Your cart is empty.
தாகங்கொண்ட மீனொன்று - ரூமி
-
-தேவேந்திர பூபதியின் கவிதைகள் உடனடிச் சமன்பாடுகளின் வழி வாழ்வுபற்றிய அவதானங்களை முன்வைப்பவை. தேர்ந்த சொற்களால் உருவக மொழியில் எழுதப்பட்டவை. நவீன கவிதை தனக்கென்று உருவாக்கிவைத்திருக்கும் மொழியில் பேசுபவை. இடையிடையே மரபின் தொனியிலும் ஒலிப்பவை.
கருத்துகளைக் காட்சிகளாக உருமாற்றித் தரும் முனைப்பு அதிகரிக்கையில், கவிதானுபவத்தில் செறிவும் செழுமையும் கூடுகின்றன. கவிதைக்குள் தானாகச் சொற்சிக்கனம் சேருகிறது. இவை நிகழும்போது சிறந்த கவிதைகள் உருவாகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் அதற்கான சான்றுகள்.
யுவன் சந்திரசேகர்
-மிஸ்ராவின் கவிதைகள் வாழ்வின் துயரங்களிலிருந்து துளிர்த்தெழுந்து வாழ்தலின் இனிமையைக் கொண்டாட முயல்கின்றன.
வீழ்ச்சிகளிலிருந்து மறுபடி மறுபடி வலிய சிறகுகளோடு எழுகின்றன. வறட்சியின் அடியாழங்களில் கசியும் ஈரத்தைக் காட்டித் தருகின்றன.
பற்று, துறப்பு என்கிற இரு முரண்நிலைகளுக்கு இடையே முதிர்ந்த கவிபோல ஊடாடுகிறார் மிஸ்ரா. பெண்ணொருத்தியின் ஆத்மாவின் துடிப்பும் வேட்கையோடு சிறகடிக்கும் ஒரு பறவையின் துடிப்பும் இந்தத் தொகுதி முழுவதும் நம்மைத் தொந்தரவுசெய்கின்றது.
சீராக எழுந்து உச்சங்களில் நிலைகொள்கின்ற மிஸ்ராவின் கவிதைகள் நம்மை நிலைகுலைய வைக்கின்றன.
சமீபகாலமாக, மலையகத்திலிருந்து (இலங்கை) பெண்களின் குரல்கள், படைப்புகள் காத்திரமாக வெளிவரத் தொடங்கி யிருப்பது மகிழ்வோடு கவனிக்கத்தக்கதும் ஆரோக்கியமானது மாகும்.
-றஷ்மி
-தொண்ணூறுகளின் இறுதியிலும் புத்தாயிரத்தின் முதல் இரு பதிற்றாண்டுகளிலும் நவீன தமிழில் வலுவாக எழுந்த ‘பெண் கவிதை’யில் புதிய திசை வழியைக் காட்டும் தடப் பதிவு இந்தத் தொகுப்பு. பொன்முகலியின் இந்த மூன்றாவது தொகுப்பு அவரது அடையாளத்துக்கு வலிமையையும் பொலிவையும் சேர்க்கிறது.
இன்றைய தலைமுறை ‘பெண் கவிஞர்’களில் பொன்முகலி தன் இடத்தைத் தானே கண்டடைந்தவர். தனக்கே தனக்கான கவிமொழியை உருவாக்கிக்கொண்டவர். ஒழுக்கத்தின் பெயரால் சுமத்தப்பட்ட விதிகளைக் கேள்விக்குட்படுத்திப் பேசாப் பொருளில் பேசத் துணிந்தவர்.
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் காதலிலும் காமத்திலும் பெண் கொள்ளும் தற்களிப்பைப் பகிரங்கமாக விவரிக்கின்றன. பெண்ணுடல்மீது இதுவரையும் ஆண் கொண்டாடி வந்த திளைப்பை எள்ளி நகைக்கின்றன. பெண் சுயத்தின் ஆன்மாவைத் திறந்து காட்டுகின்றன.
-இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
இதில் உள்ள கவிதைகளைக் குடும்பக் கவிதைகள் என்று சொல்லலாம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் கவிதைகளில் வருகிறார்கள். ஆனால் இவற்றைக் குடும்பக் கவிதைகள் என்று அழைத்துப்பார்ப்பது இதனால் அல்ல. சஹானாவின் குடும்பம் சற்றே பெரிய, சமயங்களில் மிகப்பெரிய குடும்பமாக விரிகிறது. அதில் பூனையும் தெய்வமும் மழையும் மலையும் காற்றும் நிலவும் கடலும் அண்டமும் எனப் பலவும் நிரம்பி நிற்கின்றன. யாவற்றுக்குமிடையே நேயத்தின் பாடலை இசைக்க முயல்கிறார் கவிஞர்.
பல தளங்களில் இயங்குகிறது குவளைக்கண்ணனின் கவிதை. எளிமையும் செறிவும் ஒன்றாக இயங்குகின்றன. ஆச்சரியமும் அறிதலும் ஒருங்கே நிகழ்கின்றன. தற்கணத்தில் தன்னை இழந்துவிடும் சிறு குழந்தையின் இயல்பான தீவிரத்தன்மை வெளிப்படும் இக்கவிதைகளில் தீவிரமான ஒரு மனத்தின் இயல்பான கணங்களுடைய குழந்தைமையும் மிளிர்கின்றது. இரண்டு விதமான எளிமை உண்டு. ஒன்று குழந்தை மனத்தின் எளிமை. பிறகு அறிவு சேர்ந்து, எளிமை இழந்து தவித்து, அவஸ்தை கொண்டு அலைக்கழிந்து, பின் மனம் கடந்து மலரும் புதிய எளிமை. இரண்டும் ஒன்றல்ல. குழந்தையின் எளிமை தன்னிருப்பு அறியாதது. மனம் கடந்த எளிமை தன்னிருப்பின் ஊற்றுக்கண்ணில் தற்கணம் நிலைப்பது. இந்த இரண்டாவது எளிமையின் பார்வை அங்கங்கே வெளிச்சம் காட்டுவது குவளைக்கண்ணன் கவிதைகளின் சிறப்பு.
-ஆனந்த்
-‘கோழையின் பாடல்கள்’ (2016) நூலுக்கு முன் வெளியான ‘நிகழ் உறவு’ (1992), ‘கோமுகி நதிக்கரைக் கூழாங்கல்’ (2000), ‘நீர் மிதக்கும் கண்கள்’ (2005), ‘வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய்’ (2012) ஆகிய நான்கு நூல்களின் கவிதைகளும் சேர்ந்த ஒட்டுமொத்தத் தொகுப்பு இது. ‘சில ஆரம்பகாலக் கவிதைகள் சுயானுபவத்தை அப்படியே கவித்துவ மொழியில் பதிவாக்கி இருப்பவையாகவும் தற்காலக் கவிதைகள் பலவும் அனுபவத்தின் நிழல்களைத் தவறவிடாது அவற்றைப் ‘பொதுவாக்கி’ எழுதியிருப்பவையாகவும் தோன்றுகின்றன. இந்தப் பொதுவாக்கலில்தான் வெவ்வேறு விஷயங்கள் கவிதைக்குள் வந்துசேரும். இங்குதான் வாசகன் தன் கவிதையை வாசிக்கத் தொடங்குகிறான். அப்பட்டமான சுயத்தின் உணர்வுவயப்பட்ட பதிவாக இருக்கிற கவிதைகளைவிட அதை நுட்பமாகப் பொதுவாக்கியிருக்கிற கவிதைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன’ என்கிறார் கவிஞர் இசை.
-பிச்சமூர்த்தி வலியுறுத்தற வேதாந்தம் அல்லது அத்வைதம் அல்லது ஆன்மீகம் இந்திய மரபில் தொன்றுதொட்டு வர்ற ஒண்ணுன்னுதான் தோணுது. அந்த மரபில் காலங்காலமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களைத்தான், கருத்துக்களைத்தான் அவர் திரும்பச் சொல்கிறார். ஏற்கெனவே உள்ள பதில்களைத்தான் தன்னுடைய கண்ணாடியில் பிரதிபலிக்கச் செய்கிறார்.
