Your cart is empty.
அம்பை கதைகள் -1970-2024
அம்பை 1970முதல் 2024வரை எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு
2 தொகுதிகள்
107 கதைகள், 3 நாடகங்கள்
6 முன்னுரைகள் (தன்னுடைய தொகுப்புகளுக்கு அம்பை எழுதியவை)
To get 15.00% discount on All books 2025 Spend ₹1,000.00 more from All books 2025
அம்பை 1970முதல் 2024வரை எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு
2 தொகுதிகள்
107 கதைகள், 3 நாடகங்கள்
6 முன்னுரைகள் (தன்னுடைய தொகுப்புகளுக்கு அம்பை எழுதியவை)
ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.
ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் இந்தத் தன்வரலாறு விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துதல், ஏவுகணைத் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்ற வரலாற்றை விறுவிறுப்பாகவும் எளிமையாக வும் கூறுகிறது.
இந்தப் புதிய பதிப்பில் கூடுதலாக ஐந்து இயல்கள் உள்ளன. அவை ‘அக்னிச் சிறகுகள்’ நூலின் முந்தைய பதிப்பு முடிவடைந்த தருணத்திலிருந்து டாக்டர் கலாம் மறைந்தது வரையிலான (1991-2015) காலகட்டத்தின் நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. கலாமுக்கு நெருங்கிய துணையாக இருந்த, ‘அக்னிச் சிறகுகள்’ நூலின் இணையாசிரியரான அருண் திவாரி தரும் பதிவுகள் இவை. தேசத்திற்கான கடமைகளில் உச்ச சாதனையைத் தொட்ட பிறகும் மகத்தான இந்தியாவுக்கான பெரும் கனவுகளுடன் வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிந்த நிகழ்வுகளை இந்தப் புதிய பக்கங்கள் உயிரோட்டத் துடன் விவரிக்கின்றன.
-செக்கோஸ்லோவேகிய பிரெஞ்சு நாவலாசிரியர் மிலன் குந்தேராவின் உலகப் புகழ்பெற்ற கிளாசிக் நாவலான வாழ்வின் தாள முடியா மென்மை கொந்தளிப்பானதொரு அரசியல் சூழலில் காதல், அடையாளம், தேர்வுக்கான சுதந்திரம் ஆகியவற்றின் சிக்கல்களை ஆராய்கிறது.
1968இல் செக்கோஸ்லோவேகியாமீதான சோவியத் படையெடுப்பின் பின்னணியில் அமைந்த இந்த நாவல், நேர்க்கோட்டில் அமையாத ஏழு பகுதிகளாகக் கொண்டது.
வாழ்க்கையின் பொருளைக் கண்டறிய இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் மேற்கொள்ளும் போராட்டத்தை இந்நாவல் பின்தொடர்கிறது. வாழ்க்கை குறித்த மாறுபட்ட தத்துவ அணுகுமுறைகளை இவர்கள் வழியே குந்தேரா ஆராய்கிறார். நீட்சே போன்றோரின் தத்துவப் பார்வைகளை விசாரணைக்கு உட்படுத்துகிறார். மனித இருப்பின் தெளிவின்மையையும் முரண்பாடுகளையும் இந்நாவல் அலசுகிறது.
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது.
யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக் கவிதையும் பளிச்சிடும் நேர்த்தியான வடிவமைப்பு - -& அழகிய எழுத்துரு & ஓவியர் மருதுவின் கோடுகளில் உயிர்க்கும் பாரதி ஓவியம் சிலிர்க்கும் அட்டை - காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த பதிப்பு.
குற்றங்கள், வறுமை, அழுக்கு, வசதியின்மை என எதிர்மறை பிம்பங்களால் அடையாளப்படுத்தப்படும் வடசென்னையின் அசல் முகத்தைக் காட்டுகிறார் ஷாலின் மரிய லாரன்ஸ். வடசென்னையின் அசல் முகம், உழைப்பு, போராட்டம், உணவு, வியாபாரம், கலாரசனை, கொண்டாட்டம், நட்பு, சமூக உறவுகள் எனப் பன்முகத்தன்மை கொண்டது. வன்முறையும் வறுமையும் அதன் இயல்புகள் அல்ல; ஆளும் வர்க்கத்தினரின் பாரபட்சத்தின் விளைவுகள் என்பதையும், சென்னையின் ஆதாரமான இயல்புகள் பலவும் வடசென்னையில் வேர்கொண்டவை என்பதையும் இந்த நூல் நமக்கு உணர்த்துகிறது. வடசென்னையின் அலட்டிக்கொள்ளாத கொண்டாட்ட இயல்பு ஷாலினின் சரளமான மொழியில் பிரதிபலித்து வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது.
