் என்ன என்பதை அறியாத பலருக்கும் அதுபற்றி இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது. கவிதையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு ஒரு சிறந்த சாதனமாகக் கவிதா நிகழ்வைப் பயன்படுத்துவதற்கும் இந்நூல் ஆதர்சமாக அமையும் என்று நம்புகின்றேன். எம். ஏ. நுஃமான்
ISBN : 9789389820393
SIZE : 14.0 X 0.5 X 21.4 cm
WEIGHT : 94.0 grams