Your cart is empty.
கலாபன் கதை
கலாபன் எனும் மனிதனின் பதினோராண்டுக் கால வாழ்வு இந்நாவல். குடும்பச் சூழலோடு தொடங்கி கரையில் கடலின் ஏக்கத்திலும் கடலில் கரையின் ஏக்கத்திலும் தொடரும் பயணம், கடலோடிகளுக்கு வரம் அருளும் முகவர்கள், கொண்டாட்டமும் ஏக்கமும் நிறை கடல் வாழ்வு, மரணபயத்தை உண்டாக்கும் கடல் நோய்மைகள், தீராததும் கட்டறுந்ததுமான காமம், உறவுகளின் முகம் பார்ப்பதன் காத்திருப்பு, நாளையின் எதிர்பார்ப்புகள், நிலங்களும் காலநிலைகளும் அறிமுகப்படுத்தும் பல்வேறு மனிதர்கள் என கலாபனின் வாழ்வுபற்றி உள்ளார்ந்த மடிப்புகளுடன் விரிவுகொள்கிறது நாவல். கடல் அள்ளியும் கொடுக்கிறது; பரிதவிக்கவும் விடுகிறது. மனித வாழ்வைப் பரிகசிக்கிறது. பெரும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் உருவாக்குகிறது. நெருக்கமானவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறது; பின் அதுவே இரக்கங்கொண்டு சேர்த்தும் வைக்கிறது. மீண்டும் சன்னதம் கொண்டு தாயங்களை உருட்டி விளையாடிப் பகடி செய்கிறது. கப்பல், மனிதர்கள், கடல் பிரதேசங்கள், காலநிலைகள் தரும் குளிர்ச்சி, வறண்ட காற்று, மாறும் நிலம், போக்குவரத்தின் நுட்பங்கள் போன்றனவோடு புனைவின் உத்திகளும் நிறைந்த சீரான மொழியைக் கைப்பற்றியிருக்கிறார் தேவகாந்தன். நாவலின் சில அத்தியாயங்கள் சிறுகதைகளாக வாசிக்கப்படக்கூடிய செறிவையும் கொண்டிருக்கின்றன.
தேவகாந்தன்
தேவகாந்தன் (பி. 1947) இலங்கையின் வடமாகாணம் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், தனது பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பை டிறிபேக் கல்லூரியில் முடித்ததும் 1968இல் இணைந்து பணியாற்றிய இடம் ஈழநாடு தேசிய நாளிதழின் ஆசிரியர் குழு. 1974வரை அந்நிறுவனத்தில் கடமையாற்றிய பின் இலங்கை யுத்த நிலைமை காரணமாகத் தமிழ்நாட்டுக்குப் புலம்பெயர்தல் 1984இல் நிகழ்கிறது. இடையிட்ட சில ஆண்டுகளைத் தவிர 2003இல் இலங்கைக்குத் திரும்பும்வரை தமிழ்நாட்டில் தங்கியிருந்த நீண்டகாலத்தில் இலக்கு சிற்றிதழை நடத்தியதோடு ‘கனவுச்சிறை’ மகாநாவல் உட்பட ஐந்து நாவல்கள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிடுதல் சாத்தியப்பட்டது. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை நாவல் பரிசு (1998), திருப்பூர் தமிழ்ச் சங்கம் (1996), லில்லி தேவசிகாமணி (1996), தமிழர் தகவல் (2013) உட்பட பல்வேறு இலக்கியப் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவரது படைப்புகளுள் வாசக, விமர்சன கவனம் மிகவும் பெற்றவையாக ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ ஆகிய நாவல்களைச் சொல்ல முடியும். மனைவி இரண்டு மகள்களுடன் தற்பொழுது கனடா ரொறன்ரோவில் வசித்துவருகிறார்.