பிளாஸ்டிக் மாசுபாடு என்பது உலகளாவிய பிரச்சினை. பிளாஸ்டிக் பொருட்கள் பற்றிய புரிதலும் விழிப்புணர்வும்தான் இம்மாசுபாட்டைக் குறைக்க நாம் எடுக்கக்கூடிய முதல் படி. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, சுற்றுச்சூழலில் இதன் தாக்கம், இம்மாசுபாட்டால் உண்டாகும் சமூக, பொருளாதார, சுகாதார விளைவுகள், தீர்வுகள் ஆகியவற்றை அறிவியல்பூர்வமாக இந்த நூல் எடுத்துரைக்கிறது.
நம்முடைய அன்றாடப் பழக்கவழக்கங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் இம்மாசுபாட்டைக் குறைக்க முடியும் என இந்நூல் வலியுறுத்துகிறது. அதற்கான வழிகளையும் முன்வைக்கிறது.
பொதுமக்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் இம்மாசுபாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
இந்நூல், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த சர்வதேச ஆய்வறிக்கைகள், பிளாஸ்டிக் தொடர்பான நூல்கள், ஐபிசிசி, ஐநா நிறுவனங்களின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான மொழியில் தொகுக்கப்பட்டுள்ளது.
பொறியியல், உள்கட்டமைப்பு, உலக அரசியல் குறித்த கட்டுரைகளை எழுதிவரும் மு. இராமனாதன், தேர்ந்த இலக்கிய வாசகரும்கூட. உரைகளாகவும் கட்டுரைகளாகவும் வெளிப்படும் அவருடைய வாசிப்பனுவத்தின் பதிவு இந்த நூல்.
கூர்மையான வாசிப்புத்திறன் கொண்ட இராமனாதன் பிரதியிலுள்ள நுட்பங்களையும் பல்வேறு அடுக்குகளையும் துல்லியமாக உணர்த்துகிறார். பிரதியின் சாரத்தையும் அது தரும் உணர்வுகளையும் தெளிவாகவும் ரசனையுடனும் பகிர்ந்துகொள்கிறார்.
இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் புதிய வாசல்களைத் திறக்கக்கூடியவை. மாலை நேரத்தில் தேநீர் அருந்தியபடி உரையாடும் பாங்கில் வாசகரோடு இவை பேசுகின்றன.
பல கட்டுரைகள் நல்ல சிறுகதையைப் படிக்கும் அனுபவத்தைத் தருகின்றன.
கவிஞர் ஜயபாஸ்கரனின் அடிப்படை வெளிப்பாட்டு முறை என்பது மிகச்சிறிய வரிகளில், எண்ணி எடுத்த சொற்களில் எவ்வளவு இறுக்கமாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு இறுக்கமாகச் சொல்லுதல். இந்த வெளிப்பாட்டு முறை வாசகருக்கு ஓர் அதீதக் கவன உன்னிப்பு நிலையை முன்கோரலாக வைக்கிறது. கவனக்குறைவான வாசகர் ஜயபாஸ்கரனின் கவிதைகளில் அற்புதக் கவித்துவத்தை இழந்துவிடுகிறார்.
புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின் மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகாசக் கதாபாத்திரங்களை நவீன வாழ்வின் கட்டமைப்பிற்குள் வைத்துப் பார்க்கும் அணுகுமுறையை இக்கதைகள் கொண்டிருக்கின்றன. ஊர்மிளை, அம்பை, யசோதை போன்ற பெண் கதாபாத்திரங்கள் நவீன சட்டகத்திற்குள் புதிய பிறவி எடுக்கிறார்கள். செவ்வியல் இலக்கியங்களில் புழங்கிவரும் பெண்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் இக்கதைகளில் வெளிப்படுகிறார்கள். தங்களைப் பற்றிப் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் பார்வைகளில் அழுத்தமான சலனங்களை ஏற்படுத்துகிறார்கள்.
தகவல் தொழில்நுட்ப உலகம் சார்ந்த கதைகளை அதிகம் எழுதியிருக்கும் லாவண்யா சுந்தரராஜன் இந்தக் கதைகளில் முற்றிலும் மாறுபட்ட பயணத்தை மேற்கொள்கிறார். தமிழ்ப் புனைவுப் பரப்பில் புதிய கதவுகளை இதன்மூலம் திறக்கிறார்.
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல்.
தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இது.
