Your cart is empty.
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
சைதன்யரின் வருகையோடு சமூகச் சலனங்கள் உருவான பதினைந்தாம் நூற்றாண்டின் வங்காளத்தில் பழங்குடிச்சமூகத்தில் பிறந்த ஒருவன் கவி வந்த்யகட்டி என்று பெயர்சூட்டிக்கொண்டு காவியம் படைக்கிறான், தனது சாதியை அறிவிக்காமல். அறிவை உயர்குடியின் ஏக உரிமையாக கருதிக்கொண்டிருக்கும் அரசனும் அவனுக்கு நெருக்கமானவர்களும் அவனை உயர்குடியைச் சேர்ந்தவன் என்று எண்ணி அங்கீகாரமும் அரசகவி என்ற பதவியும் வழங்குகிறார்கள். அவனது சாதி தெரியவரும்போது அவனைக் கொலைக்களத்துக்குத் தள்ளுகிறார்கள். அவன் பிறந்த சமூகமோ அவனது தனித்துவம் புரியாமல், சாதித்தலைமை ஏற்றுக்கொள்ள வற்புறுத்துகிறது; அவன் மறுக்கவும் அவனைக் கைவிட்டுச்செல்கிறது. பிராமணப் பெண்ணோடான அவனது காதலும் சாதி காரணமாக முறிகிறது. படைப்புணர்வின் உந்துதலுக்கும் மனிதத்துவம் உறைந்துபோன யதார்த்தத்துக்குமிடையில் சிக்குண்டு இறுதியில் மரணத்தைத் தழுவும் ஒரு கவியாளுமையின் வாழ்வை உள்ளோடும் சமூக விமர்சனத்துடன் நாட்டார் கதையாடலாக படைத்திருக்கிறார் மகாசுவேதா தேவி.
மகாசுவேதா தேவி
விஸ்வபாரதியிலும் கொல்கொத்தா சர்வகலா சாலையிலும் படிப்பு. ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. விருது. 1964 முதல் கொல்கொத்தா கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளர் பணி. நாவல், சிறுகதை, குழந்தை இலக்கியம் என நூற்றும் மேற்பட்ட நூற்கள். கொல்கத்தா சர்வகலாசாலையின் லீலா விருது, அம்ருதா விருது சரஸ்வதிசந்திர நினைவு மெடல், சாகித்திய அகாதெமி விருது, பாரதிய ஞானபீட பரிசு போன்றவற்றைப் பெற்றிருக்கிறார். கணவர், நாடக ஆசிரியரும் நடிகருமான ஸிஜன் பாட்டாச்சாரியா. ஒரே மகன் நபரூண் பட்டாச்சாரியா, நாடக ஆசிரியர், நடிகர், இயக்குநர்.