சுகுமாரன்
நவீன இலக்கிய வடிவங்களிலயே, தமிழ்ல அதிகமாக் கையாளப்பட்டிருப்பது கவிதைதான்! ஆரம்ப வருடங்கள்லெ புதுக் கவிதைய ‘அகண்ட காவிரி’ ஆகிவிட்டதாக நம்பிய ந. பிச்சமூர்த்தி, இன்றைக்கு இருக்குற எண்ணிக்கையையும், நிலையையும் பார்த்தா அதிர்ந்தே போவார். ஆனாலும், இதன் மூலச் சுனைகளில் முதன்மையானவர் என்கிற பெருமையை ஒருபோதும் இழக்கமாட்டார்.
யுவன் சந்திரசேகர்
-அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி விவாதத் தளத்திற்குள் கொண்டுவரும் இயல்பைக் கொண்டவை B.R. மகாதேவனின் கவிதைகள். அழகிய காட்சிப் பதிவுகள், மனித உறவுகளின் நுட்பமான அடுக்குகள், விலங்குகளின் துயரங்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்நிலைகள், அரசியல் பிரச்சினைகள் முதலானவற்றை அழகியல் உணர்வுடன் கவிதைகளாக்கியிருக்கிறார் மகாதேவன். எளிதில் கடந்து போய்விட முடியாத இந்தக் கவிதைகள் வாசகருக்குப் புதிய அனுபவத்தையும் தரிசனத்தையும் தர வல்லவை.
-முகமும் பெயரும் அடையாளமும் அறியாமல் கங்காவின் கவிதைகளை முதலில் வாசித்தேன். சிங்கப்பூர் தங்க முனை விருதிற்குரிய போட்டியில் வாசிக்கக் கிட்டியவை கங்காவின் கவிதைகள்.
சொற்செட்டும் புதிய படிமங்களும் புலம்பெயர்ந்தாலும் புலத்திலிருந்து இடையறாமல் தவிக்கச் செய்கின்ற நுண்ணுணர்வும் மாறிமாறி நெய்கிற கவிதைகள் அவருடையவை. ஊரும் உறவும் நகர வாழ்வில் எத்தகைய மாற்றங்களை அற்புதமாகவும் அழகாகவும் ஆனால் வலி மிகுந்ததாகவும் மாற்றுகின்றன என்பதை ஆழமான, அழகான கவிக்குரலுடன் கங்கா எம்மிடம் கொண்டுவருகிறார். கவிதைகளில் ஒலியும் எதிரொலியும் ஒன்றாகப் பின்னி வருகின்ற புதுமை அவர் கவிதைகளில் நிகழ்கிறது.
-மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை.
உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கும் மனிதர்களின் கனவுகளும் காமமும் இவற்றில் வெளிப்படுகின்றன. அனுபவச் சிறப்பிலும் அருஞ்சொற்பிறப்பிலும் உருவான கவிதைகள் இவை.
தமிழுக்கும் தமிழ்க் கவிதைக்கும் ஆற்றலும் அறிவும் அழகும் புதுமையும் இக்கவிதைகள். தலைப்புச் சொல்வதுபோல ததும்புதலின் பெருங்கணங்கள் அல்ல இந்தக் கவிதைகள். அக்கணங்களையும் மீறித் தமிழுக்குப் புதுக்காற்றாய்த் ததும்புதலும் தயக்கமும் இல்லாமல் வருகிற கவிதைகள்.
கவிஞர் சேரன்
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக் கவிதையும் பளிச்சிடும் நேர்த்தியான வடிவமைப்பு - -& அழகிய எழுத்துரு & ஓவியர் மருதுவின் கோடுகளில் உயிர்க்கும் பாரதி ஓவியம் சிலிர்க்கும் அட்டை - காலத்தின் தேவைக்கேற்ப எழுந்த பதிப்பு.