தமிழுக்குப் புதிய குரல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் முனைப்புடன் செயலாற்றிவரும் க. மாரியப்பன் இதைச் சிறந்த முறையில் தமிழில் தந்துள்ளார்.
படைப்புகளை நிலவியல் பின்னணியோடு நோக்கும் போக்கு தமிழில் பண்டைய காலந்தொட்டே இருந்துவருகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனச் சங்க அகப்பாடல்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு ஏற்ப அத்திணைப் பாடல்களுக்கான உட்பொருளும் (உரிப்பொருள்) அமைந்துள்ளன.
மேற்கண்ட புரிதலோடும் அவற்றின் நீட்சியாகவும் தற்காலத்தில் நகர்சார் பின்னணியில் எழுதப்பட்ட கவிதைகளை ‘நகரம்’ எனும் திணை அமைப்பிற்கு உட்படுத்தி அதற்கான உரிப்பொருளை வரையறுக்கும் முயற்சியாக இந்நூல் அமைகிறது.
நவீன கவிதைகளை மரபார்ந்த இலக்கண நோக்கில் அணுகும் இந்த முயற்சி சமகாலக் கவிதைகள்மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.
செல்லையா என்ற சிறுவனின் பதின் பருவத்துக் கிராம வாழ்க்கையை யதார்த்தமாகச் சொல்லும் நாவல் இது.
தமிழின் முன்னோடி எழுத்தாளரான கந்தசாமியின் கதைகூறும் முறை ஆரவாரமற்றது. முடிந்தவரையிலும் குறைவாகச் சொல்லும் பாணியைக் கொண்டது. சொல்லாமல் பல விஷயங்களை உணர்த்தும் சூட்சுமத்தைக் கொண்டது.
யதார்த்தவாத நாவல்களின் வகைமாதிரி என்று சொல்லத்தக்க நாவல் இது. உலகமயமாதலுக்கு முந்தைய காலகட்டத்தை யதார்த்தமாகவும் துல்லியமாகவும் சித்தரிக்கிறது.
கலாபூர்வமாகவும் வடிவ அளவிலும் காலத்தின் பதிவு என்ற முறையிலும் தன்னுடைய முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நாவல் இது.
வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன.
தொடிச்சியின் திருமண நாளில் கலவரம் தொடங்குகிறது. கல்யாணக் கோலாகலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் குலைக்கப்படுகின்றன. இதற்கான காரணமோ மிகமிகச் சிறிது. இந்தப் பகைமை கிராமத்து மக்களின் வாழ்வியலைக் கருவறுக்க முனைகிறது. மணப்பெண்ணாகும் நாளில் தன் கண்முன்னே நிகழ்ந்த கலவரங்களை எதிர்கொண்ட தொடிச்சி, பின்னர் படிப்படியாகக் கிராமத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியாகவும், நிலைமைகளைத் துணிவுடன் எதிர்கொள்ளும் பெண்ணாகவும் எழுகிறார்.
ஸ்ரீதரகணேசனின் இந்த நாவல், தலித்துகள் தம் வாழ்வை அமைதியாகவும் சுயமரியாதையோடும் நடத்திச்செல்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வகையின்றித் தவிக்க வேண்டியதன் காரணமென்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. ஆதிக்கச் சக்திகளின் விருப்பங்களுக்குட்பட்டுச் செயல்படாவிட்டால் மீட்சியில்லை என்கிற நிலையில் சிக்கிக்கொண்ட தலித் உடல்களின் இயக்கத்தை விவரிக்கிறது.
உ.வே. சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களின் பதிப்பாசிரியர் மட்டுமல்லர்; வரலாற்று ஆசிரியரும்கூட. அவர் எழுதிய தன்வரலாறும் சமகாலச் சான்றோர் பலரைப் பற்றிச் சிறியதும் பெரியதுமாக எழுதியுள்ள வாழ்க்கை வரலாறுகளும் மிக முக்கியமானவை.
உ.வே. சாமிநாதையரின் ஆசிரியராகிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பத்தொன்பதாம் நூற்றாண்டுக் குருகுலக் கல்விமுறையின் ஆசிரியவகை மாதிரியாகவும் புலமை மரபின் பேராளுமையாகவும் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றைப் பல்லாண்டு உழைப்பின் மூலம் உ.வே.சா. எழுதினார். உடனிருந்து சில ஆண்டுகள் பழகிய அனுபவங்கள், அவர் எழுதிய நூல்கள், சமகாலத்தவர் வழியாகப் பெற்ற ஆதாரப்பூர்வமான சம்பவங்கள், கடிதம் உள்ளிட்ட எழுத்துப்பூர்வ ஆவணச் சான்றுகள் முதலியவற்றைத் தொகுத்துத் தரவுகளாகக் கொண்டார். ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டும் தரவுகளைத் திரட்டினார். இவ்விதம் நவீன வரலாற்று எழுத்தியல் முறைகளைப் பின்பற்றி எழுதப்பட்ட முன்னோடி வாழ்க்கை வரலாற்று நூல் இது.
மனதின் அடுக்குகளையும் மறைந்திருக்கும் உணர்வுகளையும் இக்குறுங்கதைகளில் சுரேஷ்குமார இந்திரஜித் வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு கதைகளில் வரும் சூழலையும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளார். இக்கதைகள் வாழ்வின் சில தருணங்களின் மீது கவனம் குவிக்கின்றன. அவற்றினூடே வாழ்வின் விரிந்த பரப்பை நோக்கி வாசகரின் கவனத்தை ஈர்க்கின்றன.
புத்தரின் போதனையை மகாராஷ்டிர மக்களிடம் கொண்டுசெல்வதற்காகப் பெருமளவு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை, தர்மானந்த கோஸம்பியின் வாழ்க்கை (1876 -1947). இந்தத் தொண்டு, ஒரு பௌத்த அறிஞராக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் அவர் மேற்கொண்ட கல்விப்புலப் பணிகளோடு இயைந்து செயல்பட்டது. ஒரு சிந்தனையாளராக அவர் சமத்துவம், உலக அமைதி இவை சார்ந்த கருத்துக்களைத் தேசிய எல்லைகளைத் தாண்டியும் பரப்ப முயன்றார். சோஷலிச சித்தாந்தத்தைப் பௌத்த அறவியலோடு பொருத்தி, இவ்விரண்டையும் காந்தியத்தின் வாய்மை, அஹிம்சை இவற்றோடு இணைத்துக் கொண்டுசெல்ல முனைந்தார்.
பௌத்தத்தை உயிர்ப்பித்து அதை வாழும் சமயமாக ஆக்கிய பெருமை தர்மானந்தரையே சாரும். பௌத்தத்தின் போதனைகளையும் நடைமுறைகளையும் மீட்டுக் கொண்டுவந்ததோடு நில்லாமல், சமகாலத்தியச் சமூக, அரசியல் சித்தாந்தங்களோடு அதற்குள்ள பொருந்தப்பாட்டையும் நிறுவிக்காட்டினார். புதியதொரு ஒருங்கிணைந்த உலகப் பார்வையை உருவாக்கினார். இதை எதற்காக, எவ்வாறு உருவாக்கினார் என்பதைத்தான் இந்தத் தன் வரலாறு விவரிக்கிறது.
-‘அலியும் நினோவும்’ நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை. இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில் சோவியத் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அஜர்பைஜான் நாட்டின் வரலாற்றையும் இக்காதல் கதையுடன் இணைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் உலகப்
புகழ்பெற்ற இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது.
-உலகெங்கும் உருவாகியுள்ள புலம்பெயர் எழுத்துகளில் தாயக ஏக்கமும் தாய்நாட்டிற்குத் திரும்பும் தாகமும் எதிரொலிக்கின்றன.
பொ. கருணாகரமூர்த்தியின் கதைகள் இந்த ஏக்கத்தையும் தாகத்தையும் படைப்பூக்கத்தோடு பிரதிபலிக்கின்றன. ஜெர்மன் வாழ்க்கையில் தமிழரின் ஊடாட்டத்தை நுணுக்கமாகப் பதித்திருக்கும் கருணாகரமூர்த்தியின் எழுத்து தனித்துவம் கொண்டது. ஐரோப்பியப் புகலிட வாழ்வுபற்றிய விரிவான சித்தரிப்பை இவருடைய கதைகள் தருகின்றன.
இயல்பாகக் கதை சொல்லும் ஆற்றல் கொண்ட கருணாகரமூர்த்தி கதைகளை லாவகமாக வளர்த்துச்செல்கிறார். புதிய தளங்களை அறிமுகப்படுத்தும் இவருடைய கதைகள், புதிய அனுபவங்களைத் தருகின்றன. வாழ்வின் வலிகளும் போதையூட்டும் தருணங்களும் இவருடைய கதைகளில் வெளிப்படுகின்றன. பாலியல் சார்ந்த சிக்கல்களையும் இக்கதைகள் தீவிரமாகக் கையாள்கின்றன.